Monday, March 2, 2009

நண்டும் நாக்கிலிப் புழுவும்.-கிழக்கான் ஆதம்-



நேற்றய தினம் ஞாயிற்றுக் கிழமை மார்ச் 01ம் திகதி பி.பி.சி தமிழோசை ஒலிபரப்பிய பெட்டகம் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்களின் உண்மையான மனநிலையைக் காட்டியது எனலாம். அரச மற்றும் பயங்கரவாத அடக்கு முறைகளுக்கு ஆளாகிவரும் எம் மக்கள் அரசை எதிர்க்க எப்போதோ துணிந்து விட்டாலும் சர்வதிகாரச் சக்திகளை எதிர்க்க இப்போதுதான் துணிந்துள்ளனர். காரணம் அவர்களின் தோற்றுப்போன ஏகாதிபத்தியம் என்பதற்காகவல்ல.

எம் மக்கள் எத்தனை நாளுக்குத்தான், எவ்வளவு துன்பங்களைத்தான் தாங்குவது? ஆகவேதான் இழப்பதற்கு உயிரைத் தவிர எதுவுமில்லாத போது வாய் திறக்கிறார்கள்.

இவர்களில் ஈழத்தில் வாழ்பவர்கள் நிரந்தர அனாதைகளாகவும் வேறு புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்கள் கிளைகளற்ற மரங்களாகவும் வாழ்கின்றார்கள் என்பது எம் அனைவருக்கும் தெரியும். காரணம் நாமும் அவ்வாறான வாழ்கைதான் வாழ்கிறோம்.

என்றாலும் இலங்கைத் தேசத்திற்கு வெளியில் வாழும் எம்முன்னே ஒரு கடமை பாக்கியிருக்கிறது. அதுதான் நமது மக்களுக்கான பாதுகாப்பு மட்டுமல்லாது நமது சிறார்கள் புலிகளினால் பலவந்தமாக சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு புலி உறுப்பினர்களாக்கப்பட்டவர்கள்.

அவர்கள் பிடிக்கப் படும்போது அல்லது சரணடையும்போது அவர்களுக்கான நல்ல திட்டங்களை அரசு முன்னெடுத்தாலும் இது குறித்து சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு இலங்கை அரசுக்கு இவர்களின் பாதுகாப்பு மறு வாழ்வு என்பது தொடர்பாக தொடர்ந்து அழுத்தங்களை கொடுக்கக் கூடிய வகையில் நமது பத்திரிகைகள், இணையத்தளங்கள், ஊடகங்கள் மற்றும் செல்வாக்குள்ள நபர்கள் அரசியல் தலைவர்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு சரணடையும் நமது சிறார்களுக்கு புலிகள் சொல்லிக் கொடுத்ததையும் தங்கள் தாய், தந்தை சகோதரங்களையும் தவிர எதுவும் தெரியாது.

ஆகவே இவர்கள் தொடர்பான மிகச் சரியான நிரந்தரத் திட்டம் ஒன்று சர்வதேசத்தின் அங்கீகாரத்துடன் அல்லது அவர்களின் மேற்பார்வையில் தாயாரிக்கப்பட வேண்டும். அதற்காக எழுத்தாளர்கள் எழுத்து மூலமும், பேச்சாளர்கள் பேச்சின் மூலமும், அரசியல்வாதிகள் அரசியல்ரீதியாகவும், பத்திரிகையாளர்கள் பத்திரிகையூடாகவும் செயற்படவேண்டும்.

சரணடைந்துள்ள சிறார்களையும் சரணடைய இருக்கும் சிறார்களையும் (போராளிகள் என அழைக்க மனது இடம்தரவில்லை) புலிகள் துரோகிகளாகவும், அரசு புலிகளாகவும்தான் பார்க்கும்.

நாம்தான் நமது சகோதர்களாகவும், பிள்ளைகளாகவும் பார்த்து அவர்களுக்கான மறுவாழ்வின் மூலம் நமது சமூகத்துடன் இணைந்து தாய் தந்தையருடன் எல்லோரையும் போல வாழும் தகுதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அந்த பொறுப்பு நம்மையே சாரும் மற்றத் தரப்பார்கள் விட்டுச் சென்ற தவறுகளை நாம் இனிமேல் விடக்கூடாது.

