Thursday, March 19, 2009

விமானப்படை பேச்சாளர் இலங்கைநெற் இற்கு வழங்கிய பேட்டி.



விமானப்படையின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக்க நாணயக்கார அவர்கள் இலங்கைநெற் இற்கு மின்னஞ்சல் ஊடாக வழங்கியுள்ள பேட்டி.

கேள்வி : இறுதியாக புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போதும்கூட புலிகளின் விமானங்கள் கொழும்பு வரமுன்னர் விமானப்படையினரால் தடுக்க முடியாமல் போனதற்கு காரணம் என்ன?

பதில் : புலிகளின் விமானங்கள் தாளப்பறந்து முடியுமானவரை நிலமட்டத்துடன் பறந்து வந்துள்ளது. புலிகள் பயன்படுத்திய சிலின் 143 விமானங்களின் அதிகூடிய பறப்புவேகம் மணித்தியாலயத்திற்கு 240 கிலோ மீற்றர்கள் ஆகும். எமது கண்காணிப்பு கருவிகளில் ஆகக்குறைந்தது மணித்தியாலயமொன்றிற்கு 400 கிலோமீற்றர் தூரம் பதிவு செய்யப்பட்டுள்ளமையால் வேகம் குறைந்த விமானம் ஒன்றை குறிப்பாக இரவு நேரத்தில் இனம் காண்பது கடினம்.

கேள்வி : கட்டுநாயக்க பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானம் தாக்கப்பட்ட விதம் குறித்து விரிவாக விளக்க முடியுமா?

பதில் : கட்டுநாகயக்க விமானப்படைத்தளத்தில் நிலைகொண்டுள்ள 32 வது விமான எதிர்பு துப்பாக்கிப் படைப் பிரிவினரால் விமானம் சுட்டு வீழ்த்ப்பட்டதுடன் புலிகளின் விமானி 12.07 மில்லி மீற்றர் துப்பாக்கியினால் தாக்கப்பட்டார். அவரது நுரையீரல் பகுதியில் குண்டொன்று தங்கிக்கொண்டது.

கேள்வி : சரியான நேரத்தில் விமானியின் உடலில் குண்டுபாய்ந்து அவரை மயக்கமடைய செய்திருக்கா விட்டால் அவர் கிபீர் விமானங்களின் தரிப்பிடத்தை தாக்கியிருப்பார் எனக் கூறப்படுகின்றது. அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அதன் விளைவுகள் எவ்வாறு இருந்திருக்கும்?

பதில் : அது அவ்வாறுதான், அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருக்காவிட்டால் விமானத் தரிப்பிடத்தை மோதித் தாக்கியிருப்பார்.

கேள்வி : புலிகளால் தமது இலக்குகளை அடைய முடிந்திருந்தால் வன்னிப்போரில் அது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?

பதில் : தரித்து நின்ற விமானங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தாக்குதலில் அவர் வெற்றி கண்டிருந்தால் விளைவுகள் பாரதூரமானதாக இருந்திருக்கும். ஆனால் நாம் எமது முழுப்பலத்தையும் ஓர் இடத்தில் குவித்து வைத்திருக்கவில்லை. காரணம் இவ்வாறான தாக்குதலை நாம் எந்த நேரத்திலும் எதிர்பார்த்தே இருந்தோம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை புலிகளின் பொய்பிரச்சாரத்திற்கும் தம்மவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் புலிகளுக்கு உதவியாக அமைந்திருக்கும்.

கேள்வி : புலிகளிடம் மேலும் விமானங்கள் இல்லை என்று நம்புகின்றீர்களா?
பதில் : அவர்களிடம் மிகவும் சிறிய ரக விமானங்கள் ஒன்று அல்லது இரண்டு இருக்காலாம்.

கேள்வி : வன்னிக் கள நிலமைகள் எவ்வாறு காணப்படுகின்றது?

பதில் : யுத்தக்களம் புதுக்குடியிருப்பின் வடகிழக்குப் பகுதிக்குள்ளும் சாலையின் மேற்குப் பகுதியினுள்ளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கேள்வி : இன்றைய படையினரின் வெற்றிக்கான பின்னணி யாதெனக் கருதுகின்றீர்கள்?


பதில் : சிறந்த அரசியல் தலைமையும் இராணுவத்தலமையும் முதற் காரணம், இரண்டாவது யுத்தம் சம்பந்தமான விடயங்களை மக்களுக்கு சரியான முறையில் எடுத்துச் செல்லுதலுடன் புலிகளின் விசமப் பிரச்சாரங்களை முறியடித்தல். மூன்றாவது யுத்தத்தில் பொதுமக்கள் பாதிப்படைகின்ற விடயங்களை அவதானித்து அவர்களை சாதுரியமாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துதல். நான்காவது வீரர்களை வெற்றியை நோக்கி உற்சாகப்படுக்தல்.

