ஒரே நாளில் 35000 மக்கள் புலிகளை நிராகரித்தனர். திரும்புமா வணங்காமண் திருமலை நோக்கி? -விருகோதரன்-
கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் வன்னியின் களமுனைகளில் நின்று போராடுகின்ற படையினரை கிளிநொச்சி சென்று சந்தித்திருந்தார். அவரின் அந்த விஜயம் அங்குள்ள படையினரின் பனோபலத்தை பன்மடங்காக்கியுள்ளதை திங்கட்கிழமை நிகழ்வின் ஊடாக காணமுடிகின்றது.
புதுமாத்தளன் பிரதேசத்திலுள்ள மக்கள் வெளியேறாதவாறு புலிகள் அமைத்து வைத்திருந்த இறுதி பாதுகாப்பு மண் அணையை நோக்கி நேற்றுமுன்தினம் திங்கட் கிழமை அதிகாலை 12.30 மணியளவில் முன்னேறிய கொமாண்டோ படையணியினர் புலிகளின் பாதுகாப்பு வேலியை நிர்மூலம் செய்து அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கான பாதையை திறந்து விட்டனர்.
மிகவும் திட்டமிட்ட முறையில் மக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் புலிகளின் பாதுகாப்பரண்களை வீழ்த்திய பிரிகேடியர் ஷாவேந்திர சில்வா தலைமையிலான கொமாண்டோ அணியினர் அப்பிரதேசத்தில் உள்ள மக்களை தமது விருப்பிற்கேற்ப தாம் பாதுகாப்பென கருதுகின்ற பிரதேசங்களை நோக்கி வெளியேறுமாறு அறிவித்தனர்.
படையினரின் வேண்டுதலையடுத்து அங்கிருந்த 35000 மக்கள் ஓரு சில மணித்தியாலயங்களில் வெளியேறியுள்ளனர். அம்மக்கள் அங்கிருந்து வெளியேறிய விதத்தையும் வேகத்தையும் பார்க்கின்றபோது அவர்கள் இவ்வாறானதொரு நடவடிக்கையை பன்னெடுங்காலங்களாக எதிர்பார்த்து இருந்திருக்கின்றார்கள் என்பதும,; அவர்கள் புலிகளால் எத்தகைய கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் தெளிவாக விளங்குகின்றது.
மக்கள் அப்பிரதேசங்களில் இருந்து வெளியேறுகின்ற, வெளியேறத் துடிக்கின்ற விடயத்தை ஆளில்லா விமானங்கள் படம்பிடித்து விமானப்படை கட்டளை மையத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தது. அவ்விடயத்தை கேள்வியுற்ற நாட்டின் ஜனாதிபதியும் முப்படைத்தளபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஸ விமானப்படையின் கட்டளை மையத்திற்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை அவதானித்ததுடன், வெளியேறும் மக்களை தடுத்து நிறுத்துவதற்காக புலிகள் மேற்கொண்ட மனிதாபிமானமற்ற தாக்குதல்களின் போது காயமடைந்தவர்களை அவசிய சிகிச்சைகளுக்கு அனுப்பி வைக்க விசேட விமானங்களை அமர்த்துமாறும் கட்டளையிட்டார்.
காயமடைந்த மக்களை வெளியேற்ற ஜனாதிபதியின் கட்டளைக்கமைய விசேட ஹெலிக்கொப்பரர்கள் சேவையில் அமர்த்தப்பட்டதுடன், மக்களை இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைக்க மேலதிகமாக 80 பஸ்வண்டிகளும் சேவைக்கு விடப்பட்டுது.
அங்கிருந்து வந்த மக்களை படையினர் அணுகி அவர்களை வரவேற்று உபசரிக்கின்ற போது அம்மக்கள் படையினரை கைகூப்பி வணங்கி தமது நன்றியை தெரிவித்துக்கொள்ளும் காட்சி மனதை உருக்குவதாக உள்ளது. பிரபாகரனது மாயை இவ்விடயத்தில் கலைக்கப்பட்டுள்ளது. இலங்கைப் படையினர் தொடர்பாக பிரபாகரன் குழுவினர் அம்மக்களுக்கு கொடுத்திருந்த தவறான சிந்தனை தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. எந்தப் படையினர் தமிழ் மக்களை கொல்ல வருகின்றார்கள் என புலிகளால் குறிப்பிடப்பட்டிருந்ததோ, அதே படையினர் புலிகளால் குற்றுயிராக்கப்பட்டிருந்த தமிழ் மக்களை தமது தோள்களின் சுமந்து செல்வதை காண முடிந்துள்ளது.
