வடக்கு எதிர் கிழக்கு -யஹியா வாஸித்-
பத்தாவது முறை தடுக்கி விழுந்தவனை பூமித்தாய் முத்தமிட்டு சொன்னாள்.மகனே ஏற்கனவே
ஓன்பது முறை தடுக்கி விழுந்தவனல்லவா நீ. டோன்ட் வொறி புறப்படு. அது போல்தான் எங்கள் தலைவர் தடுக்கி விழுந்துள்ளார். வீறுகொண்டெழுவார் என புலி ஆதரவாளர்கள் சொல்லிக் கொண்டு தவமிருக்கின்றனர். நிச்சயமாக தலைவர் எழும்ப வேண்டும் நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுதான் எமது பிரார்த்தனையும். அப்போதுதான் நடக்க இருப்பவை நல்லதாகவே நடக்கும். நான் கிழக்கு மாகாண மக்களுக்கு என எழுதிவரும் கட்டுரைகளைப் பார்த்து விட்டு பலர் பல விதமான அபிப்பிராயங்களை தெரிவித்திருந்தனர்.
சிலது. சரி மொத்த யாழ்ப்பாணிக்கும் ஒரு காக்கா வைக்கிறான்டா ஆப்பு என சந்தோஷப்பட்டும், இன்னும் பலர் நாங்க என்ன கிழக்கு மாகாணத்தவர்கள் எண்டா சும்மாவா எங்களுக்கும் எல்லாம் தெரியும் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு என்றும், இன்னும் சிலர் இதைப் பார்க்கும் போது யாழ்ப்பாண அந்த செந்நிற இருவாட்டி மண்ணும் ஒரு காலத்தில் சளைத்ததல்ல என்றும் தூது விட்டிருந்தனர்.
தரப்படுத்தல் என்ற ஒன்று வந்ததனால் தான் கிழக்கு மாகாண மொத்த மக்களும் நன்மை அடைந்தார்கள் என்பதை முதலில் கிழக்கு மாகாணத்தவர்கள் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். யாழ்ப்பாணி 3ஏ.1பீ எடுத்து பீஎஸ்ஸி போக தடுமாறிய போது கிழக்கு மாகாணத்தவர்கள் 3சீ மட்டுமே எடுத்து மெடிக்கல் கொளேஜ் போக வைத்த புண்ணியம் இந்த தரப்படுத்தல் என்ற வைரசுக்கு உண்டு. இப்போது வீட்டுக்கு ஒரு டாக்குத்தர்,தெருவுக்கு நாலு இன்ஜீனியர், கூப்பிட்ட குரலுக்கு எக்கவுண்டன். தடுக்கி விழுந்தால் டபுள் மெட்ஸ் ரீச்சர், என்ட புள்ள சவுதில கெமிக்கல் இன்ஜினியர்,அவன் மச்சான் இப்ப நாசாவில வேலை செய்கின்றான் மச்சான் என்று கிழக்கு மாகாண மக்கள் பீத்திக் கொள்வதற்கு முழு முதற் காரணம் இந்த யாழ்ப்பாணிகளே.
யாழ்ப்பாணி யாழ்ப்பாணிக்கு ஏசுவான், பேசுவான் அதில் தலையிட நமக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்களுக்குள் சைவ, வெள்ளாள என்று தொடங்கி பல ஆயிரம் 'வடு'க்கள் இருக்கின்றது. அதில் தலையிட எமக்கு எந்த உரிமையும் கிடையாது. அதற்குரிய தகுதியும்
எமக்கு இல்லை. அது அவர்களின் உள் வீட்டுப் பிரச்சனை. சக்களத்திச் சண்டை சமாதானம் ஆகி விடுவார்கள். சமரசம் செய்து கொள்வார்கள். பரம்பரைச் சண்டையல்ல இது. நாளைக்கே சமாதானம் ஆகி விடுவார்கள். இப்போது சைவ வெள்ளாளருக்கு திட்டும் அனைவரும் அவன்ட ஆங்கில கிறித்துவ மிஷனறியில ரியுஷன் எடுத்தவர்கள்தான்.