யுத்தப் பிரதேசத்தில் இருந்து அகதிகளாக வரும் மக்களும் வாழ்வின் கடைசி எல்லையில் நாதியற்று நிற்பவர்கள். இவர்களுக்கான மறு வாழ்வுத் திட்டங்களை அரசு முன்னெடுத்தாலும் அது நூறுவீதம் நம் மக்களின் தேவைகளுக்கு போதுமானதாக அமையப் போவதில்லை.

நாங்கள்தான் எங்களால் ஆன வழிகளில் அவர்களுக்கு முடியுமான உதவிகளைச் செய்து அவர்களின் துயரங்களை எங்களால் இயன்றளவு துடைக்க வேண்டும்.

இந்த வகையில் நமது மக்கள் புலம்பெயர்ந்தவர்களாயினும் நாட்டில் வாழ்பவர்களாயினும் யாரையும் குறை கூற முடியாது. காரணம் சுனாமி நமது பிரதேசத்தை ஒரு உலுக்கு உலுக்கியபோது தங்களால் ஆன அனைத்தையும் நமது மக்கள் செய்தனர். அதில் புலம்பெயர் மக்கள் கொடுத்த பணம் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்ததற்கு அவர்கள் பொறுப்பாளிகல்ல.. பல மணிநேரம் உயிரை குளிரில் உறையவிட்டு உழைத்துக் கொடுத்த காசில் இதை துஸ்பிரயோகம் செய்தவர்கள் கடவுளால் கூட மன்னிக்கப்படமாட்டார்கள்.

புலம் பெயர் மக்கள் என்பவர்கள் ஒன்றும் பரம்பரை பரம்பரையாக புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து பணத்தை கட்டிக்கொண்டிருக்கவில்லை. குடிக்கின்ற கூழே கடவுள் புண்ணியம் என்ற நிலைதான் அவர்களுக்கும் அரை மனதுடன் தினக் கூலிகளாக அதிகமானவர்கள் வாழ்கிறார்கள், வேலை நேரம் தவிர வீட்டில் உண்ண மனமின்றி ஈழத்தில் தவிக்கும் உறவுகளை நினைத்து அழுதவர்களாகவே அனேகமானோர் உள்ளனர்.

அவர்கள் உழைத்ததில் அவர்கள் உண்டதை விட அதிகம் அவர்களிடம் சர்வதிகார சக்திகளால் பறிக்கப்பட்டது.

அடுத்து இந்தியாவில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இவர்கள் இலங்கையில் இருந்திருந்தால் திறந்தவெளிச் சிறையிலாவது வாழ்ந்திருக்கலாம் இந்தியாவுக்குச் சென்றதால் ஆண்டாண்டு காலமாக மூடிய சிறையில் முடக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. அவர்களின் வாழ்வை வார்த்தைகளிள் வர்ணித்தால் வார்த்தை அழுதுவிடும் இவ்வாறு ஒரு அடிமை வாழ்வே அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகள் அவர்கள் இந்தியாவில் வாழ்ந்தாலும் அவர்களின் மறுவாழ்விற்கான எந்த ஒரு நடவடிக்கையும் யாராலும் முன்னெடுக்கப்பட வில்லை அவர்களும் அந்தந்த அரசினால் தமது நலனுக்காகவே பிரயோகிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்த அரசும் நல்ல திட்டத்தை வகுக்கவுமில்லை வழங்கவுமில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை கட்டுநாயக்க விமானத்தளத்தில் ஒரு இளம் பெண்னை சந்தித்தேன் அவர் ஒரு முஸ்லீம், அவர் என்னிடம் சொன்னார் அவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்றும் தங்களின் குடும்பத்தார் புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றியபோது இந்தியாவுக்குச் சென்று விட்டதாகவும், தனது குடும்பம் இந்தியாவுக்கு செல்லும் போது தான் வடக்கிற்கு வெளியே படித்துக் கொண்டிருந்ததால் அவர்களை சந்திக்க முடியவில்லையென்றும் தனது பாதுகாவலராக இருந்தவர் அவர்கள் இந்தியா சென்றவுடன் தனது படிப்பை நிறுத்தி தன்னை சவூதிக்கு அனுப்பிவைத்தாகவும் அனுப்பிவைக்கும் போது நீ போய்வந்தவுடன் உன்னை உன் பெற்றோரிடம் அனுப்பிவைக்கிறேன் எனக் கூறிக் கூறியே இதுவரை அவர் மூன்று முறை போய் வந்துள்ளதாகவும் இதுவரை அவர் இவளுக்கு தாய் தந்தையுடம் பேசக் கூட ஏற்பாடு செய்யவில்லை என்றும் எதாவது கேட்டால் தன்னைப்போட்டு அடித்துத் துன்புறுத்துவதாகவும் அவரைத் தவிர தனக்கு யாரையும் இவ்வுலகில் இப்போது தெரியாது என்றும் கூறினார்.

