Friday, March 6, 2009

மறப்போம். மன்னிப்போம். கொஞ்சம் சிந்திப்போம். -அ.விஜயகுமார்-

காட்டுக்குள் கண்ட, கடிய மிருகங்களையெல்லாம் அடித்து புசித்துக் கொண்டிருந்த சிங்க மகாராஜாவுக்கு ஓரு நாள் காலையில் எழுந்தவுடன் ஒரு பெரிய சந்தேகம் வந்து விட்டது. தான் இந்த காட்டுக்கு ராஜாவா? இல்லையா? பெரிய யோசனையுடனும் அகங்காரத்துடனும் ஒரு வெறியுடனும் முழுக்காட்டையும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டு உடனே புறப்பட்டுள்ளார். வழியில் குட்டி முயல் ஒன்று போய்க் கொண்டிருந்திருக்கின்றது. டேய் முயலே இங்கே வாடா என சிங்கமகா ராஜா அழைக்க முயல் கூனிக்குறுகி சிங்கத்தின் முன் வந்து நின்றுள்ளது. டேய் குட்டிப் பயலே 'யாருடா இந்தக் காட்டுக்கு ராஜா'என இவர் உறும 'மகா ராஜா நீங்கள் தான் இந்தக் காட்டுக்கு ராஜா அதில் என்ன சந்தேகம்' எனக்கேட்டு முயல் கூனிக்குறுகி நின்றுள்ளது.

சிங்கமகா ராஜாவுக்கு ஓரளவு திருப்தி. சரி. ஓடுடா என முயலை விரட்டிவிட்டு அப்படியே மறுபக்கம் போக அங்கு ஒரு நரி போய்க்கொண்டிருந்திருக்கின்றது. டேய் நரிப்பயலே இங்கே வாடா என அழைத்து 'யாருடா இந்தக் காட்டுக்கு ராஜா'எனக்கேட்க 'நீங்கள்தான் மகா ராஜா. அதில் இரண்டாம் கருத்துக்கே இடம் இல்லை' எனக் கூறியுள்ளது. சரி. ஓடுடா என நரியை விரட்டிவிட்டு அப்படியே மான், கரடி, பன்றி எனக்கேட்டு தான் தான் தலைவன் என்ற தோறணையில் இறுமாப்பில் காட்டையே கலக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்திருக்கின்றது சிங்கம்.

வழியில் யானையொன்று நின்று கொண்டிருந்திருக்கின்றது. அந்த யானையும் ஏதோ ஒரு கவலையில் பெரிய யோசனையில் இருந்திருக்கின்றது. சிங்கமகாராஜா வந்த வேகத்தில் யானையை ஒரு அதட்டு அதட்டி 'ஏய் யானைப்பயலே யாருடா இந்தக் காட்டுக்கு ராஜா'எனக் கேட்டுள்ளது. ரொம்ப யோசனையிலும் வேறு ஒரு பேர்சனல் கவலையிலுமிருந்த யானை அப்படியே திரும்பி தும்பிக்கையை சிங்கமகா ராஜாவின் வயிற்றுப் பக்கத்தால் நுழைத்து முதுகுப்பக்கத்தால் சுழட்டி ஒரு வீசு வீசியதாம். தலைகுப்புற ரொம்ப தொலைவில் போய் விழுந்த நம்ம சிங்க மகா ராஜா, முன்னங்கால்களால் பின்புறம் ஒட்டிய மண்ணைத்தட்டி விட்டுக் கொண்டு 'யார் மகாராஜா என்ற விடயம் உமக்குத் தெரியாவிட்டால் தெரியாது எனச் சொல்ல வேண்டியதுதானே! அதற்குப் போய் இந்த வீச்சு வீச வேண்டுமா'எனக்கேட்டாராம்.