ஆரோக்கியமாக எல்லோரும் அரசியல் செய்தவர்கள்தான். இந்திய 'ரோ'என்கின்ற குட்டிப் பிசாசு வந்து அவர்களை கண்டந் துண்டமாக சாமியாட வைத்து விட்டது. எனது இஸ்லாம் சமயத்தில் சிலை வணக்கம், சாமி கும்பிடுவது என்பன தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி இருக்கு மானால், என்னைப் படைத்த அவ்வாஹ், என்னைப் பெற்றெடுத் தாய்க்கு அடுத்ததாக ஒவ்வொரு யாழ்ப்பாணியின் காலடி மண்ணெடுத்து சாம்பலாக்கி என் உடம்பெல்லாம் பூசி தில்லையம்பலத்தானுடன் தத்தோம், தத்தோம், தித்தோம், தரிகிடதோம் என சாமி ஆடியிருப்பேன்.
அங்கே நிறைய படிக்க இருக்கிறது சகோதரர்களே. நாம் கடுகளவை வைத்துக் கொண்டு குதிக்க வேண்டியதில்லை. அங்கே உலகளவு உலகளவு சரக்கிருக்கிரது. நானும் விபரம் புரியாமல் 'பனங்கொட்டை சூப்பி'கள் எனத் திட்டியவன்தான். நான் அங்கே திட்டின போது அவன் பனங்கொட்டையை பிளந்து சைக்கிளுக்கு 'டைனமோ' மோட்டார் பைக்கிற்கு எரி பொருள் என அதை மாற்றிக் கொண்டிருந்தான் நண்பர்களே. யாழ் வெலிங்டன் தியேட்டர் அச்சகத்தடியில் செட்டிக்கு தண்ணி தெளித்தெதிலிருந்து மட்டக்களப்பில் நாக படைக்கு (வாசு தேவன்,வாம தேவன்) அவர்கள் பாலுற்றிய போதெல்லாம் கிட்ட இருந்து பார்த்தவன், சாண்டோ சங்கர தாஸ் என்கின்ற மட்டக்களப்பபு இரும்பு மனிதனின் தாய்வழி மாமாவிடம் நம்ம அரசியல் ஆய்வாளர் சிவராம் இங்கிலீசு படித்த (இந்த அரசியல் சரிப்பட்டு வராதுப்பா) காலத்திலிருந்து போன வாரம் வேம்படி மகளிர் மகா வித்தியாலய இரண்டாவது பில்டிங், இரண்டாவது மாடியில் இரண்டு மேசைகளை அடுக்கி ஏறி நின்று சினைப்பரால் குறிபார்த்து ஈ.பி.ஆர்.எல்.எப்.சுபத்திரனை எய்ம் வைத்தது வரை புரோட்டன், நியூத்திரன், இலத்திரன் அளவு இல்லா விட்டாலும் அணுவிலும் அணுவளவு கிட்ட இருந்து பார்த்தவன் அன்பர்களே.
சோனிகளின் தடங்களைப் புரட்டிப் பார். அங்கே யுத்த சாயல்கள்தான் வீசும் என ஒரு சோனிக்காக்கா எழுதி இருந்தார். வாப்பா, தம்பி, மகனே முகம்மது நபி ஆடு வளர்த்தார், வியாபாரம் செய்தார், சக்காத் (தர்மம் )கொடுத்தார், நோன்பு (விரதம்) பிடித்தார், தியானம் செய்தார், மக்களை நன்மையின் பால் அழைத்தார் என முப்பது அத்தியாயங்கள் இருக்கிறதே வாப்பா. அதை படியுங்கோ வாப்பா.
