புலம்பெயர் தேசத்தில் நிதி வசூலிப்பு இன்னும் வேண்டுமா? - விருகோதரன்.
இன்று வன்னியிலே புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொன்னால் புலம்பெயர் தேசத்து புலிகளின் பிரச்சாரப்பீரங்கிகள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். மாவிலாற்றிலே எழிலன் தண்ணீரைப் பூட்டிய போது அவர்களுக்கு பெரிய பூரிப்பு. இந்திய தமிழ் நாட்டை ஒத்ததோர் கற்பனை. இந்திய அரசியல்வாதிகள் காவேரி அணையை பூட்டி விட்டு நிற்பதும் பின்னர் அதன் பேரால் அரசியல் மேற்கொள்வதும் போன்றதோர் சந்தோசம் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த சிற்றின்பம் சிறுத்து சோகமே நிலையாகி விட்டது.
இன்று புலிகள் வன்னியின் ஓர் சிறிய பிரதேசத்தினுள் முடக்கப்பட்டுள்ளார்கள். புலிகள் மனித கேடயங்களாக பிடித்து வைத்துள்ள ஒருதொகை மக்களை விடுவித்து இருப்பார்களாக இருந்தால் அவர்களின் தோல்வி என்பது கடந்த காலமாகியிருக்கும் என்பதை வன்னியில் படையினரின் முன்னேற்ற வேகத்தை பார்க்கின்றபோது உறுதிபடக்கூறமுடியும். ஏது எவ்வாறாயினும் வன்னியில் உள்ள மக்களை முடியுமானவரை அழிவுகளுள் சிக்காமல் மீட்டெடுப்பதற்கு தொடர்ந்து தமது வியூகங்களை மாற்றி படையினர் போராடி வருகின்றனர்.
சர்வதேச நாடுகள், சர்வதேச மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் வன்னியில் புலிகள் மனிதகேடயங்களாக வைத்துள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என புலிகளுக்கு விடுத்து வரும் வேண்டுதல் செவிடன் காதில் ஊதும் சங்காகியுள்ளது. தாம் விரும்பிய பத்திரிகையை வாசிக்கும் சுதந்திரம், வானொலியை கேட்கும் சுதந்திரம், இலங்கையராக நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்றுவரும் சுதந்திரம், தான் விரும்பிய மனிதர்களுடன் பேசும் சுதந்திரம், தான்விரும்பிய பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் என இலங்கை சனநாயக சோசலிச குடியரசு வழங்கியுள்ள எந்தவொரு சுதந்திரத்தையும் அனுமதிக்க முடியாதவர்களாக வன்னியினுள் அடக்கி வைக்கப்பட்டிருந்த மக்கள் இன்று வன்னியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத ஓர் அராஜக சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பி அதற்கு தமிழ் ஈழம் என பெயர் சூட்டியிருந்த கும்பல் இன்று மக்கள் முன் மண்டியிட்டு நிற்கின்றது. சிறிலங்கா அரசினால் உருவாக்கித் தரப்பட்டுள்ள மோதல் தவிர்ப்பு பிரதேசத்தில் தங்கியிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுள் சென்று தமது உயிரை காத்துக்கொள்ள ஆவலாக காத்திருக்கும் மக்களிடம் புலிகள் கெஞ்சியழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இரு தசாப்தகால வேதனைகளின் பின்னர் வெளியேற நிற்கும் மக்களைத் தடுப்பதற்காக அப்பிரதேசத்தினுள் நுழையும் புலிகளின் சூசை, சொர்ணம், ஜெயம் போன்ற தாதாக்களால் தலைவரை விட்டுவிட்டுச் செல்லாதீர்கள் தலைவர் என்றும் உங்களுடன் இருக்க ஆசைப்படுகின்றார் என்றும் போர் இறுதிகட்டத்தை அடையும்போது அவர் போராட்டக் களத்திற்கு வரத்தயாராக இருக்கின்றார் என்றெல்லாம் பசப்பு வார்த்தைகள் கூறப்படுகின்றது. இந்தப் பசப்பு வார்த்தைகளை நம்ப மக்கள் இன்னும் தாயாராக இல்லை என்பதையும், பிரபாகரன் நிச்சயமாக வெளியில் வந்துதான் ஆகவேண்டும் என்பதும் அன்றேல் அவர் கொண்டுவரப்படுவார் என்பதும் நிச்சயமான ஒன்றாகி விட்டது.
இன்று வரை இந்த தலைவர் எங்கிருந்தார்? வன்னியின் மூன்றில் ஒரு பிரதேசத்தை தலைவருக்கான பாதுகாப்பு வலயமாக பிரகடணப்படுத்தி ஒன்றுக்கு 50 மாளிகைகள் அமைத்து சுகபோக வாழ்வு வாழ்ந்து வந்தார். இப்போது பிரபாகரனுக்கு மக்களோடு வாழவேண்டும் என வந்திருக்கின்ற ஆசை அன்று அவருக்கு இருந்திருக்கவில்லை. மாறாக அவர் மக்களை தனது கண்களால் காணக்கூட ஆசைப்பட வில்லை என்பதற்கு ஆதாரம் அவர் தங்கியிருக்கும் வீடுகளுக்கு அருகாமையில் உள்ள பாதைகளால் மக்கள் பயணிக்கக்கூட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்பதிலிருந்தும,; 30 மீற்றர் தூரத்திற்கு ஒரு பங்கர் அமைத்து தன்னைப் பாதுகாத்துக்கொண்டிருந்தார் என்பதிலிருந்தும் நிரூபனமாகியுள்ளது.
அவ்வாறு மக்கள் அப்பிரதேசங்களுடாக அனுமதிக்கப்பட்டிராதற்கான காரணங்களில் ஒன்று அவர் வாழ்ந்த சுகபோக வாழ்க்கையின் தரத்தை மக்கள் அறிந்து கொள்வர் என்பதுவுமாகும். இன்று அவையாவும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. வன்னியில் உள்ள பிள்ளைகள் குப்பிலாம்பில் படிப்பதற்கு தவித்துக்கொண்டிருக்கையில் பிரபாகரன் மாளிகையில் சோலார்பவர் மின்சாரம். வன்னியில் உள்ள வயோதிபர்கள் வாய்கால்களில் குளித்துக்கொண்டிருக்கையில் பிரபாகரன் மாளிகையில் நீச்சல்தாடாகங்கள், குளியல் அறையில் தேவைக்கேற்றவாறு சுடுதண்ணீர், குளிர்தண்ணீர். இவ்வாறு நான் அடுக்கி கொண்டு போக வேண்டிய தேவை இல்லை காரணம் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும் அவர்களது சுகபோக வாழ்விற்கான சான்றுகளையும் உங்களில் பலர் உணர்ந்திருப்பீர்கள்.
ஆனால் இன்று வரை பிடிபடாத பொருட்களுள் பாத்திரம் கழுவிகளும் (Dishwasher) அடங்கும். வன்னி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் போது புலிகளின் முகாம்களில் 5 நட்சத்திர கோட்டல்களில் பாவிக்கும் பாத்திரம் கழுவிகள் எதற்காக? இப்பணத்தை கொண்டு எத்தைனையோ அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டிருக்க முடியும். சுமார் 10000 பேரது பாத்திரங்களை கழுவப் போதுமான பாத்திரம் கழுவிகள் புலிகளால் தருவிக்கப்பட்டிருந்தது. சிறிலங்காவில் நட்சத்திர ஹோட்டல்களும் வெளிநாடுகளில் சிலரது வீடுகளிலும் பாவிக்கப்படும் மேற்படி ஆடம்பரக் கருவிகள் பிடிபடும் போது புலிகள் பற்றி மக்கள் அறியவேண்டியவற்றில் சில பாகங்கள் வெளிவரும்.
தமிழ் மக்களின் பெயரால் புலம் பெயர் தேசத்தில் வசூலிக்கப்பட்ட பணம் பிரபாகரனதும் அவன் அடிவருடிகளதும் 25 வருடங்களுக்கு மேற்பட்ட சுகபோக வாழ்விற்கும் தேசத்தினதும் மக்களினதும் அழிவிற்கும் பயன்பட்டதே தவிர அப்பணம் எம்மக்களுக்கு எந்த விதத்திலும் ஒர் சுகத்தை கொடுத்திருக்கவில்லை என்பது வேதனை. தமிழ் மக்கள் இலங்கையில் இருந்து விரும்பியோ விரும்பாமலோ, இனநெருக்கடி காரணமாகவோ உழைப்பிற்காகவோ, நாட்டை விட்டு வெளியேறிய போதிலும் அவர்கள் தமது தேசத்திற்காக இனத்திற்காக செய்த அந்த உதவி மதிக்கப்படவேண்டியது, பெருமிதத்திற்குரியது. தனது இனத்தின்மீது, நாட்டின்மீது பற்றில்லாதவன் ஓர் ஜடம் ஆவான். அந்த வகையில் இன்று எமது நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்களில் ஜடங்கள் என்று கூறுவதற்கு எவரும் இல்லை என்றே கூற வேண்டும். அவர்கள் தமது ஆத்ம திருப்திக்காக எமது நாட்டின் பெயரால் மக்களின் பெயரால் தமது பங்களிப்பை செய்திருக்கின்றார்கள். ஆனால் அவை முற்றிலும் அழிவிற்கும் தனி மனித சுகவாழ்விற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளமை வேதனைக்குரியவிடயம்.
