திருமைலைச் சிறுமியின் கொலை தொடர்பாக எட்டுப்பேர் கைது. பிள்ளையானின் சகா சுட்டு கொலை. பொலிஸ் அதிகாரி தற்கொலை.
கடந்த புதன்கிழமை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி யூட் றெஜி வர்ஸாவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் எண்மர் திருகோணமலை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் மற்றும் கொலையாளிகள் என கைது செய்யப்பட்டுள்ளோரில் முதலமைச்சர் பிள்ளையானது முக்கிய சகாவாகிய ஜனா மற்றும் வவுனதீவு பிரசேசபை உறுப்பினர் சுறங்க உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேர், கணனி பயிற்சி நிலையம் ஒன்றின் பயிற்றுவிப்பாளர் ஒருவர் மற்றும் ஆட்டோ சாரதிகள் இருவர் என எட்டுப்பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சிறுமியை பாடசாலையில் இருந்து முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே வீட்டிற்கு அழைத்துவருவது வழமை. சம்பவதினம் வழமையான முச்சக்கரவண்டி செல்வதற்கு முன்னர் பிறிதொரு முச்சக்கரவண்டியில் பாடசாலக்கருகில் சென்ற கணனி பயிற்றுவிப்பாளர் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். வழமையாக சிறுமியின் வீட்டிற்கு சென்று கணனி பயிற்றுவிக்கும் இந்த மனிதருடனான பரீட்சயத்தில் சிறுமி அவருடன் சென்றுள்ளார்.
சிறுமியை பாடசாலை முடிந்து அழைத்துச் செல்லும் முச்சக்கரவண்டிச் சாரதி அங்கு சென்றபோது சிறுமி அங்கில்லா விடயத்தை தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். விடயத்தில் மிகவும் பதற்றமடைந்த தாயார் பரிதவித்துக் கொண்டிருக்கையில் தொலை பேசி அழைப்பை ஏற்படுத்திய கடத்தல் காரர்கள் தாம் குழந்தையை கடத்தி வைத்துள்ளதாகவும் 3 கோடி ரூபா பணம் தந்தால் குழந்தையை விடுவிப்பாதாகவும் அன்றேல் கொலை செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் கட்டார் நாட்டில் சாரதியாக தொழில் புரிந்துவரும் சிறுமியின் தந்தையை தொடர்பு கொண்ட கடத்தல் காரர்கள் தாம் குழந்தையை கடத்தி வைத்திருக்கும் செய்தியை தெரிவித்து 3 கோடி ரூபா பணத்தை கோரியுள்ளனர். இப் பேரம் பேசல்களின் போது பணம் திருமலை மாவட்டத்திற்கு வெளியே அல்லது வெளிநாடொன்றில் பரிமாறப்பட வேண்டும் என நிபந்தனை விதித்த கடத்தல் காரர்கள் குழந்தை சம்பந்தமாக பேசும் போது குழந்தையை அவளது தகப்பன் அழைக்கும் செல்லப் பெயரைப் பிரயோகித்துள்ளனர். இச்செல்லப்பெயர் விடயத்தில் சந்தேகம் கொண்ட தந்தை இக்கடத்தலில் தமது குடும்பத்துடன் மிகவும் நெருங்கிய ஒருவர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்க தொடங்கினார். அத்துடன் குழந்தை அழுவதை பிரதி செய்து அது கணனி ஊடாக தகப்பனுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இவ்விருவிடயங்களையும் ஒப்பிட்டு சிந்தித்த தந்தையாருக்கு கணனி பயிற்றுவிப்பாளர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தனது சந்தேகத்தை தந்தையார் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து கணனி பயிற்றுவிப்பாளர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது பல தகவல்கள் வெளிவந்துள்ளது. பொலிஸ் விசாரணைகளில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் திருமலை ஓர்சில் முகாமில் தடுக்து வைக்கப்பட்டுள்ளது வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அம்முகாமில் இருந்து அனைத்து உறுப்பினர்களும் முகாமை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளதாகவும் முகாம் வெற்றிடமாக உள்ளதாகவும் தெரியவருகின்றது.
கணனி பயிற்றுவிப்பாளர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குழந்தையை கடத்த ஒத்தாசை புரிந்த முச்சக்கர வண்டிச் சாரதி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட பொறுப்பாளர் ஜனா, வவுனதீவு பிரதேச சபை உறுப்பினர் சுறங்க, பாண்டியன், நிசான் ஆகிய நால்வர், தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் நட்பை பேணி வந்த பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மற்றும் குழந்தையை வழமையாக வீட்டிற்கு அழைத்துச் செல்லும் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் சிறுமியை மயங்க வைப்பதற்கு மயக்க மருந்து கொடுத்துதவிய வைத்தியர் ஒருவர் தேடப்படுகின்றார்.
பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த இளைஞனின் தாயார் திருமலை குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தராவார். இவ்விடயத்தில் தனது மகன் ஈடுபட்ட அவமானத்தை தாங்க முடியாத தாயாரான பொலிஸ் அதிகாரி விசமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது. விசாரணைகளை பொலிசார் மிக தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், சற்று நேரங்களுக்கு முன்னர் விசாரணையின் நிமித்தம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த நிசான் என்பவரை ஜீப் வண்டியில் அழைத்துச் செல்லுகையில் அவர் தப்பி ஒட முற்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் மேற்படி சந்தேக நபர் இடை வழியில் வைத்து பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் கழுத்தை கடித்துத் தப்ப முயன்றதாகவும் இதன்போது பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு ஐரோப்பிய நேரம் 10 மணிக்கு டண் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலான அவர்களிடம் பல மக்கள், இக்கொலை தொடர்பாக வினவியபோது அதற்கு பதிலளித்த அசாத் மௌலான அவ்விடயத்தில் தமது உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விடயத்தை முற்றாக மறைத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார். அவ்வாறு அவர் கைது விடயத்தை வெளிவிடாமல் மறைத்ததற்கான காரணம் தமது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தமது சகாக்களை தப்பவைத்துக்கொள்ள மேற்கொண்டுவரும் முயற்சிகள் பலனளிக்கும் என்ற எதிர்பார்ப்பிலாகும் என அர்த்தப்படுத்தலாம். ஆனால் திருமலை பொலிஸ் உயர்மட்ட தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை துரித கதியில் முடித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அதி உயர் தண்டனையை பெற்று கொடுப்பர் என தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment