Sunday, April 19, 2009

இலங்கை அரசின் 48 மணிநேர மோதல் தவிர்ப்பும் இந்திய அரசின் உரிமை கோரலும் -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-



தமிழ், சிங்களப் புத்தாண்டு காலத்தில் இலங்கை அரசினால் அறவிக்கப்பட்ட 48 மணிநேர மோதல் தவிர்ப்பு, நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகம் மீதான தாக்குதல் இவை இரண்டும் இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் அரசியல் விவகாரங்களிலும் முக்கியத்துவம் பெற்றுக் காணப்பட்டன.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள யுத்த சூன்ய பிரதேசத்தில் வாழும் மக்கள் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையிலும் அந்த மக்கள் அங்கிருந்து சுயமாக வெளியேற புலிகள் அனுமதிக்கவும் புலிகளும் தம்மிடமுள்ள ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு அரச படையினரிடம் சரணடைய வேண்டுமென்பதற்காகவும் 48 மணிநேர நிறுத்தமொன்றை கடந்த புத்தாண்டு தினங்களில் அரசு பிரகடனப்படுத்தியிருந்தது. ஜனாதிபதி செயலகம் இது தொடர்பாக விடுத்த அறிக்கையில் மேற்சொன்ன மூன்று காரணங்களையும் குறிப்பிட்டிருந்தாலும் இதனை ஒரு யுத்த நிறுத்தம் என்று நேரடியாகத் தெரிவிக்கவில்லை.

48 மணிநேர மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை சில நாடுகள், அமைப்புகள் வரவேற்றதுடன் அது மேலும் நீடிக்கப்பட வேண்டுமென்ற தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தன.
ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியத் தலைமையும் இலங்கை அரசின் இந்த நடவடிக்கையைப் பாராட்டியதுடன், யுத்தப் பிரதேச மக்களின் நிலை குறித்து தமது பக்கச் சார்பற்ற கருத்தினையும் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமைத்துவத்தை ஏற்றிருக்கும் செக்கோசெலவாக்கியா, மோதல் தவிர்ப்பு நீடிக்க வேண்டுமென்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன் மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பினரும் மனித உரிமைகளுக்கும் சர்வதேச மனித நேயச் சட்டங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென்ற மிகவும் பொறுப்பு வாய்ந்த கருத்துகளையும வெளியிட்டன.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மெல்பாண்ட தற்காலிக யுத்த தவிப்பை நிரந்தர யுத்த நிறுத்தமாக இலங்கை அரசு பிரகடனப்படுத்த வேண்டுமெனவும் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகளையும் அரசு கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.

அதே போன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பென் கீ மூன், இலங்கையில் மோதல்களை நிறுத்தினால் எந்த உதவியையும் செய்யத் தயாரென அறிவித்திருந்தார்.

அது போன்று இலங்கை அரசின் யுத்த தவிர்ப்புக் காலத்தைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்களைச் சுதந்திரமாக வெளியேற வேண்டுமென்ற கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தன.

ஆனால் இந்த 48 மணிநேர காலத்துக்குள்ளோ அல்லது அதன் பின்னரோ நல்லன எவையும் நடைபெறவில்லை என்பதே உண்மை.யுத்த தவிர்ப்புக் கால எல்லை நீடிப்புத் தொடர்பில் அரசாங்கமோ மக்களை விடுவித்து தாமும் சரணடைவது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளோ கவனஞ் செலுத்தாத நிலையிலேயே வடபகுதி யுத்த களம் 48 மணிநேரத்தைக் கழித்தது என்றே சொல்ல வேண்டும். மோதல் தவிர்ப்பு நிரந்தரமாக்கப்பட வேண்டுமென்ற சர்வதேசத்தின் குரல்கள் இலங்கை அரசைப் பொறுத்த வரையில் மீண்டும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது.

ஆயுதங்களைப் புலிகள் கீழே வைக்காவிட்டாலும் பரவாயில்லை. புலிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள மக்களையாவது இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விடுவித்தால் போதுமென்ற சர்வதேசத்தின் இன்னொரு எதிர்பார்ப்பையும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிதறடித்தமை கவலைக்குரிய விடயங்களே. இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேசத்தின் நல்லெண்ணத்தைப் பெறவும் தவறிவிட்டனரென்றே கூறமுடியும்.

ஒரு சிறிய பரப்புக்கள் நீண்ட காலமாக மக்கள் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் வாழ்வதிலுள்ள சிக்கல்கள், பிரச்சினைகளை உணராத நிலையில் கண்டும் காணாததுமாகப் புலிகள் செயற்படுவதும் கவலைக்குரியதே. இலங்கை அரசின் யுத்த முன்னெடுப்புகள் தொடர்பில் சர்வதேசம் எவ்வளவுதான் அதிருப்தி கொண்டிருந்தாலும் புலிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள மக்களை விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் அவை வலியுறுத்தத் தவறவில்லை என்பதனையும் நாம் இங்கு சுட்டிக்காட்டவே வேண்டும்.

போராட்டங்கள் மக்களின் உரிமைக்கானதாகவே இருக்க வேண்டுமே தவிர மக்களை யுத்த களத்தின் சிறிய பரப்புக்குள் வைத்துக் கொண்டு அவர்களுக்காகப் போராடுவதாக இருக்க முடியாது.

48 மணிநேர யுத்தத் தவிர்ப்பினைப் பிரகடனப்படுத்திய காலப் பகுதிக்குள் வடக்கிலும் தெற்கிலும் இடமபெற்ற சில சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. மொனராகலை மாவட்டத்திலுள்ள இரு கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின்போது சிங்கள கிராமிய மக்கள் 12 பேர் கொல்லப்பட்டமை, வடக்கின் யுத்த சூன்யப் பிரதேசத்திலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலின் போது இரு படை வீரர்கள் பலியானதுடன் மேலுமொருவர் காயமடைந்த சம்பவங்கள் யுத்தத் தவிர்ப்புக் காலப் பகுயிலேயே இடம்பெற்றன. இவை இரண்டுக்கும் விடுதலைப் புலிகளே பொறுப்பென அரசாங்கம் தெரிவித்துவிட்டது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கை அரசின் யுத்தத் தவிர்ப்பானது சர்வதேசத்தை ஏமாற்றும் கண்துடைப்பெனத் தெரிவித்துள்ளது. தற்காலிக மோதல் தவிர்ப்புக்குச் செல்வதை விட மக்களின் மனித நேயத் தேவைகளைக் கருத்தில் கொண்டு நிரந்தர போர் நிறுத்தமொன்றுக்குச் செல்ல வேண்டுமெனவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

நான்காவது ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் குறுகிய கால அவகாசத்தைக் கொண்ட யுத்த தவிர்ப்புகளை இரண்டு தடவைகள் அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் யுத்த முனையில் சிக்கியுள்ள மக்கள் இந்த யுத்த தவிர்ப்;புகளால் இரு சாராரிடமிருந்தும் எவ்வித நன்மைகளையும் பெறவில்லையென்பதே உண்மை. அனைத்திலும் முன்வைக்கப்பட்டவை இரு தரப்பினருப்பினதும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளே.

எதிர்காலத்தில் கூட இவ்வாறான குறுகிய கால மோதல் தவிர்ப்பு அறிவிப்புகள் அர்த்தமற்றதாகி விடுவதுடன் எதனையும் பெரிதாகச் சாதிக்கப் போவதில்லை என்பதனையே இது காட்டுகிறது.

இது இவ்வாறிருக்க இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, வன்னியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் தொடர்பில் சர்வதேச ஆதிக்கங்களுக்கு, அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணியாதெனவும் இலங்கையில் பயங்கரவாதம் முடியும் வரை படை நடவடிக்கைகள் தொடருமெனவும் தெரிவித்துள்ள நிலையில், இந்திய உள்துறை அமைச்சரான ப. சிதம்பரம் இந்தியாவின் அழுத்தமே 48 மணிநேர யுத்தத் தவிர்ப்புக்குக் காரணமெனவும் இந்திய அரசின் தொடர்ச்சியான வலியுறுத்தலுக்கு இலங்கை அரசு அடிபணிந்து விட்டதென்ற தோரணையில் மார்தட்டிக் கருத்துகளை வெளியிட்டுள்ளார். வெட்கம் கெட்ட நிலையில் இவரால் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கருத்துகள் அவரையும் அவர் சார்ந்த காங்கிரஸையும் கேலிக்குள்ளாக்கியுள்ளது. இந்த யுத்த தவிர்ப்பானது இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றியெனவும் தெரிவித்துள்ளார்.