கடந்த ஆறுமாதகாலமாக எல்லா மீடியாக்களும் ஒரு செய்தியை சொல்லிக் கொண்டிருக்கின்றன. அதாவது புலி முடிந்து விட்டது. இனி அடுத்தது என்ன? அடுத்து வரப்போகும் அமைப்பு எப்படி இருக்கும்? யார் வரப் போகின்றார்கள்? எப்படி எமது உரிமைகளைப் பெறுவது? பெறுவதற்கு முன் வன்னி மக்களுக்கு என்ன நடக்கப் போகின்றது? அவர்கள் முழுமையாக வெளியேறுவார்களா? வெளியேற விடுவார்களா? வெளியேறி வந்தாலும் சிங்கள அரசு உரிய பரிவு காட்டுமா ? புலிக்கு பகிரங்க மன்னிப்பா? புலி தேவையா? புலி தனது பாணியை மாற்றுமா? புலி மாறினாலும் மற்றவர்கள் அவர்களை மாற விடுவார்களா ?

இங்கு புலிக்கெதிரான எல்லோரும் ஒரு விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். புலி பூண்டோடு அழிக்கப்படவேண்டும். சரி வாஸ்தவம்தான். 1983 ஜூலையில் பலாலி ரோட் தின்னவேலியில் புலி செய்த எக்ஸ்புளோடர் விளையாட்டின் பின்னர்தான் ஜூலை கலவரம் வெடித்தது. ஒரு பிரளயம் வந்தது. அதன் பின்னர்தான் நிறையஉலக நாடுகளுக்கு எமது பிரச்சனை தெரிய வந்தது. அதற்குமுன் நடந்த நீர்வேலி வங்கிக் கொள்ளை, சாவகச்சேரி பொலீஸ் தகர்ப்பு, துரையப்பா கொலை, பஸ்தியாம்பிள்ளை குறுப் முருங்கனில் உயிரிழந்தது, யாழ் தபால் நிலையம் கொள்ளை என எவ்வவளவோ செயல்பாடுகள் நடந்தாலும் புலி செய்த இந்தச் செயல்தான் எல்லோர் மனதிலும் நின்றது. பலரையும் அவ்வியக்கத்தின் பால் ஈர்த்தது என்றாலும் மிகையேதும் இல்லை.

இந்தியாவில் கூட மற்ற இயக்கங்கள் எவ்வளவோ கருத்தரங்குகளையும் கவன ஈர்ப்புகளையும்
அக்காலங்களில் தெருத்தெருவாக செய்தாலும் அனைத்து செயல்பாடுகளும் புலிகளுக்கு இலாபம் தருபவையாகவே இருந்தன. அவர்களுக்கு ஈரோஸ், டெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற எந்த பேதமும்தெரியவில்லை. 'நீங்க விடுதலைப் புலிங்களா சார்' எனத்தான் இந்திய மக்கள் அனைவரும் கேட்டனர். உதவிசெய்தனர். வை.கோ, கருணாநிதி, எம்.ஜீ.ஆர், மற்றும் கம்யுனிச கட்சிகள், இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மட்டுமே ஏழு இயக்கம் இருக்கும் சங்கதி தெரிந்திருந்தது. அந்த அளவுக்கு 1983 ஜூலை தாக்குதல் அதனால் விளைந்த அனர்த்தம் தமிழன் அகதியான விடயம் மொத்த இந்திய மக்களையும் உசுப்பியிருந்தது.

இதனால் 1984 இன் பின் மற்ற இயக்கங்களில் இணைந்தவர்களைவிட புலிகள் இயக்கத்தில்
இணைந்தவர்கள் தான் அதிகம் எனலாம். இப்போது இணையத்தளங்களில் எழுதுபவர்கள், அதை படிப்பவர்கள், அதற்கு பின்னூட்டம் எழுதுபவர்கள் எல்லோரையும் தொகுத்துப் பார்த்தால் 1986க்கு முன் இயக்கங்களில் பல பொறுப்புகளில் இருந்தவர்கள், பல களமுனைகளை கண்டவர்கள் என ஒரு குறிப்பிட்ட தொகையினரே புலிக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும்-எதிராகவும், வன்னி மக்களினதும், மொத்த தமிழரினதும் எதிர்காலம் பற்றி சிந்திப்பவர்களாகவும் இருக்கின்றனர் .மற்ற அனைவரும் புலிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பவர்களாகவே உள்ளனர். தெரிந்தோ தெரியாமலோ புலி மேல் இருந்த மாயை அவர்களை அவர்களின்பால் தள்ளியது.

