Monday, March 23, 2009

வர்ஷா கொலையின் சந்தேக நபர் ரிஎம்விபி உறுப்பினரே,




திருமலைச் சிறுமி வர்ஷாவின் கொலைதொடர்பாக கைது செய்யப்பட்டிருந்து சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட ஜனா என அனைவராலும் அறியப்பட்ட வரதாராஜா ஜனார்த்தனன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் உறுப்பினர் என்பதை அவரது கட்சி அடையாள அட்டை உறுதி செய்கின்றது.

வர்ஷாவின் கொலையுடன் தொடர்புபட்ட ஜனா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஓர் உறுப்பினர் அல்ல எனவும் அவர் கடந்த மாகாண சபைத் தேர்தல் காலங்களில் தமது கட்சிக்கான பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிய ஓர் ஆரதவாளர் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் மகாண சபை முதல்வருமான பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஜனா விற்கு கடந்த 2007-05-20 திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது இவரது இயக்கப்பபெயர் சூரியா எனவும் அங்கத்துவ இலக்கம் 148 எனவும் அடையாள அட்டை காண்பிக்கின்றது.

மன்னிக்க முடியாததோர் மிலேச்சத்தனத்தை தமது அமைப்பைச் சேர்ந்தோர் செய்துள்ள நிலையில் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுத்து மக்கள் தீர்ப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள முனையாமல், மாறாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமை அவர்களை தமது உறுப்பினர்கள் அல்லர் என இலகுவாக கூறி தப்பித்துக் கொள்ள முடியும் என கருதியமையானது புலிகள் இத்தனை காலமும் மக்களை ஏமாற்றியதைப் போன்று தாமும் தொடர்ந்து செய்யலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து விடுபடவில்லை என்பதை உணர்த்துகின்றது.

இவையனைத்துக்கும் அப்பால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கையளித்து விட்டார்கள் என்றபோது வாழ்த்து மடல் வரைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி உட்பட தமிழ் அரசியல் தலைவர்கள் எவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மிலேச்சத்தனத்தை கண்டிக்காமையை சுட்டிக்காட்ட விரும்பும் இலங்கைநெற் இவ்விடயத்தில் மாற்றான் தாய் பிள்ளைப் போக்கை கடைப்பிடித்து வந்த அனைவருக்கும் சிறியதோர் ஆதாரத்தை சமர்ப்பணம் செய்கின்றது. இன்னும் பல உண்மைகள் வெளிவரலாம்


No comments:

Post a Comment