Saturday, April 25, 2009

நாட்டில் 1/3 பகுதிக்கு உரிமை கொண்டாடிய புலிகள் இன்று 6 கிலோ மீற்றரினுள் முடக்கம் - ஜனாதிபதி



நாட்டின் மூன்றில் ஒரு பகுதிக்கு உரிமைகொண்டாடிய புலிகள் இன்று ஆறு கிலோ மீற்றருக்குள் ஒடுக்க ப்பட்டுள்ளனர். அதனையும் கைப்பற்ற இன்னும் சில தினங்களே உள்ளன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களையும் யுத்தத்துக்கு இழுத்த யுகத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜப்பானிய அரசின் நிதியுதவியுடன் 390 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாணந் துறை ஸ்ரீசுமங்கல கல்லூரியை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் சுசில் பிரேம ஜயந்த, ரோஹித அபே குணவர்தன, பிரதியமைச்சர் எம்.எஸ்.செல்லச்சாமி, ஜப்பா னியத் தூதுவர் புன்யோ டகாஸி ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-

தெற்கில் பாடசாலைக்கு மாணவர்கள் அச்சத்துடன் சென்ற காலகட்டமொன்று இருந்தது. தரைவழியாக வடக்கிற்குப் போவதென்றால் கப்பம் வழங்கிய யுகமொன்று இருந்தது. அவை அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எனது சிறுவயதில் யாழ்ப்பாணத்துக்கும் ‘நாகதீப’ விகா ரைக்கும் சுதந்திரமாகப் போய்வருவேன். நமக்கு அதற் கான வாய்ப்பு இருந்தது. நமது பிள்ளைகளுக்கு அத்தகைய வாய்ப்புகள் அற்றுப் போயுள்ளன. இனிவரும் விடுமுறை காலங்களில் எமது பிள்ளைகளும் யாழ். செல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது.

வயல் நிலங்களை இல்லாதொழித்து கட்டிட நிர்மாணங்களை மேற்கொண்ட சிந்தனைக்கும் முடிவு காணப்பட்டுள்ளது.

நாம் மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். ஆங்கிலேயர்கள் எமது முடியையும் சிம்மாசனத்தையும் மட்டுமன்றி எமக்கான நிர்வாக முறை, கலை கலாசாரம் பண்பாடு பாரம்பரிய விழுமியங்கள் அனைத்தையும் இல்லாதொழித்துவிட்டனர். அவை அத்தனையையும் மீள உரிமையாக்குவதே மஹிந்த சிந்தனை செயற்திட்டமாகும்.

சுதந்திரப் போராட்டத்தில் நாம் அரசாங்கத்தைப் கைப்பற்ற முடிந்ததேயன்றி ஏனைய அனைத்தும் இல்லாமற்போனது. எனினும் சுதந்திர நாட்டுக்கான உணர்வு அழிந்துவிடவில்லை. இழந்ததை மீளப்பெறுவதே மஹிந்த சிந்தனையின் நோக்கம்.

எமது சுதந்திரம், ஐக்கியமான நாடு விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட பொளாதாரம், பெற்றோரை மதிக்கும் பண்பாடு, ஒழுக்கமுள்ள சமுதாயம் இவற்றை மஹிந்த சிந்தனை மூலம் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுக்கின்றோம்.

இந்த வகையில் தேவேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரை தேசியக்கொடியைப் பறக்கவிடும் சூழ்நிலையை இன்று எமக்குப் படையினர் பெற்றுத் தந்துள்ளனர். மக்கள் எதிர்பார்ப்வை நிறைவேற்றும் யுகம் இது. மாணவர்கள் சிறந்த முறையில் கல்வியைக் கற்று முன்னேறி தமது எதிர்பார்ப்புகளை வெற்றிக்கொள்ள வேண்டும். அதற்குப் பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் அர்ப்பணிப்புடனான பங்களிப்பும் முக்கியமாகிறது.

சகலதையும் அரசாங்கத்தின் பொறுப்பு என பெற்றோர் விட்டு விடமுடியாது.

உங்கள் பிள்ளைகளை வெறும் புத்தகப் பூச்சிகளாக வளர்க்காமல் சமுதாய வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் அனுபவசாலிகளாக உருவாக்குவது அவசியம்.

‘நானும் பிரதமர், ஜனாதிபதி என்ற நிலைபாட்டிலிருந்து மூன்று பிள்ளைகளின் தந்தையென்ற வகையில் பெற்றோர்களுக்குத் தெரிவிக்க விரும்புவது, எனது சகல செயற்பாடுகளுக்கு மத்தியிலும் பிள்ளைகளுக்காக நேரத்தை ஒதுக்குகிறேன். எனக்கே முடியுமாகவுள்ளதை நீங்கள் முடியவில்லையென்று கூறமுடியாது. உங்கள் பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கி நல்வழிகாட்டுங்கள்’.

எதிர்கால சிறந்த பரம்பரையை உருவாக்குவதற்கும் அதனைப் பாதுகாப்பதற்கும் நம் அனைவரதும் அர்ப்பணிப்பு மிக அவசியம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment