Saturday, March 28, 2009

இலங்கை அரசும்,வேலை வாய்ப்பின்மையும். – யஹியா வாஸித் -

இன்றைய யுத்த சூழலில் சிறிலங்கா அரசு பாரிய வேலைவாய்ப்பின்மையை எதிர் நோக்கி உள்ளது. மேலும் எதிர்வரும் காலங்களில் இன்னும் பணநெருக்கடி, மற்றும் திருட்டுக்கள், கொள்ளைச் சம்பவங்கள், அரச அலுவலகங்களில் ஊழல்களையும் எதிர்பார்க்கலாம். இவைகளை கூர்ந்து பார்க்கும் போது யுத்தத்தில் செலுத்திய கவனத்தை விட வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட வில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக நாணய நிதியம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம், இஸ்லாமிய வங்கிகள் என பல இருந்தும் இவற்றுடனான அபிவிருத்தி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதா அல்லது அவற்றுடனான வேலை திட்டங்கள் பலனளிக்கவில்லையா என எண்ணத் தோன்றுகிறது.

உதாரணமாக ஆசிய அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக அனுராதபுர பொலனறுவை பாதை செப்பனிடப் பட்டுள்ளதை நாம் அறிவோம். அதே போல் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் கொழுத்த வியாபாரிகளுக்கு மட்டும் கொன்றக்க்ட் கொடுக்கும் வேலைகள் மட்டும்தான் இதுவரை நடை பெற்றதா? அன்றாடம் காய்ச்சிகளான மக்களினது வயிறுகளை நிரப்ப இந்த அமைப்புகளினூடாக ஏதாவது செய்யப் படவில்லையா ? ஏன் இப்போது சிறிலங்கா அரசுக்கு கடன் தர உலக நாடுகள் நிபந்தனை விதிக்கின்றன ? இவர்களின் துணை இல்லாமல் எமது மக்களைக் கொண்டே நாம் அபிவிருத்தி செய்ய முடியாதா ?

இன்று உலக நாடுகள் எங்கும் எம்மவர் குவிந்து இருக்கின்றனர். இவர்களை சிறி லங்கா அரசு
மாதம் 50 பேர் அல்லது 100 பேர் என அழைத்து நமது நாட்டில் சிறு சிறு தொழிற்சாலைகளை அமைக்க ஊக்கப்படுத்தலாமே..ஏற்கனவே இந்த வேலையை அரசு செய்வதை நாம் அறிவோம். அப்படி வருபவர்கள் எல்லாம் ஜனாதிபதியுடனும், அமைச்சர்களுடனும் நின்று புகைப்படம் எடுத்துவிட்டு பாரிய கொன்றக்ட்களுக்கு அடித்தளமிட்டுவிட்டு தங்கள் வயிற்றை மட்டும் நிரப்புபவர்கள். அவர்களை தவிர்த்து சாதாரண ஐரோப்பிய, அமெரிக்ககுடியுரிமை பெற்றவர்களை அழைக்க வேண்டும். இதை எக்ஸ்போர்ட் டெவலப்மன்ட் போர்ட் மற்றும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதுவராலயங்கள் ஊடாக செய்யலாம். அவர்கள் பற்றிய பூரண தகவல்களை சிறிலங்காவில் உள்ள கிராம சேவை உத்தியோகத்தர் ஊடாகப் பெறலாம்.

பாரிய அளவில் பணத்தை வைத்துக் கொண்டு சிறிலங்காவில் என்ன செய்வது என தடுமாறும் இவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். முதல் ஒரு வருடத்திற்கு லட்சம் பேர் என ஆரம்பிக்கலாம். இதில் 50ஆயிரம்பேர் 10அயிரம் டொலர், ஏனையவர்கள் 25 லட்சம் இருந்து ஒரு லட்சம் டொலர் என எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 500 கோடி டொலர் திரட்ட வாய்ப்புள்ளது. முதல் 4 வருடத்துக்கு டெக்ஸ் பிறீ, இறக்குமதி சலுகை, அவர் தனது சொந்த கிராமத்தில் தொழில்தொடங்க உடனடி வியாபார பதிவு என சில சலுகைகளை வழங்குவதுடன் அவரது கிராமத்தில் என்ன செய்யலாம் என்ற ஆலோசனைகளையும் அரசு எவ்வித தாமதமின்றியும் வழங்க வேண்டும்.