இப்போது 'இரண்டும் கெட்டானாக'வன்னியில் சிக்கியுள்ள அந்த மக்களும் அவர்களை கேடயமாக வைத்துள்ளதாக சொல்லப்படும் மொத்த புலிகளும் தீண்டத்தகாதவர்களா என்பதுதான் மொத்த மக்களினதும் இன்றைய பிரச்சனை. இப்பிரச்சனை இரண்டொரு வாரத்தில், அல்லது இரண்டொரு மாதத்தில் தீர்ந்து விடும் என வைத்துக் கொள்வோம். அதன் பின் புலியை, புலியில் விபரம் தெரியாமல் இணைந்தவர்களை, அவர்களை கண்மூடித் தனமாக ஆதரித்தவர்களை நாம் எந்தக் கண்ணாடியைக் கொண்டு பார்க்கப் போகின்றோம். மற்ற இயக்கங்கள் எல்லாம் லெனினிஷமும், மாவோயிஷமும் சொல்லி மக்களை தமது இயக்கங்களுக்கு சேர்த்துக் கொண்டிருந்த போது தனி 'டெரரிஷத்தை'மட்டும் சொல்லியே மக்களை தம்முடன் இணைத்துக் கொண்டவர்கள் புலிகள்.

1991 ஏப்ரலில் ஜே.வி.பி.நாடு பிடிக்க புறப்பட்டபோது அக்கலவரத்தை அடக்க முடியாமல் அப்போதைய பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் இந்நிய அரசிடம் ராணுவ உதவி கேட்டார். இந்திய அரசு 2000 சீக்கிய இராணுவத்தை கப்பலில் கொண்டு வந்து
ஹம்மாந்தோட்டையில் இறக்கியது. ஹம்மாந்தோட்டையில் இருந்து பொடிநடையாக புறப்பட்ட சீக்கிய இராணுவம் கதிர்காமம் மாணிக்க கங்கைவரை நடந்து வந்து கண்ணில் தென்பட்ட 35000 சிங்கள இளைஞர்களை வெட்டி வீசிவிட்டு சென்றார்கள். ஆம் அவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவு 'கண்ணில் தென்படும் இளைஞர்களையெல்லாம் கொன்றுவிடுங்கள்' என்பதுதான்.

இவ்வாறு தலைமை சொல்லும் உத்தரவை கட்சிதமாக செய்யும் இளைஞர்களைத்தான் புலி வளர்த்து வைத்திருக்கின்றது. 1985, 1990 களில் பிறந்த இந்த சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வெளி உலகு என்பதே கிஞ்சித்தும் தெரியாது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தலைவர், தலைவர்,தலைவர் மட்டுமே. இவ்வாறு தலைவரை நேசித்து ,தலைவரை வணங்கியவர்களும், தலைவர் விபரம் புரியாத இளைஞர்களை வைத்து செய்த சில சாகஸங்களையும் தமது சாகஸங்களாக வரிந்து கட்டிக் கொண்டவர்களுமே இன்றும், இன்னும் கண்மூடித்தனமாக விடுதலைப் புலிகளை நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

