பாச்சலுக்குள்ளாகும் பத்திரிகை சுதந்திரம். -கிழக்கான் ஆதம்-
சுதந்திரமான செயற்பாடு, ஊடக சுதந்திரம் என்பதெல்லாம் மிக அழகான வார்தைகள் இவை சிட்னிக்குப் பொருந்தும். பல வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் இடத்திற்குப் பொருந்தாது. -கொதபாய ராஜபக்ஸ – பாதுகாப்புப் செயலாளர்,
இலங்கை என்ற அழகான தீவில் இன்னும் சிறகடிக்க முடியவில்லை அந்தச் சிட்டுக் குருவிக்கு அது சுதந்திர ஊடக செயற்பாடு. ஊடகத்துறை பகிஷ்கரிப்பு என்று போராட்டக் குழுக்களும் அரசும் எற்படுத்தியுள்ள தீர்மானங்கள் அறிவுடைய செயலா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும். ஊடக சுதந்திரம் என்பது தாங்கள் விரும்புகின்றவற்றை அங்கிருக்கும் ஊடகங்கள் வெளியிட அனுமதிப்பதில்லை. விரும்பாதவற்றையும் தங்களுக்கு எதிரானவற்றையும் வெளியிட அனுமதிப்பதுடன் தங்கள் மீதான விமர்சனங்களை தாங்கிக் கொள்வதுமாகும்.
அவ்வாறு வெளியிட அனுமதிக்காமல் போவதானது அந்த செய்திகள் தொடர்பான பூதாகரமான ஒரு மனநிலையைத்தான் பார்வையாளர்களிடம் தோற்றுவிக்கும். இது ஒரு அரசுக்கு அல்லது ஒரு அமைப்புக்கோ பாதுகாப்பானதல்ல. இறுதி இலட்சியத்துக்காக தற்காலிகத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது நமது இறுதி இலட்சியப் போக்கை சிதைத்துவிடும் அபாயகரமானதாகும்.
“தர்க்கரீதியான, கேட்பதற்கு இனிமையான, உயர்ந்த கோட்பாடுகளைக் கூறுவது சுலபம் என்பது உண்மையே, அவற்றைச் செயல்படுத்துவது மிகவும் கடினம். ஏனென்றால் வாழ்க்கை தர்க்கரீதியாக இருப்பதில்லை. மனிதர்களுடைய நடத்தையின் தரம் நாம் விரும்புவதைப் போல உயர்ந்திருப்பதில்லை. நாம் ஒரு காட்டில் வசிக்கிறோம். அங்கே அடுத்தவர்களைக் கடித்துச் சாப்பிடுகின்ற தனி நபர்களும் அமைப்புக்களும் விருப்பம் போல அலைந்து கொண்டு சமூகத்தைக் காயப்படுத்த முயலுகின்றன. சம்பவங்களின் வழக்கமான போக்கை மாற்றிவிடுகின்ற போர்கள் அல்லது சுதந்திரப் போராட்டங்கள் அல்லது வர்க்கப் போராட்டங்களைப் போன்ற நெருக்கடிகள் ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட சமயங்களில் நாம் வகுத்துள்ள உயர்ந்த கொள்கைகளை நூற்றுக்கு நூறு சதவிகிதம் கடைப்பிடிக்க முடிவதில்லை. ஏனென்றால் அவை குறிப்பிட்ட அளவிற்கு உயர்வான மனித நடத்தையை முன்னனுமானிக்கின்றன.
இப்படிப்பட்ட நெருக்கடிகளில் அல்லது புரட்சிகரமான காலகட்டங்களில், தனி நபர் அல்லது சமூகக் குழுவின் வழக்கமான சுதந்திரத்தை ஓரளவிற்காவது மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. எப்படியிருந்தாலும் அது ஆபத்தான காரியம். சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவில்லை என்றால் தீய விளைவுகள் ஏற்படும். நாம் கவனத்துடன் நடந்துகொள்ளவில்லை என்றால் நாம் எந்தத் தீமையை எதிர்த்துப் போராடுகிறோமோ, அதற்குப் பலியாகிவிடுவோம்.
