Saturday, March 21, 2009

வர்ஷா கொலையின் சந்தேக நபர்களான ரிஎம்விபி உறுப்பினர்களை தற்கொலை செய்துகொள்ளுமாறு நிர்ப்பந்திக்கும் கட்சித் தலைமை. -பாண்டு-



கொலை கொள்ளைக் கலாச்சாரத்தை ஏற்க மறுக்கும் உறுப்பினர்கள் வெளியேறுகின்றனர்.

திருமலைச் சிறுமி வர்ஷாவின் கொலையுடன் தொடர்புபட்ட ரிஎம்விபி திருமாவட்ட பொறுப்பாளார் ஜனா எனப்படுகின்ற வரதராஜா ஜனார்த்தனன, பாண்டியன், கரன், ஷான் எனப்படுகின்ற ஒப்ரின் மேர்வின் ரெனோவ்ஷான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மக்களுக்கெதிராக மேற்கொண்டுவந்த பல பாதகச் செயல்கள் வெளிவந்துள்ளது. அவர்களின் பாதகச் செயல்களின் வரிசையிலேயே இச் சிறுமியின் படுபாதகமும் அரங்கேறியிருந்தது. துரதிஸ்ட வசமாக சிறுமியின் விடயத்தில் ரிஎம்விபி ஆதரவாளரான கணனி பயிற்றுவிப்பாளர் ஒருவர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருந்தமை ரிஎம்விபி யினருக்கு ஓர் பின்னடைவாக அமைந்ததுடன் வர்ஷாவின் தந்தையாருக்கு ஏற்பட்ட நியாயமான சந்தேகமும் பொலிஸாருக்கு சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தலமைப் பீடத்தின் உத்தரவுக்கமையவே இச்செயலில் இறங்கியதாகவும், சிறுமியை கடத்தி 3 கோடி ரூபாய்களைப் பெற்று, அப்பணத்தைக் கொண்டு கட்சியின் பிரச்சாரப் பணிகளுக்ககா வானொலி நிலையம் ஒன்றை நிறுவப் போவதாக தலமைப்பீடத்தால் தமக்கு தெரிவிக்கப்பட்டதாக சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கைது செய்யபட்டவர்களை மீட்க அல்லது பொலிஸார் இது தொடர்பாக மேற்கொள்ளும் விசாரணைகளைத் தடுத்து நிறுத்த முதலமைச்சர் பிள்ளையான் பல முனைகளாலும் முனைந்திருந்தும் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.

திருமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டகர் வாஸ் குணவர்த்தன அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. விசாரணைகளில் இருந்து தாம் தப்பித்துக்கொள்ள முடியாது என உணர்ந்து கொண்ட சந்தேச நபர்கள், தாம் இவ்வாறு 30க்கு மேற்பட்ட கடத்தல் கொலைகளை புரிந்துள்ளதாகவும் அவ்வாறு கொலை செய்தவர்களை ஆழ்கடலில் வீசியதாகவும் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் அவ்வாறு தெரிவித்ததற்கான காரணம் தாம் இவ்விடயத்தின் மூலம் தண்டனை பெறும் போது தம்மை இச்செயலுக்கு தூண்டிய மற்றும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உணர்வாகும்.