என்னுடன் ஒரு பெக்டரியில் 150 சிறிலங்கன் வேலை செய்கின்றோம். அங்கே வேலை செய்யும் பலர் புலி ஆதரவாளர்கள். வேலை செய்யும் 10 மணிநேரத்தில் இரண்டுமணிநேரம் ஊருக்கு போன் செய்வதும், எத்தனை ஆமி செத்தான் என அடுத்தவனுக்கு வீறாப்புடன் கதை சொல்வதிலுமே காலத்தை கழிப்பர். சில நேரம் நேரடியாகவே பிரபாகரனுடனும், பொட்டம்மானுடனும் ரொம்ப சத்தமாக எம் கண்ணெதிரே கதைப்பார்கள். தலைவர் இப்பதான் கதைத்தார். சரியாம், எல்லாம் சரியாம். ரெண்டு ஆயுத கப்பல் இறங்கிட்டுதாம், உது மன்னார், தள்ளாடி எல்லாம் முக்கியமில்லவாம். கிளிநொச்சிதான் முக்கியமாம். பொட்டண்ணரும் இப்பதான் பேசினார். அப்புறம் கிளிநொச்சி விழுந்த நாள் தொடக்கம் ஆறு நாட்கள் இவர்கள் வேலைக்கு வரவே இல்லை. கடந்த சில நாட்களாக வேலைக்கு வருகின்றார்கள். யாருடனும் பேசுவதில்லை. டெலிபோனும் கொண்டுவருவதில்லை. தாமுண்டு தமது வேலையுண்டு என வருகின்றார்கள். போகின்றார்கள். இவர்களை நான் குற்றம் சொல்ல வரவில்லை. இவர்கள் வளர்ந்த பாசறை அப்படிப்பட்டது. பார்க்கவே
பாவமாக உள்ளது.

நல்ல இளைஞர்கள். அவசரத்துக்கு ஏதும் கடன்கேட்டால் கூட அள்ளித் தருவார்கள். 'அண்ணன் உங்களுக்கு காசு கிடைக்கும் போது தாங்கண்ண' என்பார்கள். இவர்களை அள்ளி அணைக்க, ஆறுதல் சொல்ல, உண்மைகளைப் புரிய வைக்க ஏதாவது சிறு முயற்சி எடுக்கப்பட்டுள்ளதா? பனையால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாகத்தான் இருக்கின்றது. உசுப்பேத்தாதேயும், வெசறேத்தாதேயும், டென்சனேத்தாதேயும் என திட்டித் தீர்க்கின்றோமே தவிர தவித்த முயலுக்கு தண்ணிகாட்டுபவர்கள் யாரையுமே காணோம்.

சிறிலங்காவில் இந்திய ராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்திருந்த காலமது. 40 பேரடங்கிய
இராணுவ பட்டாலியன் ஒன்று மூதுர் என்கின்ற முஸ்லீம் கிராமத்தில் கொண்டு இறக்கப்பட்டிருக்கின்றார்கள். இரவு எட்டு மணிபோல் இந்த பட்டாலியன் நகர்வலம் வந்துள்ளார்கள். அப்போது பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றிருந்த இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் வீதியில் தொப்பியுடன் வந்து கொண்டிருந்திருக்கின்றார்கள். இவர்கள் அவ்விரு இளைஞர்களையும் சுற்றி வளைத்து பெயர் என்ன எனக் கேட்டுள்ளனர். ஒருவர் முஜிபுர் ரகுமான், மற்றவர் முகம்மது நிசாம் என பதில் அளித்துள்ளனர்.

பாகிஸ்தானி, பாகிஸ்தானி என குய்யோ முறையோ எனக்கத்தி அவர்களை அடித்து, நொறுக்கி அவர்களை கொல்ல முயற்சி செய்துள்ளார்கள். எதற்கும் இருக்கட்டுமே என 'கேணல் நஞ்சப்பா'வுக்கு வோக்கி டோக்கியில் தகவல் தெரிவித்துள்ளார்கள். அப்பையன்களின் நல்ல நேரம் அப்போது கேணல் நஞ்சப்பா அடுத்த கிராமத்தில்தான் இருந்துள்ளார். அந்த மனுஷன் தலைதெறிக்க ஓடி வந்து 'டேய் மக்காள் இது பாகிஸ்தான் போடரல்லடா. நாம் இப்போது சிறிலங்காவில்' நிற்கின்றோம் என்ற விடயத்தை சொல்லியுள்ளார்.

