Friday, March 27, 2009

பு(ப)லிகள் வானொலி - அ.விஜயகுமார் -

வணக்கம் நேயர்களே. இது பரலோக வானொலி. அனைவருக்கும் வணக்கம் கூறி இன்றைய
நிகழ்ச்சிகளை தொடங்குவது குண்டு மிளகாய். நேரம் சரியாக காலை ஐந்து மணி 55 நிமிடம். இன்றைய எமது நிகழ்ச்சிகள், காலை ஆறுமணிக்கு செய்திகள், அதனைத் தொடர்ந்து ஆறு முப்பதற்கு வயலும் வாழ்வும், ஏழு மணிக்கு காய்கறி ஆய்வாளர் பூசணிக்காயின் சிறப்பு பேட்டி, எட்டு மணியிலிருந்து 12 மணிவரை பங்கருக்குள் மறைய இருப்பதால் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு பிற்பகல் சேவை தொடரும்.

வணக்கம், செய்திகள் வாசிப்பது பலாப்பழத்தார். முதலில் தலைப்புச் செய்திகள்.

காய்கறித் தோட்டத்தில் பன்றிகள் அட்டகாசம். பனங்காட்டு நரிகள் சலசலப்புக்கு அஞ்சவில்லை. முளைக் கீரை, தக்காளிக் கீரை, லேடி பிங்கர், போஞ்சிகள் எல்லாம் அல்லோல கல்லோலம். வெளி நாடுவாழ் குண்டு கத்தரிக்கா, தார்பூசணிகள் எல்லாம் ஆவேசம். உலக காய்கறித் தோட்டக்காறர் எல்லாம் பன்றிக் கூட்டத்துக்கு எச்சரிக்கை. பனை மரக்கப்பலில் காய்கறிகள் இங்கிலாந்திலிருந்து புறப்படுகிறது. தாய் நரியும், கிழட்டு நரியும் இன்று திடீரென மனதை மாற்றி பன்றிகளுடன் பேசத்தயார் என்றதால் தொடையழகி நமீதாவுடனான பேட்டி இன்று இடம் பெறாது என்பதை வெளிநாடுவாழ் சின்ன சீரகம், பெரிய சீரகம், கடுகு, அசமதாகம் போன்றவர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். விளம்பரத்தை தொடர்ந்து நீண்ட விரிவான செய்திகள் தொடரும்.

கந்தசாமி தெருவில், சின்னத்தம்பியர்ர நகைக்கடை திறப்பு விழா. காது குத்து, பூப்பு நீராட்டு, திருமண சடங்குகளுக்குத் தேவையான அனைத்து நகைகளும் கிடைக்கும். இன்றைய இந்த யுத்த சூழலில் நகை அணிவது ரொம்ப முக்கியம். இந்த நகைகளை அணிந்து ஐரோப்பிய வீதிகளில் திரிந்தால் பன்றிகள் பனங்காட்டுக்குள் நிற்காது. மேலும் ராசிக்கல் மோதிரம் அணிவதால் பூர்வ ஜன்ம புண்ணியம் கிடைக்கும். இதை அணிந்து கொண்டால் பன்றிகளுக்கு மூத்துரக்கடுப்பு வந்து விடும். வாங்கோ, வாங்கோ சின்னத்தம்பியர்ர நகைக் கடைக்கு வாங்கோ.

திறப்பு விழா, அதி நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலை. இடியாப்பம், புட்டு, கணவாய்கறி ஞாயிற்றுக் கிழமைகளில் ஒடியல் கூழ், பெண்களுக்கு தனி பிரிவு, வாகனத் தரிப்பிடத்துடன் நடேசின்ர உணவுச்சாலை திறப்பு விழா. ஒடியல் கூழ் குடித்து நாக்கு ருசிக்க அகமகிழ்ந்தால் வன்னியில் அழிந்த தக்காளி, கீரை, லேடி பிங்கர்களுக்கெல்லாம் ஒரு செஞ்சழிப்பு வரும்.