பிளீஸ் நீங்கள் இப்போது தண்ணீரைத்தான் ஊற்றினாலும் அது அந்த மக்களுக்கு பெற்றோளாகத்தான் தெரியும். ஆறுதல், ஆறுதல், ஆறுதல் ஒன்றைத்தவிர வேறு எந்த ஒத்தடமும் அந்த யாழ் புண்ணியவான்களுக்கு தேவையில்லை. இது முள்ளில் விழுந்த சேலைஅவர்கள் ரொம்பசாதுரியமாக எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் பொறுமையின் கடல் நண்பர்களே.
அவர்களின் தவங்களுக்கு முன்னால் நாம் நேற்று முளைத்த காளான்கள்.
யாழ் பொ.அம்பலவாணர் தொடங்கி கோண்டாவில் கிழக்கு வரையும், மெட்ராஸ் ஏ.வி.எம்.
ஸ்ருடியோ முதல் அண்ணா சாலை சாந்தி தியேட்டர் வரை என்னை இந்த மகா முட்டாளை
சைக்கிள் கெரியரில் வைத்துக் கொண்டு வேர்க்க விறு விறுக்க சைக்கிள் உழக்கிய ஒரு யாழ்ப்பாணச்சியின் பிள்ளையிடம் கொஞ்ச நாள் வளர்ந்தவன் நான். யா அல்லாஹ். நாற்பது தளபதிகள்,ஆயிரத்தெட்டு எடுபிடிகள், பத்தாயிரம் பத்தாயிரமாக நோட்டுக் கட்டுகளுடன்
சிறுசுகள் குதிக்கும் போது அந்த தலைவன் இவர்களுக்கு இரவு சாப்பாட்டுக்கு சாப்பாட்டு
மூட்டை தூக்கிக் கொண்டிருந்தான். அவனைப் போல் பிள்ளைகளைப் பெற்ற பல லட்சம்
யாழ்ப்பாணச்சிகளை பாதை திறக்காத போது இரண்டு வெள்ளையனுடன் வன்னிக்குள்ளால
புஸ் பைக்கிளில் போய் தரிசித்திருக்கின்றேன்.
ஆம் இல்மனைட்டுக்கு விலை பேசப் போன காலமது. (அங்கேயும் காக்கா பிஸ்னசுக்குத்தான் போயிருக்கானா ?) அப்புறம் பாதை திறந்து இரண்டு மாதத்தில் ஒரு அந்தி சாயும் வேளை ரோட் குளோஸ். தம்பிகளின் செக்பொயின்ட்டுல நைட்டு நிற்கும் போது புள் தண்ணியில ஆய்வாளரும் (சாண்டோ சங்கரதாஸ் வீட்டு கொல்லையில ஒழித்த அதே சிவராம் ) நின்றிருந்தார். வன்னிக்குள்ள போய் 'சைற்'எடுத்துப் போட்டு வாற நேரம் அது.அதற்கு நான்கு மாதத்துக்கப்புறம் தான் நம்ம சரிநிகரில்லாத அண்ணா (அப்பனே சிவ சிவா ) 'சைற்' எடுத்திருந்தார். கிளி நொச்சியில இப்போதைய பொலீஸ் பொறுப்பாளர்ன் புத்தகக்கடைக்கு முன்னால் உள்ள சாப்பாட்டுக் கடையே சரணம் அய்யப்பா.