உடனடியாக ஐம்பதினாயிரம் பேர் தொழில் தொடங்கினால்,ஒருவர் இரண்டு பேருக்கு வேலை வாய்ப்பழித்தாலே போதும் குறைந்தது ஒரு லட்சம் வேலையற்றோர் பிரச்சனையாவது தீர்க்கப்படும். குறிப்பாக கணவனை இழந்த, உறவினரை இழந்த பலருக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

நிறைய பழவகைகள் அதாவது மாம்பழம்,வாழைப்பழம்,பலாப்பழம் என்பன வடக்கில் நிறைய பழுதடைவதை தடுக்க அவைகளை எவ்வித பௌதிக மாற்றங்களுமில்லாமல் உலர வைக்க கூடிய சிறிய பாரிய இயந்திரங்களை ஸ்வீடனில் இருந்து தருவித்து ( 100யு.எஸ்.டாலர்) அவர்களுக்கு வழங்கலாம். சாதாரண மின்சாரம் அல்லது சோலார் (சூரிய சக்தி) இல் இயங்கக் கூடிய இச்சாதனத்தால் பல ஆயிரம் வட பகுதி மக்கள் பலனடைவார்கள்;. மீன், காய்கறி, என்பவற்றையும் இவ் இயந்திரத்தின் மூலம் பதப்படுத்தலாம்.

அரசு மத்திய வங்கி ஊடாக நாள் பின்போட்ட காசோலை (போஸ்ட் டேற்றட் செக்)களை வறிய, வேலை வாய்ப்பற்ற, உழைக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு வழங்கலாம். பத்தாயிரம் ரூபா முதல் பத்துலட்ச ரூபா வரையான இரண்டு வருடம் முதல் பத்து வருடம் வரையான திகதியிடப்பட்ட மத்திய வங்கி காசோலைகளை மக்களுக்கு வழங்கலாம். இதை குறித்த பகுதி வங்கி ஊடாக பாடசாலை அதிபர்கள், கோயில் தர்மகர்த்தாக்கள், பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை அங்கத்தவர்கள், கிறித்தவ மத போதகர்கள், பௌத்த கோயில் பிக்குகள்,வைத்தியர்கள் போன்ற சமூகத்தில் பொறுப்பான அந்தஸ்தில் உள்ளவர்களின் ( ஒருவர் அல்லது இருவர்) ஒப்புதலுடன் வழங்கலாம். இப்படி வழங்குவதால் அறவிடமுடியாக்கடன் பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.

இக்காசோலைக்குரிய தவணைப் பணத்தை ஒரு வருடத்தின் பின் மாதாமாதம் அறவிடலாம். முதல் ஒரு வருடம் பாரிய இலாபங்களை எதிர்பார்க்க முடியாது. இவர்கள் இக்காசோலையை வங்கியில் கழிவுடனும் அல்லது நண்பர்கள், உறவினர்கள், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள், பணத்தை கத்தையாக வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் உள்ளவர்களிடமும் இலகுவாக கழிவுடன் மாற்றிக் கொள்வார்கள்.

இதனால் அரசாங்க கஜானாவில் நிச்சயம் பணம் குறையப் போவதில்லை. கறுப்புப் பணங்களும், வெளிநாட்டில் குடியுரிமை மறுக்கப்பட்டு பணங்களை என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்களின் பணங்களும் சிறிலங்காவுக்குள் வரும்.
யாழ்ப்பாண பஸ் நிலையம், வவுனியா பஸ் நிலையம், கொழும்பு, கண்டி பஸ், ரெயில் நிலையங்களென நாடு பூராவும் உள்ள பஸ், ரெயில் நிலையங்களில் நான்கு பேர் உட்காரக் கூடிய அழகிய கூடாரங்கள் அமைத்து வேலையற்ற, கணவனை இழந்த, ஊனமுற்ற பெண்கழிடம் கையளிக்கப்பட வேண்டும்.

இது உள்ளுராட்சி அமைச்சிடம் இருக்கிறது என்ற சாட்டுப் போக்கெல்லாம் கூடாது. அந்த அந்த பகுதியைச் சேர்ந்த.அப்பகுதியை நன்கு தெரிந்த இரு தமிழர்,இரு சிங்களவர்களை இங்கே நியமிக்கலாம். வைத்தியர்களை, லாட்ஜ்களை, வியாபார நிலையங்களை, எம்பிக்களை, உறவினர்களை தேடிவந்து வீதியில் தடுமாறுபவர்களுக்கு இவர்கள் வழி சொல்வதுடன் சிறிய கட்டணமும் ( ஒரு ரூபா முதல் ஐந்து ரூபா)அறவிடலாம். இது அரசால் இலவசமாக செய்து கொடுக்கப்பட வேண்டும். இதில் கிடைக்கும் பணத்தை அவர்களே பிரித்துக் கொள்ளஅனுமதிக்கப்பட வேண்டும். பெரிய, சிறிய வர்த்தக நிறுவனங்கள் இவர்களிடம் தங்கள் விளம்பர பிரசுரங்களை கொடுக்க வாய்ப்புள்ளது. இதற்கு இவர்கள் கட்டணம் அறவிடலாம்.அந்த வருமானமும் அவர்களையே சாரும்.

