இந்திய வைத்தியர்களின் வருகைக்கு பலத்த எதிர்பு. சித்தார்த்தன் விசனம்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்தியம் செய்யும் பொருட்டு இந்திய வைத்தியர்கள் புல்மோட்டைப் பிரதேசத்தில் வைத்தியசாலை நிறுவ இலங்கை அரசு அனுமதி வழங்கியமைக்கு அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் பலத்த எதிர்பை தெரிவித்துள்ளதுடன் அவர்ளுக்கு வழங்கியுள்ள அனுமதியை உடனடியா ரத்துசெய்யும் படியும் கோடியுள்ளது.
இதுவிடயமாக ஊடவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அ.இ.வை.அ.ச தலைவர் வைத்தியர் நிசாந்த தசநாயக்க அவர்கள், மேற்படி வைத்தியசாலைக்கு மகிந்த அரசு அனுமதி வழங்கியுள்ளமையானது இலங்கை வைத்திய விதிமுறைகளை மீறுகின்ற செயலெனவும் இலங்கையில் உள்ள நோயாளிகளுக்கு வைத்தியம் செய்கின்ற எந்தவொரு வைத்தியரும் இலங்கை சுகாதார அமைச்சின் கீழுள்ள வைத்திய சங்கத்தில் தம்மை பதிவு செய்து கொள்வதுடன் வைத்திய சங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற பரீட்சைக்குத் தோன்றி அதில் சித்தி பெற வேண்டும் என்பது சட்டமாகும் எனவும் அவற்றை தாண்டி இந்திய வைத்தியர்கள் இங்கு செயலில் இறங்கியுள்ளனர் எனவும் தெரிவித்ததுடன் இலங்கையில் தற்போதைக்கு 13000 வைத்தியர்கள் மற்றும் தாதிகள் சேவையில் உள்ளபோது இலங்கைக்கு இந்திய வைத்திய குழுவொன்று அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது விடயமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, விதிமுறைகளை யாவரும் பின்பற்ற வேண்டும் என்பது முக்கியமான விடயம் எனக்கூறிய அவர், இன்று இங்குள்ள யுத்த சூழலிலே வடகிழக்கு பிரதேசங்களில் வேலை செய்வதற்கு அதிகாரிகள் சுயமாக முன்வராத நிலையில் புல்மோட்டையில் தளம் அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்திய சேவைபுரிவதற்கு இந்திய வைத்தியக்குழு முன்வந்தது மிகவும் பலனுள்ளவிடயம் என்பதுடன் பாராட்டுதற்குரியது. இவ்விடயமானது இலங்கைக்கு புதியதொன்றல, சுனாமி அனர்த்தங்களின் போது பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்ட எல்லைகளற்ற வைத்திய சேவைக்குழு மற்றும் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் நேரடியாக மக்களுக்கு வைத்தியம் புரிந்திருக்கின்றனர். எனவே சம்மந்தப்பட்டவர்கள் இவ்வாறான விடயங்களில் தமது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்ற அவர் அவ்வாறு சகலரும் தமது கசப்புணர்வுகளை மறக்கும் போது இலங்கை புரையோடிப்போய் இருக்கும் பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியும் என்றார்.
0 comments :
Post a Comment