இதில் விடயம் என்ன வென்றால் காஸ்மீர் போடரில் எல்லைக்காவல் படையில் இருந்த வீரர்களை இரவோடிரவாக கூட்டி வந்து சிறிலங்காவில் இறக்கி விட்டுள்ளனர். தாங்கள் எங்கு நிற்கின்றோம் என்பதே அந்த இராணுவ சிப்பாய்களுக்கு தெரியவில்லை. உலகின் தலைசிறந்த ராணுவம் என்கின்ற இந்தியாவே இப்படியென்றால் எதுவுமே தெரியாமல் புரியாமல் வளர்க்கப்பட்ட அந்த புலி இளைஞர்களின் நிலை எப்படி இருக்கும். இவர்களைக்கொன்று, ரத்தத்தை குடித்து, நார் நாராக உரித்து, சனியனே உனது சகவாசமே வேண்டாம்
என்பதால் நாம் எல்லோரும் சாப விமோசனம் அடைந்து விடுவோமா!

எவ்வளவுதான் நாம் புலி எதிர்ப்பு பேசினாலும், புலியை எதிர்த்தாலும் அவர்களுடனேயேதான் வாழ்கின்றோம். திருமண வீடு, பூப்புனித வீடு, பிறந்தநாள் வீடு, நியூ இயர், விசா கிடைத்தால் பாட்டி, புது மனைவி விசா கிடைத்து வந்தால் பாட்டி, குறும் திரைப்பட விழா மற்றும் பல பாடசாலை விழாக்களில் ஒன்றாகத்தான் கூடுகின்றோம், குலவுகின்றோம். அச்சமயங்களில் அரசியலே கதைப்பதில்லை. பார்ட்டி முடிந்து வந்தவுடன் தனது குறுப் நண்பர்களுக்கு போன் பண்ணி 'குலத்தாரும் பார்ட்டிக்கு வந்திருந்தார். முகம் பேயறைஞ்ச மாதிரி போய்க்கிடக்கு. மனுஷன் மூச்சு விடவில்லை' என்பதும். 'கரன் வந்திருந்தார் அதே பழைய புளட் கதைதான் கதைக்கின்றார்'என்பதுமாகத்தான் இருக்கின்றோமே தவிர முப்பது வருடமாகத் தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருக்கின்ற அந்த...........என்னசெய்தோம். செய்கின்றோம் என்று கேட்டால். மொத்தமாக பூஜ்ஜியமே மிஞ்சிக் கிடக்கின்றது.

ஏன் இந்தப் பாட்டிகளிலும், விழாக்களிலும் உங்கள் கருத்துக்களை மெள்ள மெள்ள அவர்களிடம் சேர்ந்தோ, தனித்தோ சொல்லக் கூடாது. இப்போது அவர்கள் அரவணைக்க ஆளில்லாமல் இருக்கின்றனர். நமது கருத்துக்களையும், தலைவர் எங்கு பிழை விட்டார், விட்டிருப்பார் என்பதை நம்மிடம் பகிர்ந்து கொள்ள தயாராயிருப்பார். ஆனால் நாம்தான்
ஐயோ இவர்களா என ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கின்றோம். எனக்குத் தெரிந்து பலர், பல குடும்பத்தினர் இப்போதுதான் தேனீ, இலங்கை நெற், சூத்திரம், தமிழ் அரங்கம், தேசம், நெருப்பு, மீன்மகள் என்றெல்லாம் இணையத்தளம் இருக்கின்றதா எனக் கேட்டு மலைக்கின்றனர். பார்த்து விட்டு இப்படி ஒரு உலகம் இருக்கின்றதா எனக் கேட்கின்றனர்.