இலங்கையை ஆண்ட அன்றைய அரசியலாளர்களின் தவறான அணுகுமுறை மற்றும் பாரபட்சங்களினூடாக ஆரம்பமான விடுதலைப் போராட்டம் திசை மாறிச் சென்று இனவாதத்தை தூண்டி இனப்படுகொலைகளுக்கு வித்திட்டது. இதில் எந்தத்தரப்பினரும் குறைந்தவர்களோ அன்றில் சலித்தவர்களோ இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆனால் இனவிடுதலைப் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் பயங்கரவாதமாக உருவெடுத்திருந்த போதும் பகைமையை மறந்து மக்களின் நலனைக் கருத்தில் கொண்ட அரசுகள் புலிகளுடன் பல தடவைகளில் பேச முன்வந்திருந்தது. ஏன் புலிகளின் நடைமுறைக்கு ஒவ்வாத பல நிபந்தனைகளைக் கூட ஏற்றிருந்தது எனவும் கூறலாம்.
இறுதியாக நோர்வே மத்தியஸ்த்துடன் செய்து கொள்ளப்பட்ட ஓப்பந்ததை;தை புலிகள் தம்தை இராணுவ ரீதியாக மேம்படுத்திக்கொள்ள உபயோகித்தனரே அன்றி மக்களின் அத்தியாவசிய தேவையான யுத்தத்திற்கு முடிவுகட்டப் பயன்படுத்த முற்படவில்லை என்பது நிருபிக்கப்பட்டுள்ள விடயம். நியாய பூர்வமான தீர்வொன்றிற்கான கதவுகள் திறந்திருந்தபோதும் புலிகள் வலிந்து மாவிலாறில் உள்ள விவசாயிகளுக்கு செல்லும் நீரை மூடி ஓர் யுத்தத்தை சுயமாகவே ஆரம்பித்தனர்.
மாவிலாற்றில் புலிகள் யுத்தத்தை தாமாகவே தொடங்கி படுதோல்வியடைந்து வன்னிக்காடுகளுள் சென்று ஒழிந்து கொண்டனர். கிழக்கை முற்றாக விடுவித்த அரசு, புலிகளை உடனடியாக பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு பலமுறை வேண்டுதல் விடுத்திருந்தது. ஆனால் புலிகள் யுத்தம் ஒன்றில் தம்மால் வெல்ல முடியாது என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தும் மக்களை மனிதகேடயங்களாக பாவித்து தம்மால் தொடர்ந்தும் நிலைகொள்ள முடியும் என தப்புக்கணக்கு போட்டிருந்தனர். ஓட்டுமொத்தத்தில் புலிகளின் பங்கரவாதச் செயல்களுக்கு மக்களை கவசமாக பயன்படுத்தினார்கள்.
கிழக்கில் முற்றாக தோல்வியை தழுவிய புலிகள் வன்னியில் முடங்கியிருந்து வடகிழக்குக்கு வெளியேயுள்ள பொதுமக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை தொடுத்தபோது அரசு அதற்கெதிரானதோர் நடவடிக்கைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. வன்னிமீது போர் தொடுக்க வேண்டிய கட்டாயம் அரசிற்கு உருவானது.
வவுனியாவில் இருந்து படை நடவடிக்கைகள் ஆரம்பமானபோது படையினர் மடுவை கைப்பற்றினால் புலிகள் மதவாச்சியை கைப்பற்றுவார்கள் என்று முழங்கிய புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் புலித்தலைமையால் கண்டதுண்டமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட முடியாத முப்படைப் பலத்தையும் கொண்டுள்ள மிகப்பலம்பொருந்திய அமைப்பு என பலகோணங்களில் ஆய்வுகளை எழுதிய இராணுவ மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் வாய்மூடி மௌனிகளாக நிற்கின்றனர்.
வன்னியில் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது புலிகளால் யுத்தத்தில் வெல்ல முடியாது என்பதை அதன் தலைமை நன்கு உணர்ந்து வைத்திருந்தும,; வன்னியில் தாம் தடுத்துவைத்திருக்கும் மக்களை மனிதகேடயங்களாக பாவித்து தொடர்ந்தும் காலத்தை ஓட்டலாம் என எதிர்பார்த்தது. பரப்பங்கண்டல், விடத்தல் தீவு பகுதிகள்வரைக்கும் பரந்திருந்த மக்கள் வன்னியின் ஓர் முலையில் அமைந்துள்ள புதுமாத்தளன் வரைக்கும் ஒதுக்கப்பட்டனர்.
பரப்பங்கண்டல், விடத்தல்தீவிலிருந்து படையினர் பூநகரியை அடைந்தபோதும், மணலாறில் ஆரம்பித்து நந்திக்கடல் ஏரியை அடைந்தபோதும், முகமாலையில் ஆரம்பித்து சாலையை அடைந்தபோதும், புலிகள் முறிடிப்புச் சமர்களில் ஈடுபட்டு வெற்றிகரமாக முறியடித்துக்கொண்டேயிருக்கின்றார்கள் என புலிகளின் ஊதுகுழல்கள் கதைவிட்டுக்கொண்டிருந்தன.