இன்று புலிகளின் நிலை என்ன? அவர்கள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். இன்று பிரபாகரனுடன் எஞ்சியுள்ள புலிகள் உயிர்வாழ்வதா இல்லை தொடர்ந்தும் போராடி உயிர் துறப்பதா என்பது பிரபாகரனின் முடிவில் தங்கியுள்ளது. இங்கு தனிப்பட்ட முறையில் பிரபாகரனை எடுப்போமானால் அவர் உலக அரங்கில் எவ்வாறு பார்க்கப்படுகின்றார்? அவர் சுமந்து நிற்கும் நீதிமன்ற தீர்ப்புகள் யாவை? அவர் இத்தனை காலமும் மனிதகுலத்திற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை? இவை யாவும் சர்வசாதாரண விடயங்கள் அல்ல. ஆனால் அவருடன் விரும்பியோ விரும்பாமலோ வன்னியினுள் முடங்கியுள்ள இளைஞர் யுவதிகள் வாழ உரிமையுடையவர்கள். வாழத்துடிப்பவர்கள். எனவே அந்த அப்பாவி இளைஞர் யுவதிகளை பிரபாகரன் விடுவிக்க வேண்டுமாயின் அதற்கான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு பிரபாகரனுக்கு நிதியுதவி செய்து, போரைத் தூண்டிய அனைத்து மக்களினதே ஆகும்.
எனவே எமது மக்களின் உழைப்புகளும் அர்ப்பணிப்புகளும் விழலுக்கு இறைத்த நீராகியுள்ள நிலையில் இன்று எம்மக்கள் முன் பாரியதோர் கடமை முன்நிற்கின்றது. அது யாதெனில், இன்றும் புலம்பெயர் தேசத்தில் புலிகளின் பெயரால் நிதிதிரட்டும் அல்லது பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொள்ளும் புலித்தொழிலாளர்களை மக்கள் முற்றுகையிட வேண்டும். அவர்களிடம் வன்னியில் பிரபாகரன் தனது பாதுகாப்பிற்காக தன்னைச் சுற்றி வைத்துள்ள மக்களையும் போராளிகளையும் விடுவிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். எனவே இந்த இக்கட்டான காலகட்டத்தில் புலம்பெயர் தேசத்தில் உள்ள மக்கள் யார் பூனைக்கு மணிகட்டுவது என்கின்ற மனநிலையில் இருந்து விலகி உடனடியாக அவர்கள் புலிகளது காரியாலயங்களுக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் புலிகளின் தலைமை வன்னியில் உள்ள மக்களையும் எஞ்சியுள்ள போராளிகளையும் விடுவிக்க கோரி அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அடுத்து புலிகளுக்குத் தொடர்ந்தும் நிதியுதவி செய்கின்ற அன்பர்கள் புலிகளை நம்பி தொடர்ந்தும் ஏமாறுவதைத் தவிர்த்து உண்மையிலேயே இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்கின்ற நோக்கம் இருக்குமாக இருந்தால் தமது பணத்தை அங்கு நிலைகொண்டுள்ள ஐசிஆர்சி மற்றும் யுஎன்ஓ போன்று சர்தேச நிறுவனங்களுடாக நேரடியாகவே உதவிகளைச் செய்யமுடியும்.
மேலும் வன்னியிலே ஆக 58 சதுர கிலோ மீற்றர் நிலபரப்பினுள் முடக்கப்பட்டுள்ள புலிகளுக்கு நீங்கள் கொடுக்கும் பணம் அவர்களைச் சென்றடைவதில்லை என்பதையும், அப்பணம் புலிகளின் பெயரால் புலம்பெயர்ந்து வாழுகின்ற புலித்தொழிலாளர்களின் சுகபோக வாழ்விற்கும் அவர்களது தனிப்பட்ட வங்கிக்கணக்குகளிற்கும் செல்கின்றதென்பதையும் உணர்ந்து கொண்டு தொடர்ந்தும் பணம் வழங்குவதை நிறுத்திக்கொள்வதன் மூலம் எமது தேசம் மேலும் அழிவுப்பாதைக்குச் செல்லாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
0 comments :
Post a Comment