ஜனநாயகம், சுதந்திரம், மக்கள் உரிமைகள் ஆகியவற்றைப் பற்றி நாம் பேசும்போது அவை பொறுப்பையும் கட்டுப்பாட்டையும் உள்ளடக்கி இருக்கின்றன என்பதை நாம் எப்போதும் நினைவிற்கொள்ள வேண்டும். தனி நபரிடம் அல்லது சமூகக் குழுவிடம் கட்டுப்பாடும் பொறுப்புணர்ச்சியும் இல்லாவிட்டால் உண்மையான சுதந்திரம் நிலவுவது சாத்தியமல்ல. அடிமைத்தனம் மற்றும் உரிமை மறுப்பு என்னும் நிலையிலிருந்து சுதந்திர அரசு என்னும் நிலைக்கு மாறுகின்றபோது கட்டுப்பாட்டை மீறுகின்ற ஒருவிதமான போக்கு அநேகமாக தவிர்க்க முடியாததாகும். இது மிகவும் வருந்தத்தக்கது.” -ஜவஹர்லால் நேரு,போராட்ட கால சிந்தனைகள்- (நேரு, இந்தியப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும் 'அமிர்த பஜார்' பத்திரிகையின் ஆசிரியருமான துஷார் காந்தி கோஷ¤க்கு 1940 மார்ச் 4 அன்று எழுதிய கடிதத்திலிருந்து)
இலங்கையில் பத்திரிகையாளரும் ஊடகங்களும் பாச்சலுக்கு உள்ளாவதற்கு காரணத்தை நோக்குவோமானால் இத்தகைய சமூகப் பொறுப்பில்லுள்ளவர்கள் ஒரு குழுவையோ அல்லது ஒரு சாராரையோ சார்ந்து இயங்க வேண்டிவருவது அல்லது நிர்பந்திக்கப்படுவது ஒரு காரணம் எனலாம். அவர்கள் அந்த நிர்பந்தங்களில் இருந்து வெளியேவர முற்படும்போது அல்லது மறுத்தபோது கொலைசெய்யப்பட்டுள்ளனர். அல்லது நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இத்தகைய நெருக்குதல்களை பத்திரிகையாளர்களுக்கு அளித்த பெருமை முதலில் போராட்ட இயக்கங்களில் புலிகளுக்கு உண்டு. 1926ம் ஆண்டளவில் இலங்கையில் முதலில் தமிழர்களால் அமைக்கப்பட்ட இலங்கை இளைஞர் காங்கிரஸ் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சியாக அமைந்தது இதன் செயற்பாடுகள் இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒத்த்தாக இருந்த்துடன் அந்த தலைவர்களைய தலைவர்களாகவும் ஏற்று செயற்பட்டது.
இதன் தொடர்சியாகத்தான் மகாத்மா காந்தி 1927 ம் ஆண்டு யாழ்பாணத்திற்கு வந்தார் 1931ம் ஆண்டு கமலா தேவி சத்ரோபாத்திரா இவ்வியக்கத்தின் ஆரம்பத்தில் ஊரையாற்றினார் இவ்வுரையே தமிழர் எழுச்சியில் ஒரு புயலாக மாற்றியது அதனைத் தொடர்ந்து நேரு 1932 ல் யாழ்பாணம் வந்திருந்தார். இவ்வாறு இலங்கை இந்திய சுதந்திரம் என்ற எண்ணக்கருவுடனே தமிழர் எழுச்சி கொண்டனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு அப்போதைய சிறந்த தலைவர்களாக செயற்பட்ட அனைவரும் 1971 மற்றும் 1972 ம் ஆண்டுகளில் தடம்புரண்ட இரத்த சித்தாந்ததை எதிர்க்க வக்கற்றவர்களாக தங்கள் இடத்தில் இருந்து விளகிக் கொண்டனர். அல்லது விட்டுச் செல்லுமாறு வற்புறுத்தப் பட்டனர். இதற்கு இந்த நிகழ்சி ஒரு உதாரணம்.
1972ம் ஆண்டு தமிழருசுக் கட்சியின் ஒரு கூட்டத்தில் ஏஸ்.ஜெ.வி. செல்வநாயகம் வீற்றிருந்த மேடையில் (அப்போதைய சிறந்த மேடைப் பேச்சாளரும்) எழுத்தாளர் கவிஞருமான (புலிகளின் ஆத்மார்த்த கவிஞர்) திரு.காசி ஆனந்தன்
“திரு. துரையப்பா, திரு.சுப்பரமணியம், திரு. அருளம்பளம், திரு. ஆனந்த சங்கரி ஆகியோர் தமிழினத்தின் எதிரிகள் அவர்கள் இயற்கையான மரணத்திற்கோ அல்லது விபத்தான மரணத்திற்கோ தகுதியனவர்கள் அல்லர் என்றும் தமிழ் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் அவர்கள் எப்படி மரணிக்க வேண்டும் என்பதை தீர்மானிக் வேண்டும்” என்றார்.