ஏன் இந்த இணையத்தள நிறுவனர்கள், அதை வாசிப்பவர்கள் புலியை வசை பாடுபவர்கள் இந்த இணையத்தளங்களின் விபரங்களை துண்டுக் காகிதங்களில் குறித்து வைத்து இந்தப்பார்ட்டிகளிலும், விழாக்களிலும் ஆங்காங்கே வீசிவிடலாம்தானே! கிறினேட் துரோ பண்ணிய நமக்கு துண்டுக்காகிதம் வீசுவது ஒரு பொருட்டல்லவே. வீடு திருந்தினால் தானே வீடு திருந்தும், அப்புறம் வீதி, அப்புறம் கிராமம், நகரம் என ஏதாவது செய்யலாம். இல்லை எங்கப்பன் குதிருக்குள் இல்லை. நாங்கள் வேறு. அவர்கள் வேறு என்றால்..!? ஊர் கூடி வடம் இழுக்கும் ஐடியாவே இல்லையா ?

புலித் தலைமையை திட்டுவோம், புலி ஆய்வாளர்களைத்திட்டுவோம், புலியின் கொள்கை வகுப்பாளர்களைத் திட்டுவோம், புலிப் பினாமிகளைத்திட்டுவோம், புலியின் நிதி சேகரிப்பாளர்களைத் திட்டுவோம் ஏதுமே தெரியாத புரியாத புலி ஆதரவாளனை ஏன் திட்ட வேண்டும்? 1984களில் மதுரை டவுண் ஹோல் றோட்டில் ஒரு வேளை கஞ்சிக்கு அலைந்த புலியினால் 15 வருடம் மொத்த மக்களையும் ஆட்டிப்படைக்கக் கூடிய சக்தியைப் பெற முடியுமானால்: சகல சௌபாக்கியங்களுடனும் இருக்கும் நம்மால் ஏன் ஒரு துரும்பையும் அசைக்க முடியாமல் இருக்கின்றது? நான் இங்கு சௌபாக்கியம் என்று சொன்னது பிரஜா உரிமை, மூன்று நேரம் உணவு, வேலை முடிந்ததும் இன்டர் நெட், மற்றும் எக்ஸட்ரா.. எக்ஸட்ரா....

இது புலி ஆதரவாளனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய தருணமே தவிர அவர்களை உசுப்பேத்த வேண்டிய தருணமல்ல. அவர்கள் நம்மை போட்டு மிதித்து பந்தாடிய சரித்திரமெல்லாம் நிறைய இருக்கின்றது. அதைக் குத்திக்காட்டும் தருணமல்ல இது. ஒரு கதை சொல்லுவார்கள். யாரோ ஒரு துறவி ஆற்றோரம் போனாராம். அங்கு ஒரு குளவி தண்ணீரில் தத்தளித்ததாம். துறவி அதைக் காப்பாற்றி விட்டாராம். குளவி துறவியை கொட்டிவிட்டு மீண்டும் தண்ணீரில் விழுந்ததாம். துறவி மீண்டும் அதை காப்பாற்றி விட்டாராம். குளவி மீண்டும் கொட்டி விட்டு நீரில் விழுந்ததாம். துறவி மீண்டும்......மீண்டும்......இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் அதுதான் உங்களுக்குத் தீங்கு இழைக்கின்றதே ஏன் அதை காப்பாற்றுகிறீர்கள் எனக் கேட்டாராம். அதற்கு துறவி. அது அதனது குணத்தைக் காட்டுகிறது. நான் எனது குணத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றேன் என்றாராம்.

நாம் எல்லாம் முடியும் வரை, நல்லதுகள் நடக்கும் வரை துறவியாக இருந்தாலென்ன. பல வருடமாக நாம் துறவியாக வாழ்ந்ததனால் தானே இன்று மூச்சு விடுகின்றோம். இன்னும் கொஞ்ச காலம் 'கெட்டவைகளை பார்க்காமல், கெட்டவைகளைப் பேசாமல் ,நல்லவைகளை மட்டுமே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் என்ன ? தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பவர்களை மாறி மாறி அவர்களும், நாமும் திட்டிக் கொண்டிருக்கின்றோம். பாவம் செய்தி வாசிப்பவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் தொழிலை, அவர்களது முதலாளி இட்ட வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த துறவிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு ஜனநாயக தொலைக்காட்சி நிறுவனத்தை நிறுவி இந்த செய்தி வாசிப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தயாரானால் அடுத்த நிமிடமே உண்மையின்
பக்கம் இவர்கள் நிற்பார்கள்.