இந்நிலையில் பொலிஸ் காவலில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் மர்ம மரணங்களின் பின்னணியில் ரிஎம்விபி யின் தலமைப் பீடம் உள்ளதாக தெரியவருகின்றது. மேற்படி விசாரணைகளின் போது விடயங்களை கக்கியுள்ள தமது உறுப்பினர்களை கொலை செய்வதற்கு தலமைப்பீடம் திட்டமிட்டு செயலாற்றி வருவதாகவும் அவர்கள் அனைவரும் கொல்லப்படுவர் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. அந்தவகையில் பொலிஸ் நிலையத்திற்கு அடிக்கடி செல்லும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்த்தர்கள் அங்கு பிடிபட்டுள்ள தமது உறுப்பினர்களை எவ்வாறாவது தப்பி ஒடி விடுமாறு அல்லது தற்கொலை செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாக தெரியவருகின்றது. அந்த வகையிலேயே சிறுமியின் கொலையுடனும் மேலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அப்பிரதேசத்தில் மேற்கொண்டுள்ள பல கொலைகளுடனும் தொடர்புடைய திருமலை மாவட்டத்தின் அக்கட்சிக்கான பொறுப்பாளரான ஜனா என அனைவராலும் அறியப்படுகின்ற வரதராஜா ஜனார்தனன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அச்சகம் ஒன்றிற்ககா திருமலைப் பிரதேசத்தில் பயன்படுத்தப்பட்டுவந்த கட்டிடம் ஒன்றினுள் 2 கைக்குண்டுகளையும் அங்குள்ள ஒர் மேசையின் மீது புத்தகம் ஒன்றினுள் சயனைட் வில்லை ஒன்றையும் மறைத்து வைத்த ரிஎம்விபி தலைமை திருமலையில் ஜனா தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று இவ்விடத்தில் இருகுண்டுகளும் சயனைட் வில்லையும் வைக்கப்பட்டுள்ளது எனவும் சயனைட் வில்லையை எவ்வாறாவது உண்டு தற்கொலை செய்து கொள்ளவேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அவரது குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்படுவர் எனவும் ஜனா மிரட்டப்பட்டுள்ளார்.

விபரீதத்தை உணர்ந்த ஜனா தான் மேற்படி இடத்தில் குண்டுகள் இரண்டை மறைத்து வைத்துள்ளதாக கூறி பொலிஸாரை அங்கு அழைத்துச் சென்று ரிஎம்விபி யினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சயனைட் வில்லையை எடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்தும் அங்கு தடுத்து வைத்துள்ளவர்கட்கும் அவ்வமைப்பு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக இன்று அவ்வமைப்பில் இருந்து வெளியேறி கருணா தலமையில் பொது ஜன ஜக்கிய முன்னணியுடன் இணைந்து கொள்ள வந்துள்ள 25க்கு மேற்பட்டோரும் தெரிவிக்கின்றனர்.

கரடியனாறு பிரதேசத்தில் பிள்ளையானின் கட்டுப்பாட்டில் இருந்த முகாம் ஒன்றில் தங்கியிருந்த மேற்படி உறுப்பினர்கள் தாம் வர்ஷாவின் கொலையை தொடர்ந்து அவ்வியக்கத்தில் இருந்து வெளியேற முடிவெடுத்ததாக தெரிவிக்கின்றனர்.

வர்ஷாவின் கொலையின் முதலாவது எதிரியாகிய ஷான் எனப்படுகின்ற ஒப்ரின் மேர்வின் ரெனோவ்ஷான் என்பர் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோட முற்பட்டபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது தாய் திருமலை மாவட்ட நீதவான் முன்னிலையில் தனது மகனின் உடலத்தை பாரமெடுக்க மறுத்துள்ளார். "காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு" என்பார்கள், ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அராஜகத்தின் பலாபலன் பெற்ற தாய் தனது பெற்ற பிள்ளையின் சடலத்தை பாரமெடுப்பதற்கு பகிரங்கமாக மறுப்பு தெரிவிக்கும் அளவிற்கு கொண்டு வந்துள்ளது. இத்தாயின் மனவிரக்தியை பார்க்கும் போது ரிஎம்விபி யின் இறுதி காலம் நெருங்கி விட்டதெனலாம். மேலும் கடந்த வாரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை தமிழ் மக்கள் திருமலையில் செய்ய முற்பட்ட போது பிள்ளையான் தனது அதிகாரங்களை பயன்படுத்தி அம்மக்களது உணர்வுகளை அடக்கி வைத்துள்ளார். ஆனால் அவை என்றோ ஒர் நாள் தீப் பிளம்பாக வெடிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் கிடையாது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் கிழக்கு மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்கள் வேண்டும் என்பது எதற்காக? என்பது இப்போது தெளிவாக விளங்குகின்றது. இவ்வாறு தனது சகாக்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறி மனித குலத்திற்கு எதிராக செயற்படும்பொழுது அவர்களை தனக்குள்ள அதிகாரம் கொண்டு காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதுவேயாகும்.

இன்று வர்ஷாவின் கொலை பிள்ளையானின் முகத்திரையைக் கிளித்தெறிந்துள்ளது. மக்கள் உண்மைகளை உணர்ந்துள்ளனர்.



No comments:

Post a Comment