இவ்வாறான ஒரு எழுத்தாளரின் மிக தீவிரமாக கருத்துக்களே ஈழத்தின் துரதிஷ்டம் எனலாம்.
ஆரம்ப காலத்தில் விதைக்கபட்ட இவ்வாறான நஞ்சு விதைகள் நாளடைவில் பத்திரிகையாளர்களை துறை சார் நலனுடன் நோக்கும் ஒரு பாங்கை இலங்கையில் ஏற்படுத்திவிட்டது. ஒருவருடைய எழுத்தை படிப்பதற்கு முதலே அவர் எந்த துரை சார்ந்தவர் என்று பார்த்து அதன் பின் அதனைப் படிக்கும் அல்லது கேட்கும் பார்கும் படிவத்தை நம் முன்னால் புகுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை.
ஆகவே ஒவ்வொர் சாராரும் தங்கள் கருத்துச் சார்திருக்கும் ஒருவரையொ அல்லது சாராரையோ மட்டுமே ஊடகவியலாளராக ஏற்பதுடன் மற்றவர்களை துரோகிகளாகப் பார்கின்றனர். இந்த மனித நாகரீக வக்கிரம் தொடர் கதையாகவே நம் தேசத்தில் உள்ளது.
இவ்வென்னப் போக்கானது ஒரு சிறந்த தலைமுறையை நமக்கு தருவதில் பாரிய இடைவெளியை ஏற்படுத்திவிடும் என்பது திண்னம்.
திவிரவாதிகளும் மனித நாகரீகத்திற்கு எதிரானவர்களும் ஊடகவியளாலர்கள் என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு தங்கள் இரத்த சித்தார்ந்ததை முன்னெடுப்பது இன்று உலகில் ஊடகத்துறை முன்நோக்கும் மிகப் பெரிய சவாலாகும் இந்த அளவு கோளுக்கு விடுதலைப் புலிகள் தொடக்கம் அல்கைய்தா வரை யாரும் விதிவிலக்கல்ல.
இவர்களின் மறைமுக செயற்பாடுகளே இலங்கை தொடக்கம் உலக முழுமைக்கும் ஊடகவியளார்களின் சுதந்திர செயற்பாட்டை முடக்கும் செயலாக உள்ளது என்பதை நாம் சொல்லியாக வேண்டும். இதற்கு சற்றும் குறைவில்லாத விததிலேயே இலங்கையில் இருந்த அரசுகளும் செயற்பட்டுள்ளன. 1974ம் ஆண்டு ஜனவரியில் யாழ்பாணத்தில் நடந்த உலகத் தமிழர் மகாநாட்டில் பொலிஸார் புகுந்து தாக்கியதை இதற்கு ஆரம்பமாகும்
தமிழர் போராட்ட ஆரம்பகாலப் பகுதியில் புலிகளின் ஆயுத போராட்டம் சார்ந்த கண்ணொட்டத்தை வெறுத்து வெளியேறிய புதிய பாதை பத்திரிகையின் ஆசிரியர் சுத்தரம் யாழ்பாணம் சித்திரா அச்சகத்தில் வைத்துக் கொல்லப்பட்டார் இச் சம்பவம் பத்திரிகையாளர் படுகொலையில் பிள்ளையார் சுழி எனலாம். இவர் புலிகளால் கொல்லப்பட்டதாக தகவல்கள் சொல்கிறது 1976ம் ஆண்டு தமிழர் விடுதலை ஐக்கிய முன்னனியின் “இளைஞர் குரல்” என்ற பத்திரிகையின் ஆசிரியரும் சமூக சேவகருமான திரு. இறைகுமாரன் இந்தப் பத்திரிகையை விட்டு விலகி அக் கட்சியை கடுமையாக விமர்சித்தபோது தனது நண்பர் உமைகுமாரனுடன் சேர்த்து சுட்டுக் கொள்ளப்பட்டார் இதை தமிழர் விடுதலை ஐக்கிய முன்னனியே நடத்தியதாகவே குறிப்புகள் காட்டுகின்றன.
