Sunday, March 22, 2009

புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தின் மேலும் ஒருபகுதி படையினரின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.



வன்னியின் முழு நிலப்பரப்பையும் கைப்பற்றி புலிகள் மனித கேடயங்களாக வைத்துள்ள மக்களை விடுவிக்க முன்னேறிவரும் படையினர் மக்களுக்காக அரசினால் யுத்த சூனிய பிரதேசமாக பிரகடணப்படுத்தியுள்ள புதுமாத்தளனில் இருந்து சுமார் 2.5 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளனர். நேற்று புதுக்குடியிருப்பின் மேற்குப் பக்கத்தில் இருந்து முன்னேறிய படையினர் புதுக்குடியிருப்பின் கிழக்குப் பகுதியின் ஏ35 பாதை வரை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு கிழக்கைக் கைப்பற்றுவதற்காக படைகளை நகர்த்திய தளபதிகளில் ஒருவர் ஐரின் தொலைக்காட்சியின் விசேட நிருபருக்கு கருத்து தெரிவிக்கையில், புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசம் புலிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. இங்கு நாம் எமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ள ஏ35 சந்தி புலிகளின் வினியோக பாதையாகும். புலிகள் சகல இடங்களிலிருந்தும் எமது தாக்குதல்களால் தொடர்ந்து பின்தள்ளப்பட்ட போது இங்கும் யுத்த சூனியப்பிரதேசங்களிலும் தான் தமது நிர்வாக நிலையங்களை அமைத்திருந்தனர். இப்பிரதேசத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக புலிகள் பெரும் முயற்சி எடுத்தனர்.

அத்துடன் இப்பிரதேச்தை நாம் கைப்பற்ற பல பெரும் விலை கொடுக்க நேரிட்டது. எமக்கு குறிப்பிடத்தக்களவு இழப்புகளும் ஏற்பட்டது காரணம் இங்கே பல திறந்த வெளிகள் காணப்படுகின்றது அவற்றினூடாக முன்னேறுவது கடினமானதாக இருந்தது. இரவுநேரங்களில் தகவல்களைத் திரட்டி வியூகங்களை நேரத்திற்கு நேரம் மாற்றியமைத்து பலத்த முயற்சியில் இவ்விடத்தை அடைந்துள்ளோம் இத்துடன் புலிகள் மேலும் சிறியதோர் பிரதேசத்தினுள் முடக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இலங்கைநெற் வன்னி நிருபர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com