பல முனைகளாலும் படையினர் முன்னேறத் தொடங்கியபோது அனைத்து மக்களையும் தமது வன்பிடிக்குள் அடக்கிக்கொண்ட புலிகள், அங்குள்ள இளைஞர் யுவதிகள் மற்றும் திருமணமான நடுத்தரவயதினர் என பலதரப்பட்டோரையும் முன்னரங்குகளுக்கு துணைப்படையாகவும் போர் உதவிவீரர்களாகவும் அனுப்பி பலி கொடுத்துக்கொண்டிருந்தனர். புலிகளின் இச் சட்டவிரோத நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் களமுனையில் பலியாகினர். இவ்விடயம் பல ஊடகங்கள் மற்றும் சர்வதேச, உள்நாட்டு மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்திற்கு உள்ளானது. அவ்வேளையில் விடுதலையை பெறவேண்டுமாயின் இழப்புக்களைச் சந்தித்துத்தானாக வேண்டும் என புலிகளின் ஆய்வாளர்களால் வியாக்கியானம் கூறப்பட்டது.
புலம் பெயர் தமிழர்கள் அன்று களமுனையில் புலிகளால் பலிகொடுக்கப்பட்ட அப்பாவி உயிர்களை உயிர்களாக மதிக்கவில்லை. புலிகளின் இந்த மானசீகமற்ற செயலை கண்டிக்க முற்படவில்லை. இன்றும் புலிகளை நிராகரித்து வன்னியில் இருந்து வெளியேறி தமது சொந்த வாழ்க்கையில் ஈடுபட விரும்புகின்ற அப்பாவித் தமிழ் மக்களை பிரபாகரனை காப்பாற்றாமல் விட்டுச் சென்ற துரோகிகளாகவே பார்கின்றனர்.
இன்று புலம்பெயர் தேசங்களிலே வன்னியில் உள்ள மக்களை காப்பாற்றுமாறு பல வகையான போராட்டங்கள் இடம்பெறுகின்றது. உண்மையில் இப்போராட்டங்கள் மக்கள் நலன்சார்ந்தவையா? இல்லை- பிரபாகரனைக் காப்பதற்கான பூனை கண்ணை மூடிக்கொண்டு பால்குடிப்பதனை ஒத்த போராட்டம்.
புலம்பெயர்ந்துள்ள மக்கள் எந்த மக்களின் பெயரால் போராட்டம் நடாத்துகின்றார்களோ அம்மக்கள் தமக்கு பாதுகாப்பான வழியைத் தேடிக்கொண்டுள்ளனர். தாம் புலிகளினால் அனுபவித்த துயரங்களில் இருந்து இரு நாட்களில் ஒரு லட்சத்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தம்மை விடுவித்துக்கொண்டுள்ளனர். ஆனால் இன்னும் குறிப்பிடத்தக்களவு மக்கள் புலிகளின் பிடியில் சிக்கித்தவிக்கின்றனர். ஏனவே புலம்பெயர் தேசங்களிலே பல தரப்பட்ட இடங்களிலும் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு போராட்டங்களை நாடாத்துகின்ற போராட்டக்காரர்கள், தமது மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு புலிகளின் காரியாலயங்கள் அல்லது அவர்களுக்கான பிரத்தியேக இடங்களுக்கு முன்னால் சென்று வன்னியில் உள்ள மக்களை விடுவிக்குமாறு புலிகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் போராட்டங்களை நாடாத்த வேண்டும். அதுவே புலம்பெயர் மக்கள் வன்னியில் உள்ள மக்களுக்கு செய்யும் பார்pய உதவியாகும்.
புலம்பெயர்தேசத்திலே வன்னியில் சிக்கியுள்ள மக்களுக்கு நிவாரணப்பொருட்களை அனுப்புவதாக வணங்காமண் எனும்பெயரால் மக்களிடம் இருந்து கோடிக்கணக்கான டொலர்கள் அண்மையில் பெறப்பட்டுள்ளது. எங்கே அப்பணமும் கப்பலும்? உண்மையில் அப்பணம் வன்னியில் உள்ள மக்களின் நலனிற்காக அறவிடப்பட்டதாக இருந்தால் அக்கப்பலை அனுப்புங்கள் திருமலைநோக்கி. அரச அதிகாரிகள் அப்பொருட்களை ஏற்று மக்களுக்கு பகிர்ந்தளிப்பார்கள். எந்த மக்களின் பெயரால் அப்பணம் அறவிடப்பட்டதோ, அந்த மக்களில் (1700000) ஒருலட்சத்துபத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் அரசகட்டுப்பாட்டுப்பகுதிகளுள் வந்துள்ளனர். அம்மக்களின் தேவைகளை அரசு பூர்த்தி செய்தாலும் கூட அங்குள்ள அரச அனுமதி பெற்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற எத்தனையோ ஸ்தாபனங்கள் அம்மக்களுக்கான நன்கொடைகளை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
வன்னி மக்களின் நிவாரணத்திற்கு என மக்களிடம் பிடுங்கப்பட்ட கோடிக்கணக்கான டொலர்கள் புலிப்பினாமிகளின் சொந்த வங்கிக் கணக்குகளில் வைப்பிலடப்படுகின்றன. அவற்றை அரச கட்டுப்பாட்டுப் பகுதியினுள் வந்துள்ள மக்களின் நலனிற்காக செலவிட ஆவன செய்யுங்கள். VIII
0 comments :
Post a Comment