பங்கெறச்சி, பங்கெறச்சி ரொம்ப முக்கியம். பங்கெறச்சி சாப்பிடுங்கோ. பெரியசாமி கடையில் சின்னச் சாமிகள் வெட்டிய பங்கெறச்சி. முதலில் ஓடர் செய்பவர்களுக்கு நாலு ஆட்டுக்கால் பரிசு. சூப்புச் செய்து குடித்தால்பன்றிகளுக்கு கொழுப்பெடுக்காது. குள்ள நரி தயாரிப்பில் தொடையழகி நமீதா, இடுப்பழகி நயன்தாரா நடித்த 'தொடையாட்டம்'. ஐரோப்பிய திரையரங்கெங்கும் காணத்தவறாதீர்கள். நமீதா எத்தனை முறை தொடையை காட்டுகின்றார் என்பதை தெரியப்படுத்துபவர்களுக்கு குள்ள நரித் தலைவரால் 'மகாதொடையர்' என பட்டம் சூட்டப்படும்.

விரிவான செய்திகள். மேற்கிலும், தெற்கிலும் காடுகளுக்குள் உலவிய பன்றிகள் கடந்த பல நாட்களாக வன்னி தோட்டங்களுக்குள் பிரவேசித்துள்ளன. ஆரம்பத்தில் ஆட்டை கடித்து, மாட்டை கடித்து பம்மாத்துக் காட்டிய இந்த பன்றிகள் தற்போது தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளன. போனவாரம் 456 முளைக்கீரைகளை கொன்று, 257 தக்காளி கீரையை பிடுங்கி, 86 லேடி பிங்கரை விதவையாக்கியுள்ளன.

வெளிநாடு வாழ் குண்டு கத்தரிக்கா, தார்பூசணிக்கா எல்லாம் ரொம்ப ஆவேசமாக சின்னத்தம்பியர்ர நகைக்கடையிலயும், நடேசின்ர ஒடியல் கூழ் கடையிலேயும், நமீதாட தொடையிலேயும் இருந்து கொண்டு சிந்திக்கின்றார்கள். நாங்கள் பனங்காட்டு நரிகள் சல சலப்புக்கு அஞ்சமாட்டோம் என பன்றித்தலைவருக்கு எச்சரிக்கை விட்டுள்ளனர். இந்த எச்சரிக்கையைப் பார்த்து உலக காய்கறித் தோட்டக்காறர்களெல்லாம் தொடைநடுங்கி இருக்கின்றனர். நரி என்றால் என்ன சும்மாவா என ஆர்ப்பாட்டம் செய்த நரிகளுக்கெல்லாம் கொண்டாட்டம். அநேகமாக அடுத்த வாரமளவில் பன்றிகளெல்லாம் துரத்தப்பட்டு நரித்தலைமை மரக்கறிக்கடையை ஆரம்பிக்கும் என நரிப்பிள்ளைகள் எதிர்வு கூறுகின்றன.

இங்கிலாந்தில் இருந்து புறப்படும் பனை மரக்கப்பல் அலைகடலென ஐந்து சமுத்திரங்களையும்
கதி கலங்க வைக்கப் போகின்றது. இப்பனை மரத்தில் பொருள் போகின்றதோ இல்லையோ இதனால். ஐந்து கண்டங்களும் கிடு கிடுக்கப் போகின்றது. இந்த பனை மரக்கப்பல் சம்பந்தமாக
நரிக்குறவர்கள் பலர் ஐரோப்பா முழுக்க சாஸ்திரம் சொல்லித்திரிகின்றனர். ஏற்கனவே இந்த நரிக்குறவர்கள் சொன்ன சாஸ்திரத்தின் பலனைத்தான் நரிப்பிள்ளையார் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்பது நேயர்களுக்கு தெரிந்ததே.