கேள்வி : வன்னி மீட்ப்பு போரின் உங்கள் பங்களிப்பு யாது? அவற்றில் குறிப்பிடக் கூடிய சில விடயங்களை விரிவாக கூற முடியுமா?

பதில் : மேலே குறிப்பிட்ட 2, 3, 4 என்பவற்றைதான் நாம் செய்து வருகின்றோம்.

கேள்வி : 1990 களின் நடுப்பகுதியில் சாம் ரக விமான எதிர்ப்பு இலகு ஏவகணைகள் விமானப்படையினருக்கு அச்சுறத்தலாகவும் சில காலங்கள் விமானப்படையின் விமானங்கள் வன்னியின் வான்பரப்பில் பறக்காமல் கூட இருந்திருக்கின்றது. அவ்வாறு புலிகள் மீண்டும் ஒரு முறை விமான எதிர்ப்பு ஏவகணைகளைத் தருவித்து விமானப்படையினருக்கு பாரியதோர் அச்சுறத்தலை உருவாக்குவார்களாயின் வன்னிப் போரின் நிலைமைகளில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படும்?

பதில் : தானியங்கி ஏவுகணை எதிர்பு சாதனங்களை நாம் கொண்டுள்ள வரைக்கும் சாம் போன்றவற்றால் எமக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது.

கேள்வி : இன்று வன்னியின் ஒரு சிறிய நிலப்பரப்பினுள் பெருந்தொகையான மக்களும் புலிகளும் முடங்கியுள்ளனர் அல்லது முடக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புலிகளின் இலக்குகளை நீங்கள் எவ்வாறு தனித்து இனங்காண்கின்றீர்கள்?

பதில் : நாம் இலக்குகளைத் தாக்கும்போது அப்பகுதியில் பொதுமக்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர்தான் தாக்குகின்றோம். ஆனால் அங்கு சில சந்தர்பங்களில் ஒரு சில பொதுமக்கள் பாதிக்கப்படுவதுண்டு, அவர்கள் புலிகளினால் பலவந்மாக தம்முடன் மனிதகேடயங்களாக தடுத்து வைத்துள்ள மக்கள்.

கேள்வி : விமானப்படையினரின் வான் தாக்குதல்கள் மூலம் வன்னியின் அப்பாவித் தமிழ் மக்கள் இலக்கு வைக்கப்படுகின்றார்கள் என புலிகளால் வெளியிடப்படுகின்ற செய்தி பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : புலிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடந்த வருடம் மார்களி மாதம் மற்றும் இவ்வருடம் ஜனவரி மாதங்களில் இவ்வாறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

கேள்வி :வன்னியில் வான்படையினர் கிளெஸ்ரெர் போன்ற தடைசெய்யப்பட்டுள்ள குண்டுகளை வீசுவதாக புலிகளின் செய்திகளின் ஊடாக தெரியவருகின்றது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : உலக யுத்த விதிகளுக்கமைய தடைசெய்யப்பட்ட கிளெஸ்ரர் உட்பட எந்தவிதமான குண்டுகளையும் நாம் பயன்படுத்துவதில்லை.

கேள்வி : உங்களது கணிப்பில் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற யுத்தம் எவ்வளவு காலத்தில் முடிவு பெறும் என எதிர்பார்கின்றீர்கள்?

பதில் : இது விடயத்தில் குறிப்பிட்டதோர் காலவரையறையை கூற முடியாது. புலிகள் தடுத்து வைத்திருக்கின்ற மக்களை விடுக்கின்றபோது யுத்தம் முடிவுக்கு வரும்.

கேள்வி : புலிகள் இயக்கம் முற்று முழுதாக அழிக்கப்பட்டு அல்லது பலமிழக்க செய்யப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்கான தீர்வு எவ்வாறு அமையும் என எதிர்பார்கின்றீhகள்?

பதில் : தமிழ் மக்களுக்கு சமூக, பொருளாதாரா, அரசியல் அபிவிருத்தி தேவைப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சி சமூக வழர்ச்சி மற்றும் அரசின் மீது நம்பிக்கையை கொண்டுவரும். தமிழ் மக்களுடைய நிலைமைகளை சிங்கள மக்கள் யாதார்த்த பூர்வமாக உணர்ந்து கொண்டு இனங்களுக்கியையேயான இணக்ப்பாடொன்றை உருவாக்க தம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். XIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com