ஏனெனில் சகல விடயமும் தெரிந்த அவர்கள் சம்பளத்துக்காக என்ற ஒன்றைத்தவிர வேறு எந்த நோக்கத்துக்காகவும் அங்கு செய்தி வாசிக்கவில்லை. முழுக்க முழுக்க உண்மைக்கு மாறான செய்திகளை வாசித்துக் கொண்டிருக்கும் ஓரு சகோதரி ஒரு முன்னாள், இந்நாள் புலி எதிர்ப்பு முழு நேரப் போராளியின் மகள். இன்னும் பல ஆயிரம் உதாரணம் சொல்லலாம். எது நடக்க இருந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நிச்சயம் நடக்கும் என நினைப்போம்.

புலி, 'புலி எதிர்ப்பாளர்களை' குத்தி குதறியது தவிர வேறு என்ன பாவத்தை செய்து விட்டது!
இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், இயக்கங்களில் சம்பந்தமே இல்லாதவர்களுமென பல லட்சம்
பேரை யுரோப்பிய சிற்றிஷன்களாக்கிய முழுப் பெருமையும் புலியை அல்லவா சாரும். சரி
சிறிலங்காவில் எல்லாப்பிரச்சனையும் முடிந்து விட்டது, புலி அழிந்து விட்டது. ஊருக்குப் போய் இயக்கம் கட்டப் போகின்றேன் என்று உங்கள் மனைவிமாரிடமும், பிள்ளைகளிடமும் சொல்லும் தைரியம் எமக்குண்டா! போகத்தான் விடுவார்களா!?

முற்றும் துறந்த புலிப்பினாமிகளையே பாதை திறந்திருந்த காலத்தில் ஊருக்குப் போக மனைவிமார் அனுமதிக்கவில்லை. 'உங்களுக்கென்ன பைத்தியமா? சிங்களவனிடம் ஏதாவது சொல்லி தப்பிடலாம். எங்கடவர் புடிச்சி வைச்சிருவாங்க அப்பு'என்று சொல்லித்தடுத்த மனைவியர்தான் அதிகம். சிலர் கொழும்புக்கு பழைய நெஷனல் ஐ.டி.யைத் தருவித்து, யுரோப் பாஸ்போட்டை கொழும்பில் ஒழித்து வைத்து விட்டுப் போன சரித்திரங்களுமுண்டு.

இப்போது அங்கு மிஞ்சி வக்கற்றவர்களாக இருக்கும் வன்னி, யாழ் மாவட்ட மக்கள்தான்
சிங்களத்துக்கும், புலிக்கும், ஏனைய அமைப்புக்களுக்கும் திரும்பவும், திரும்பவும் முகம் கொடுக்வேண்டியவர்களாக மாறப்போகின்றனர். மாறவேண்டும். இவர்களுக்கு நாம் என்ன செய்துள்ளோம், செய்யப்போகின்றோம். அரசு தரப்பு, புலித்தரப்பு என்ற இரண்டைத்தவிர இடையில் இடைத்தரப்பு என்ற ஒன்றுமே இல்லாமல் சுத்த சூனியமாக இருக்கின்றதே!? இவ்வளவு காலமும் வாளாவிருந்து விட்டு இப்போதுதான் கனைக்கத்தொடங்கியுள்ளோமா!? இல்லை வன்னியில் நடப்பது எல்லாம் எங்களுக்கும் தெரியும் என்றால், அங்கு என்ன நடக்கின்றது? 3 லட்சம் பேரா? 75 ஆயிரம் உயிர்களா? உங்களது ஆட்கள் ஏதாவது போட்டோ புகைப்படம் அனுப்பினார்களா? உங்களது ஆட்கள் ஏதாவது டெலிபோன் செய்தி அனுப்பினார்களா? அவை எங்கே? எதுவுமே இல்லை.எந்த தகவலுமே நம்மிடம் இல்லை. புலி அழிய வேண்டும். நாசமாகப் போக வேண்டும். சரி. நம்மிடம் எவ்வித தகவலும் இல்லை. இப்போது வன்னியில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற என்ன வழி?