இவ்வாறு நமது மக்களின் கண்ணீர் கதை மிகவும் துன்பங்கள் நிறைந்தது எந்தச் சமுகத்தாரை எடுத்தாலும் அனைவரும் சொல்லொனாத் துன்பங்களில்தான் துவழ்கிறார்கள்.

அவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் நமக்கு உதவி செய்ய மாட்டார்களா? நல்ல காலம் பிறக்காதா என்ற ஏக்கமே மேலோங்கியுள்ளது.

இதற்கு நல்ல உதாரணம் வடக்கிலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லீம் மக்களும் கிழக்கில் சிறு, சிறு முஸ்லீம் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களும்.

இவர்களுக்கான நிரந்தரமான எந்தத் திட்டங்களோ செயற்பாடுகளோ முழு அளவில் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பதே உண்மை. தங்களே தாங்களே உழைப்பின் மூலம் முன்னேற்றிக் கொண்டவர்களைத் தவிர மற்றவர்கள் இன்றும் அனாதையாகத்தான் இவ்வளவு காலமும் முகாம்களில் அரசு கொடுக்கும் நிவாரணப் பொருட்களை நம்பி வாழ்கிறார்கள்.

இவர்களின் வாழ்வில் யாரும் ஒளியேற்றவில்லை. தங்களின் நலன்களுக்காகத்தான் இதுவரை வந்த அரசாயினும் அரசியல் வாதிகளாயினும் செயற்பட்டுள்ளார்கள்.

இதுபோன்ற இன்னோர் சாரார் புலிகளின் படுகொலைக்கு அஞ்சி புலிகளை எதிர்த்துக் கருத்துச் சொன்ன காரணத்தினால் வெளியேறிச் சென்றவர்கள் இவர்களின் வாழ்க்;கையும் கேள்விக் குறியாகத்தான் உள்ளது.

ஆகவே நாம் இப்போதாவது நமது இந்த மக்களின் விமோசனத்திற்காக நம்மால்ஆன அனைத்தையும் செய்ய முன்வர வேண்டும். இவர்களின் தேவைகளுக்காகவும் சுதந்திர வாழ்வுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.

வன்னியில் உள்ள மக்களும் முழுமையாக புலிகளின் சர்வதிகாரத்தில் இருந்து விடுவிக்கப்படும் போது நமது மக்களை இலகுவாக கணக்குச் சொல்லிவிடலாம் இப்படி.

இந்திய அகதிகள், இலங்கையில் இடம் பெயர் அகதிகள், புலம் பெயர் அகதிகள் இதுதான் போராட்டம் நமக்கு பெற்றுக் கொடுத்த தேசிய இலட்சணம் இதற்காகத்தான் அவர்கள் தங்கள் மூளையைத் தவிர அனைத்தையும் பிரயோகித்தனர்.

தற்போது நம் மக்களில் அதிகமான துன்பங்களுக்கு ஆளாகிக் கொண்டிருப்பார்கள். வடக்கிலிருந்து விடுவிக்கப்படும் மக்களும், புலிகளால் விரட்டப்பட்ட மக்களும் இந்தியாவில் அகதிகளாக வாழும் மக்களும்தான் இந்த மூன்று தரப்பாருக்கான மீள் குடியேற்ற மற்றும் அவர்களின் வாழ்க்கையை சாதாரண நிலைக்கு திருப்புவதற்கான கடமைகள் எம் முன்னே உண்டு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

அத்துடன் புலிகளுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டு பயிற்சி அளித்து பலிகொடுத்தது தவிர மீதியானவர்களின் புனர்வாழ்வுக்காகவும் நம்மால் இயன்றவற்றை நாங்கள் செய்யவேண்டும்.

இதில் மத இன பிரதேசவாதங்களை விடுத்து நாங்கள் செயற்பட வேண்டும் ஏனெனில் நமது மக்களில் சகல தரப்பாரும் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

“once a refugee, always a refugee” -Elie Wiesel-

நமது மக்களுக்கு இந்த அகதி வாழ்கை நிரந்தரமாகாமல் காப்பதில் நமக்கு காத்திரமான பங்குண்டு. அதை நாங்கள் செவ்வனே செய்ய வேண்டும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com