தாய் நரியும், கிழட்டு நரியும் திடீரென பல்டி அடித்து சண்டே டய்ம்ஸூக்கு செய்தி அனுப்பியது கூட ஒரு பெரிய நரித்தந்திரம் என ஐரோப்பிய நரிகள் ஊழையிடுகின்றன. பாவம் நரி. பாவ்லா பலிக்காததால் கொக்குக்கு சாப்பாடு கொடுக்க முயற்சிக்கிறது. கொக்கு ஓடு மீன் எல்லாம் எனக்கு வேண்டாம் உறு மீன்தான் வேண்டும் என ஒத்தைக்காலில் வன்னித்தோட்டத்துக்குள் அடாத்தாக நிற்கின்றது. பாவம் கருவேப்பிலைகள். நரியை நம்பி புருஷனையும் கைவிடப் போகின்றார்கள். இத்துடன் செய்திகள் முடிவடைகின்றன. மீண்டும் எமது அடுத்த செய்திகள் பகல்

12 மணிக்கு.நன்றி.வணக்கம்.

வயலும் வாழ்வும். வணக்கம் நேயர்களே, இன்றைய வயலும் வாழ்வும் நிகழ்ச்சியை திரு.தட்சணார்த்தி தங்கராசா நடாத்துவார். வணக்கம் நேயர்களே கடந்த வாரம் நிறைய நேயர்கள் மடல் எழுதியிருந்தனர். அதற்குரிய விளக்கத்தை இவ்வாரம் தரலாம் என நினைக்கின்றேன். தமது தோட்டத்துக்குள் புதிதாக பன்றிகள் வந்துள்ளதாகவும், இது வரை நரித் தொல்லையில் இருந்த தமக்கு இந்த பன்றித் தொல்லை பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாகவும் எழுதியுள்ளனர்.

கடந்த பல வருடமாக நான் உங்களுக்கு கூறியிருந்தேன். நரி அந்தக் காலமிருந்தே அடிக்கடி தந்திரத்தை மாற்றி மாற்றி எல்லா மிருகங்களுடனும் உறவாடுவதும் பிறகு வெட்டிவிடுவது
மாகவே இருந்துள்ளது. அதற்கென்று ஒரு புத்திகிடையாது. சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்ற கதையை உங்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை. பன்றி கூட நரியுடன் கூட்டு வைத்திருந்தது. காந்தியம் டேவிட் ஐயா மெட்ராஸ் போரூரில் வளர்த்த நாட்டு பன்றி போல் சாதுவாக இருக்கும் என்ற நினைவில்தான் நரிப்பிள்ளையார் இதை நினைத்து விட்டார். இது ஹம்மாந்தோட்டை உப்பளக் காட்டில் வளர்ந்த காட்டுப் பன்றி. மலத்தை கூட தின்னக் கூடியது.

வெறி வந்து விட்டால் கரடிமாதிரி நிலத்தை உழுது குட்டி, குட்டி மாளிகைகளை எல்லாம் தகர்த்துவிடும். இதற்கு நான் கூறும் இலகு வழி நரித் தொல்லை குறைந்தால் பன்றித் தொல்லை தானாகவே குறைந்துவிடும். முருங்கக்காயை திருகிப் பார்த்தும், தேங்காயை மோதிர விரலால் தட்டிப் பார்த்தும், போஞ்சிக் காயை வளைத்துப் பார்த்தும்; வெண்டைக்காய் நுனியைத் திருகிப் பார்த்தும் வாங்கும் நீங்கள். ஏன் நரியை வளர விட்டீர்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நரி முகத்தில் விழித்தால் நல்லது என்று யாரும் நரிக்குறவர்கள் தவறான தகவல்களை தந்து விட்டார்களோ. என்னவோ. நன்றி நேயர்களே அடுத்தவாரம் சந்திப்போம்.

நேயர்கள் இதுவரை கேட்டது. வயலும் வாழ்வும். விஷேட அறிவித்தலொன்று. இங்கிலாந்தில் இருந்து புறப்பட இருக்கின்ற பனைமரக்கப்பலின் உண்மையான பெறுமதி பதினான்கு கோடி ரூபா. ஆனால் எமது நரி மூளைகளை உபயோகித்து 46 கோடி ரூபா என டாக்யுமென்ட் தயாரித்துள்ளோம். இன்ஸ்யூரன்ஸ் கிளைம் பண்ண வசதியாக இருக்கும். இதனால் கிடைக்கும் தேறிய இலாபத்தை கொண்டு முழுக்க முழுக்க சகீலாவை வைத்து கற்புக்கரசி என்ற முழுநீள சோகப்படத்தை தயாரிக்க உள்ளோம் என்பதை இந்த நேரத்தில் தாயக உறவுகளான கடுகு, சீரகங்களுக்கு அறியத்தருகின்றோம்.

வணக்கம் கொத்தவரங்காய்களே. அண்ணா பூசணிக்காய் இங்கு வந்துள்ளார். அண்ணா பூசணிக்காயை தெரியாதவர்கள் காய்கறி உலகில் இருக்க முடியாது. கொழும்பு பெட்டா பஸ் நிலையத்துக்கு அருகில் இவரை 'புல்தோஸ்'என்று இனிப்பாக அழைப்பர்கள். எமது தாயக உறவுகள் திருஷ்டி கழிப்பதற்காக இவரை குண்டுகட்டாக கட்டி வீட்டின் நாலு மூலையிலும் தொங்க விட்டிருப்பார்கள். பல இடங்களில் இவரின் மேல் சூடத்தை ஏற்றி நடுரோட்டில் போட்டுடைப்பர்கள். அண்ணாவுக்கு 'ரோஷம் கெட்ட அண்ணா' என்ற செல்லப் பெயரும் உண்டு.

முதலில் அழைப்புக்கு செல்வோம். வணக்கம், அண்ணா பூசணிக்காண்ணா, நான் பிரான்சில் இருந்து முட நரி பேசுறன். சொல்லுங்கோ. ஒரு கிழ நரியில. ஒரு நரி முட நரி. முட நரி பிடரியில். ஒரு பிடி நர மயிர். இப்படி தினமும் நண்பர்களெல்லாம் கேலி பண்றாங்கண்ணா. இதற்கு நான் என்ன பதில் சொல்லட்டும். கடலோரம் உரல் உறுழுது புரழுது என நீங்கள் அவர்களைப் பார்த்து கேலி செய்யுங்கள். இப்படி என்றால் அர்த்தம் என்னண்ணா. உறவுகளே ஒருவர் ஒரு கேள்வி மட்டும்தான் கேட்கலாம். அடுத்த அழைப்புக்கு செல்வோம்.

அண்ணா நான் நோர்வையிலிருந்து பேசுகின்றேன். நேற்று மூன்று பேர் எனது வீட்டுக்கு வந்து தலைவர் ஜம்போஜெட் ஒன்று வாங்கி அடிக்கப் போறாராம் என்று 3000 யூரோ கேட்டார்கள். நான் 2500 யூரோ கொடுத்த நான். எப்போ அண்ண அடிப்பாங்கள். நல்ல கேள்வி. இப்போது தலைவர் எல்லா பன்றிகளையும் உள்ளே எடுத்துட்டார்.
இன்னும் ஒரு ஆறு பன்றிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதுகளையும் உள்ள எடுத்துப்போட்டு தன்ர நரிக் குணத்தை காட்டுவார். நன்றி பூசணிக்காண்ண. உறவுகள் இப்படியான அறிவு பூர்வமான கேள்விகளை கேட்கும் போது எனது உடம்பு புல்லரிக்கிறது.நன்றி நேயர்களே.மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

வணக்கம் ரத்தத்தின் ரத்தங்களே. அதி விஷேட செய்தியொன்று தாயகத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், இதய நோய் உள்ளவர்கள் தங்கள் காதுகளை பொத்திக் கொள்ளவும். ரத்தத்தின் ரத்தங்களே தாய் நரி கூட்டத்துடன் பன்றிகளிடம் சரணடைந்து விட்டது. விடயம் எவருக்கும் தெரியமுன்னம் உங்கள் இடங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த செய்தியை எதிர் தரப்பு கேட்டுக் கொண்டிருக்கும் என பயப்படாதீர்கள். இரத்தம், கொலை என்றால் அவர்களுக்கு ரொம்ப பயம். அதனால் அவர்கள் காதுகளை பொத்திக் கொண்டிருப்பார்கள். வாழ்க நரித்தலைவர்.

No comments:

Post a Comment