வன்னியிலுள்ள மன்னிக்கவும் புதுக்குடியிருப்பில் உள்ள மக்களுக்கு பிடிபட்ட பங்கர்கள், பிடிபட்ட ஆயுதங்கள், லக்ஸறி பங்களாக்கள், நீச்சல் தடாகங்கள், விலையுயர்ந்த மதுபான போத்தல்கள் பற்றியெல்லாம் தெரியுமா? அதை அரசு தெரியப்படுத்தியதா? இவைகளையெல்லாம் அழகிய புகைப்படங்களாக எடுத்து அழகிய தமிழில் எழுதி குண்டு வீசும்
விமானங்களில் (குண்டுக்குப் பதிலாக ) இத்தகவல்களையாவது வீசச் சொல்லலாமே! செய்தோமா? இனியாவது செய்வோமா? போன வாரம் நண்பர் ஒருவரின் மனைவி புதுக்குடியிருப்பில் இருந்து அதிகாலை 4 மணிக்கு போன் செய்தார். (நண்பரின் மகள் ஒரு புலிப் பொறுப்பாளர்).22 நாட்களாக பங்கறுக்குள் இருக்கின்றார்கள். சிறுநீர், மலம், வாந்திபேதி, அம்மை என அனைத்துமே பங்கரில்தானாம். ஆறு வயது மகளோடு உணவில்லாமல் 4 நாட்களாக தேங்காயைத் தின்று கொண்டிருக்கின்றார்களாம்.
அவர்களுக்கு எதுவுமே தெரியாதாம். கிளிநொச்சி பிடிபட்ட செய்தி தெரியவே தெரியாதாம்.
'அடி விசரி ஆமிக்காறர் எல்லாவற்றையும் பிடிச்சிற்றாங்கடி'என்று இவர் சொன்ன பின்னர்தான் புலி பொறுப்பாளரான அவரது மகளுக்கே உண்மை தெரியும்.

இங்கு புலிக் கெதிராக பாரத யுத்தம் நடாத்திக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் இந்த மக்களைப்பற்றி யோசிக்கிறோம்? மக்கள் தொடர்ந்தும் மந்தைகளாக இருக்கமாட்டினம். தலைக்கு மேலே வெள்ளம் போனால்....என்று புறப்பட்டுவிடுவார்கள். 'மன்னர் ஷா'வுக்கு சலாம் போட்டுக் கொண்டிருந்த மொத்த ஈரானிய மக்களும் உண்மைகள் அனைத்தும்
( தங்கத்தில் மலசல கூடம் முதல் முத்துக்கள் பதிக்கப்பட்ட கால் செருப்பு வரை ) தெரிந்தவுடன் மன்னர் ஷாவின் மாளிகையை வளைத்து மாதக் கணக்கில் உட்கார்ந்திருந்து மன்னர் ஷாவை நாட்டைவிட்டு துரத்தினர். ஆயுதமின்றிய போராட்டம். மக்களிடம் இருந்ததெல்லாம் துணிவும், ஆயதுல்லாஹ் கோமய்னி மீதிருந்த பக்தியும்தான். நாம் துரத்த வேண்டிய எவ்வித அவசியமுமில்லை.உண்மைகளை புரிய வைத்தால் போதும். புரிந்து கொள்வார்களா ? VIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com