நான்காம் ஈழப்போர் ஆரம்பமான காலத்திலிருந்தே இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியா தலையிட வேண்டுமென தமிழ் மக்கள் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் இந்திய அரசினால் எப்படித் தட்டிக் கழிக்கபட்டனவென்பது வெளிச்சப்பட்ட நிலையில், இவாறானதொரு உரிமை கொண்டாடல் கேலிக்கூத்தாகவே உள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் புதுடில்லியும் தமிழக அரசும் உலக ஜனநாயகம் பேசிக் காலத்தைக் கடத்தி எப்படி ஏமாற்றியதென்பது தெரிந்த விடயம். இலங்கை மீது தொடர்ச்சியான அழுத்தத்தை இந்தியா பிரயோகித்ததன் பிhதிபலனே இந்த 48 மணிநேர மோதல் தவிர்ப்பு என்றால் இதனால் இந்தியாவுக்கு கிடைப்பது பெருமையல்ல அவமானமே. என்ன நோக்கங்களுக்காக இந்த 48 நேர யுத்த மோதல் தவிர்பு மேற்கொள்ளப்பட்டது என்பதற்கான விளக்கத்தை சிதம்பரம் தரப்பும் தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இலங்கை தமிழ் மக்கள் தொடர்பான காங்கிரஸினதும் கருணாநிதியினதும் கொள்கை எப்படிப்பட்டதென்பதனை ஏலவே வெளிச்சம் போட்டுக் காட்டிய நிலையில் இதனை தமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியெனக் கூறி இலங்கைத் தமிழ் மக்களையோ சிவகங்கைத் தொகுதி வாக்காளர்களையோ ஏமாற்றும் எண்ணத்தை அவர் கொண்டிருப்பாரானால் அது அவரது முட்டாள்தனமே.

அதேபோன்று இலங்கை வந்திருந்த வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இங்கு தங்கியிருந்த வேளையிலும் அங்கு சென்ற பின்னரும் எவ்வாறான கருத்துகளைத் தெரிவித்திருந்தாரென்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் இப்போது அவர் இலங்கைத் தமிழ் மக்களின் அவலம் குறித்துக் கலைப்படுகிறார், போலிக் கண்ணீர் வடிக்கிறார். தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் அவரது செய்றபாடுகளை அவர் இலங்கையின் தூதுவராக இருந்தபோது பல சந்தர்ப்பங்களில் அறியக்கூடியதாக இருந்ததனையும் எளிதில் மறந்து விட முடியாது.

இலங்கையில் முழுமையான போர் நிறுத்தம் செய்தால் என்ன மூழ்கிப் போய்விடும்? என இன்று கேள்வி கேட்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினையில் ஆரம்பத்திலிருந்தே உண்மையான அக்கறையை காங்கிரஸ் அரசும் கருணாநிதி அரசும் காட்டியிருந்தால் தமிழ் மக்களின் இன்றைய வாழ்வு நிலை இவ்வாறு மூழ்கிப் போயிருக்காது என்பதனை அவர் அறிவாரா?

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னர் இலங்கை வந்திருந்த அண்ணல் மகாத்மா காந்தி, இலங்கையும் இந்தியாவும் ஒருபோதும் பகையாளிகளாக இருக்க முடியாதென்ற கருத்தை வெளியிட்டிருந்தார். அண்ணல் காந்தியின் இந்தக் கருத்துகள் இன்றைய காந்;தீயவாதிகளால் தவறான அர்த்தம் கொள்ளப்படுவதும் கவலைக்குரியதே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com