அதேபோலவே 1989ம் ஆண்டு முறிந்த பணை என்ற நூலை இணைந்து எழுதிய காலாநிதி. ராஜினி திரணகம அந் நூல்வெளியீட்டுக்கு தயாராகும் போது புலிகளால் கொல்லப்பட்டார்.
இதே 1989ம் ஆண்டு இலங்கையின் முதலாவது சிங்கள வானொலி அறிப்பாளரும் சுயாதினத் தொலைக்காட்சியின் பணிப்பாளருமான திரு.தேவிஸ் குருகே படுகொலை செய்யப்பட்டார்.
அடுத்து தமிழர்களின் நெஞ்சங்களில் என்றும் நிலையாக நிற்கும் மதுரக் குரலோன் திரு. கே.எஸ் ராஜா (கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்தியாவில் மிகப் புகழ் மிக்க அறிவிப்பாளரான இவர் கொழும்பு கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டார். இவரை மக்களின் குரல் என்ற நிகழ்சியை இலங்கை வானொலியில் நடத்தியதற்காக புலிகள் கொன்றதாக ஒரு சாராரும் தான் சாந்திருந்த அமைப்பே உற்புசல்கள் காரணமாக கொன்றதாக இன்னொரு சாராரும் தெரிவிக்கின்றனர்.
திரு.ரிச்சர்ட் டி. சொய்சா இலங்கையில் இருந்த முன்னணி ஊடகவியாலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் நடிகராவார். இவர் இனம் தெரியாத நபர்களால் இவரது வீட்டில் இருக்கும் போது கடத்தப்பட்டு 1990 இல் கொலை செய்யப்பட்டார் இலங்கையின் தேசிய தொலைக்காட்சிச் சேவையான ரூபவாஹினியில் ஆங்கிலசெய்தி வாசிப்பாளராகவும் மற்றும் பத்திரிகை ஆசிரியராகவும் செயலாற்றினார்.
திரு.மயில்வாகனம் நிமலராஜன் 2000ம் ஆண்டு கொழும்பில்வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் இவர் பி.பி.சி. தமிமோசையின் மற்றும் சந்தேசிய சேவைகளின் செய்தியாளர் என்பது குறிப்பிடத் தக்கது. இவரை அரசுடன் சேர்ந்து இயங்கும் ஆயுத குழுவே இவரை புலிகளின் ஆதரவாளர் என்ற போர்வையில் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
திரு. ஐயாத்துரை நடேசன் (நெல்லை நடேசன்) 2004ம் ஆண்டு மட்டகளப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவரும் புலிகளின் ஆதரவாளர் என மற்றெரு சாரார் சுட்டுக் கொன்றதாகவே அறிய முடிகிறது. திரு. தர்மரத்தினம் சிவராம் (தராக்கி சிவராம்). 2005ம் ஆண்டு கொழும்பில்வைத்துக் கொல்லப்பட்டார். இவரும் புலிகளின் பிணாமி என்ற காரணத்தினால் மற்ற ஆயுதக் குழுக்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது இவருக்கு புலிகளின் மாமனிதர் அந்தஸ்து வழங்கி கௌரவிக்கப்பட்டது
திருமதி.ரேலங்கி செல்வராஜா இலங்கையில் இருந்த முன்னணி தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர் தொடக்க நாட்களில் திரைப்பட நடிகையாகவும் இருந்த இவர் ஆகஸ்ட் 2005 கொழும்பில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திரு. லசந்த விக்கிரமதுங்க இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் கொழும்பில் இருந்து வெளியாகும் த சண்டே லீடர் என்ற ஆங்கில ஞாயிறு இதழ், மற்றும் புதன் தோறும் வெளிவரும் "மோர்ணிங் லீடர்" வார ஏட்டின் ஆசிரியராகவும் இருந்து வந்தார். 8 ஜனவரி, 2009 இல் இவர் இனந்தெரியாதோரால் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரின் கொலைக்கு அவரைச் சார்ந்தவர்களால் இலங்கை அரசே குற்றச் சாட்டுக்கு உள்ளானாலும் இன்னும் இவரது கொலை மர்மமாகவே இருக்கிறது இவை தவிர பல பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்களின் பாதுகாப்புக் கருதி தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் இருந்தவாரே தங்கள் பணியை செய்து வருகின்றனர்.