பெரிய நகரங்களில் பாரிய போக்கு வரத்து நெரிசல் காணப்படுகின்றது. குறித்த நேரத்தில் குறித்த இடத்துக்கு போய் சேர முடிவதில்லை.இப்பகுதிகளில் மோட்டார்சைக்கிள்களை பிரயாணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கலாம்.ஹொங்காங்,பேங்கொக்,சைனா போன்ற நாடுகளில் இந்த நடை முறை பின் பற்றப்படுகின்றது.இதனால் உடனடியாக 5000 பேருக்கு வேலை வழங்கக் கூடிய வாய்ப்புள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளை அழைத்து அவர்களுக்கு சிறியபாரிய உற்பத்தி கம்பனிகளை அமைப்பது,அதனால் கிடைக்கும் இலாபங்களை புரிய வைத்து தொழில் ஆரம்பிக்க ஓத்துழைக்
கலாம். சிறிலங்காவில் உள்ள முன்னாள்,இன்னாள் தொழிலதிபர்களையும்,உழைப்பால் உயர்ந்தவர்களையும்அழைத்து இவர்களுக்கு பாடம் நடாத்துவதுடன்,இவர்களை பத்து,இருபது பேர் என ஒன்றாகி. கம்பனிகள் ஆரம்பித்து புதிய யுக்தி,புதிய சந்தை வாய்ப்பு தேடச்சொல்லலாம்.

உதாரணமாக இருபது பேர் சேர்ந்து ஐந்து வருட பிற்திகதியிடப்பட்ட ஐந்து லட்ச ரூபா பெறுமதியான காசோலையைக் கொண்டு ஒரு கோடி ரூபா முதலுடன் கிராமப் புறங்களில் பல நூறு தொழிற்சாலைகளை தொடங்கலாம். ஐரோப்பாவில் பாரிய கம்பனிகள் தங்களது உற்பத்தி செலவைக் குறைக்க வழி தேடிக் கொண்டிருக்கின்றன. ஆறு மாதத்தில் நூறு கம்பனிகளிடம் அனுமதி வாங்கலாம்.

குறைந்த இலாபத்தில் கூடிய வியாபாரம் செய்வது எப்படி என்ற வியாபார நுண்ணறிவு படைத்த புங்குடுதீவு வியாபாரிகளை அழைத்து வியாபார யுக்திகளை சொல்லி கொடுக்கலாம்.சந்திர மண்டலத்திற்கு நீல் ஆம்ஸ்ட்ரோங் போகும் போது அங்கு இரண்டு புங்குடு தீவு வியாபாரிகள் கடை வைத்திருந்ததாக கதை சொல்வார்கள்.இவர்கள் எங்கும் எப்படியும் புகுந்து வியாபாரம் செய்யும் திறமை படைத்தவர்கள். ஒரு முறை 'வாப்பா நாம் 300 பெட்டி மெலிபன் பெட்டி(2.4கிலோ)எடுத்து இரண்டுமாதமாக விற்க முடியாமல் திண்டாடுகிறோமே.நமது அடுத்த கடைக்காற புங்குடு தீவு ராசதுரை அண்ணா 2700 (ஒரு லொறி)மலிபன் பிஸ்கட் பெட்டிகள் எடுத்து ஒருவாரத்தில் விற்று முடிக்கின்றாரே' எப்படி என கேட்டேன். அடேய் மண்டு நாம் ஒரு பெட்டிக்கு 50சதம் இலாபம் வைத்து விற்போம்.அவர்கள் ஒரு பெட்டிக்கு பத்து சதம் இலாபம் வைத்து மாதத்துக்கு 10800 பெட்டி விற்று 1080 ரூபா இலாபம் உழைப்பார்கள். வலு கெட்டிக்காறர்கள்

அவர்கள் என்ற சூட்சுமத்தை சொன்னார். எங்களது கடையில் இரண்டுமாதமும்; அந்த மலிபன் பிஸ்கட் பெட்டிகள் இருந்து அழுஅழு என அழும்.அதில் குறைந்தது பத்து பெட்டியை எலியும்,கரப்பொத்தானும் கடித்து விடும்.மீதி 290 பெட்டியையும் புங்குடு தீவு அண்ணா கடை மூடியுள்ள சமயத்தில் விற்றுத் தீர்ப்போம்.


இதை இங்கு ஏன் சொல்ல வருகின்றேன் என்றால் வியாபாரத்தில் எடுத்தேன் பிடித்தேன் என இலாபம் உழைத்து விட முடியாது.எந்த நேரமும் உனது முகத்தில் ஒரு புன் முறுவல் தவழ
வேண்டும்.அப்போதுதான் நீ ஒரு வியாபரியாகவும் ஒரு கம்பனி நிர்வாகியாகவும் இருக்கமுடியும். இதற்கு நீங்கள் தயாரானால் உடனே தொழிலை தொடங்க அரசை அணுகலாம்.




No comments:

Post a Comment