கிழக்கு மாகாணத்தை பற்றியே எழுதிக் கொண்டிருக்கிறாரே எங்களிடமும் கடல் வளம் இருக்கு
என 'இராஜ்குமார்' குத்திக் காட்டியிருந்தார். இராஜ்குமார் அண்ணா மயிலிட்டியில் இருந்து 14 ஹோஸ் பவர் இன்ஜின் பொருத்திய 18 அடி பைபர் கிளாஸ் போர்ட்டில் 70 நிமிடத்தில் வேளாங்கண்ணி போன அனுபவமும் உண்டண்ணா. வேலணை நாங்கள் பெண்ணெடுத்த ஊர் அண்ணா. கணவாய்கறி எங்கட ராத்தாக்கள் சமைப்பதைவிட வேலணைக்காறியின்ட கைபட்டால்தான் அதற்கு மவுசண்ணா. மன்னார் நானாட்டான் நாங்கள் எக்கவுண்ட்ஸ் ரியுஷன் கொடுத்த ஊர் அண்ணா. மன்னார் நறுவிலுக்குளம் நண்டை கொண்டுவந்து நீர்கொழும்பு 'சன் றைஸ் ஹோட்டலில்' ஜப்பான் காறனுக்கு விலை பேசிய அனுபவமும் உண்டண்ணா. சும்மா ஊருல மாடுமேய்த்துக் கொண்டிருந்த என்னை கூட்டிக் கொண்டு போய் கொல்லும் தூரம், செல்லும் தூரம் எல்லாம் சொல்லித்தந்து (ஷோபா சக்தி மன்னிப்பாராக) இப்போது சொல்லணா பொதிகளைச் சுமக்க வைத்துப் போட்டாங்கண்ணா. அதனால இப்ப உங்களோட நாங்க ரொம்ப கோபமாக இருக்கிறோம் அண்ணா. நீங்க இந்த ஆயுத கலாச்சாரத்தை விட்டுட்டு வாங்கோண்ணா. அப்புறம் கோண்டாவில் புகையிலைக்கும், கொக்குவில் சுருட்டுக்கும் உலக சந்தையில் விலை பேசுவோம் அண்ணா(எனக்கு எழுத்தறிவித்த புன்னாலைக்கடடுவன் சோதிலிங்கம் வாத்தியாருக்கே எல்லாப் புகழும் போய் சேரும் )அந்த மனுஷன் சொன்னான் டேய் நாசமறுவா மாட்டு சாணியை எருவாக்கலாம், அதனால் ஊது பத்தி செய்யலாம், காயவைத்து அடுப்பெரிக்கலாம், தோலை செருப்பு யாவாரிக்கு விக்கலாம், இறைச்சியை காக்காமாருக்கு விற்கலாம், முள்ளை சீனி வியாபாரிக்கு விற்கலாம். மொத்தமாக மாடு மேய்ப்பது நல்ல தொழில்டா என்று படிச்சி படிச்சி சொன்னான். ஹ்ம்ம்ம்...
பாதை திறந்தவுடன் காசை காசென்று பார்காமல் 11 லட்சம் ரூபா கொடுத்து வாங்கிய டொயாட்டா ஹைஏஸ் வேனில் இரண்டாவதாகப் போன அனுபவமும் உண்டண்ணா. நண்பருக்கு வாங்கிச் சென்ற மூன்று கேஷ் குக்கர்களில் ஒன்றைத் தண்டமாக கொடுத்து விட்டு இரண்டுக்கு ஐயாயிரம் ரூபா பைன் கட்டிய அனுபவமும் உண்டண்ணா. இடை வெளியில் குட்டிக் குட்டிப் பையன்களிடம் 'இரண்டு ரூபாவுக்கு ஒரு கவளம்'பாலைப் பழம் வாங்கித் தின்ற அனுபவமும் இனிக்குதண்ணா. வேனுக்குள்ள கிடந்த 'கார்பட்'டை கிளி நொச்சியில் தாரைவார்த்த கதையைச் சொல்லி அழ நேரமில்லை போங்கண்ணா.
செக்குக்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத நான் ஐ.நா.உயர் அதிகாரிகளின் தாய்.பிள்ளைகளுடன் சில,பல சமயம் ஈவினிங் பார்ட்டிகளில் கலக்க முடிகின்றது என்றால்
அதற்கு முழு முதற்காரணம் எனக்கு வர்த்தகத்தை வரிக்கு வரி சொல்லித் தந்த அந்த தேவச்சந்திரன், அந்த வரதராசன் போன்ற பனங்கொட்டைகளையே சாரும்.( யாழ்ப்பாண மக்களே பிளீஸ் மன்னித்து விடுங்கள். உங்களை சந்தோஷமாகப் பாராட்ட வேறு வார்த்தைகள் இல்லை ஐயன்மீர்) VIII
15-03-2009
0 comments :
Post a Comment