இதற்குள் இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாசும் அடக்கம். ஊடகவியாளர் என்ற ஒரு சமூகத்தின் வளர்சியில் மிகப் பங்காற்றும் சாத்வீகப் போராளிகளை ஆயுதங்களின் மிரட்டல்களும் பலி வாங்கள்களும் மனித அநாகரிகத்தின் அடயாளம் என்றே கூறவேண்டும்.
யுத்தம் நடக்கின்ற அல்லது ஒரு போராட்டம் நடக்கின்ற ஒரு தேசத்தில் ஊடங்கள் மீதான அடக்கும் அதிகாரம் என்பது உலகம் முழுவதும் இருந்தே வந்திருக்கின்றது. என்பதுவே இந்த நாகரீக உலகின் வருத்தம் தரும் உண்மையாகும். ஆனால் தற்போது இலங்கையில் இருக்கும் நடைமுறையும் அரசு புலிகள் மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களின் ஊடங்கள் மீதான பாய்சலானது மிகவும் அநாகரிகமானதாகவே எண்னத் தோன்றுகிறது.
ஊடகங்கள் என்பது மனித நாகரீகத்தின் மற்றும் காலாச்சார நடைமுறைகளை தீர்மானிக்கும் அல்லது நாகரீகத்தை புகட்டும் மிகப் பெரும் சக்தியாக இன்று உலகில் வளர்ந்து நிற்கிறது என்பதை இவர்கள் புரிந்து கொள்ளல் வேண்டும். ஊடகங்கள் மீதாக அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது கட்டுப்படுத்தும் சாரார் தொடர்பான பூதாகரமான ஒரு நிலையையே உடகங்கள் தோற்றுவிக்கும்.
இன்னிலையானது அவர்களின் இலக்கை அழித்து அவர்களின் இருப்பை சர்வதேசத்திலும் மக்கள் மத்தியிலும் கேள்விக் குறியாக்கிவிடும். இதற்கு புலிகள் அமைப்பையே நல்ல உதாரணமாக கூறலாம். அவர்கள் தங்களுக்கு எதிரான ஊடகவியளாலர்களை அழித்து அல்லது நாட்டை விட்டு வெளியேற செய்து விட்டு தாங்கள் சார்ந்த பிரச்சாரங்களை மட்டும் தங்கள் ஊடகம்கள் ஊடாக முன்னெடுத்து வெற்றிக் கனவுகளோடு பார்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அறியாமலே கரையான் புத்தாக அவர்களின் பிரச்சாரம் தொடங்கி அனைத்தும் இன்னொர் சாராரால் அழிக்கப் பட்டுக் கொண்டிருப்பதை அவர்களால் உணர முடியாமலிருந்தது. முடிவு ஊடக சுதந்திரத்தை கேள்விக் குள்ளாக்கிய அவர்களாலேயே ஊடக சுதந்திரம் பற்றி கூக்குரல் இடும் அளவிற்கு நிலமை மாற்றம் அடைந்துள்ளது.
தாங்களின் ஊடாக தாங்கள் வெளியிடும் சுய பிரச்சாரங்களை மக்கள் நம்ப தாயாரில்லை என்ற நிலையினாலோ என்னவொ! தெற்கில் வெளியாகும் சிங்கள பத்திரிகை செய்திகளையே தங்கள் செய்தியாக கூறுமளவிற்கு நிலமை தலைகீழானதை உணர முடிகிறது.
புலிகளாயினும் அரசாயினும் வேறு எவறாயினும் இன்று தங்களின் வக்கிரகங்களை கட்டவிழ்த்து விடுவது நம் தேசத்தைப் பொறுத்தவரை ஊடகங்களிலும் பொது மக்கள் மீதும்தான். என்றாலும் தடைகளுக்கப்பாள் ஊடகங்களே வெற்றியோடு செயற்படுகின்றன. ஊடகவியளாளர்களின் பேனாக்களும் குரல்களும் எத்தனை முறை நசுக்கப்பட்டாலும். அவை மறு பிறவியெடுத்து இன்னும் வேகமாக உலகின் மனித நலனுக்காக செயற்படவே செய்யும்.
உங்களது உயர்வான இலக்குகளை சிறுமைப்படுத்துவோரிடமிருந்து விலகியே நில்லுங்கள் - மார்க்ட்வைன். VIII
0 comments :
Post a Comment