இரணைப்பாலை சந்திக்கு படையினர் சென்றடைவு. புலிகளுக்கு பாரிய இழப்பு
புதுக்குடியிருப்பிலுள்ள புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் ஒன்றான இரணைப்பாலை சந்தியை பாதுகாப்புப் படையினர் நேற்றுக் காலை அடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புதுக்குடியிருப்பில் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவினர் இந்தச் சந்தியை சென்றடைந்துள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரணைப்பாலை பிரதேசத்திற்குள் பிரவேசித்த 58வது படை பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படை யினர் நடத்திய கடுமையான தாக்குதல்களுக்கு பின்னர் இரணைப்பாலை சந்தியை அடைந்துள்ளனர். படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களில் புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரிகேடியர், வன்னி படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும் என்றும் தெரிவித்தார்.
இரணைப்பாலை சந்தியை படையினர் சென்றடைந்ததன் மூலம் தற்பொழுது புலிகளுக்கு எஞ்சியிருந்த பிரதான விநியோகப் பாதை, புதுக்குடியிருப்பு - புதுமாத்தளன் பிரதான வீதியின் செயற்பாடுகள் மற்றும் அந்தப் பிரதேசத்தில் தொடர்புபடும் பல்வேறு வீதிகளின் தொடர்புகள் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார்.
புலிகளின் புலனாய்வுத்துறை தலைவரின் முக்கிய தளமும், நடவடிக்கைத் தளமும் இரணைப்பாலை பிரதேசத்திலேயே அமையப்பெற்றுள்ளது. படையினர் இரணைப்பாலை சந்தியை சென்றடைந்ததன் மூலம் புலிகளுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தை நோக்கி முன்னேறிவரும் பாதுகாப்புப் படையினர் ஒரு கிலோ மீற்றர் நீளமான பாதுகாப்பு மண் அரணை கைப்பற்றியுள்ளதாக பிரிகேடியர் தெரிவித்தார். கடுமையான தாக்குதல்களுக்குப் பின்னரே புலிகளின் பாதுகாப்பு மண் அரணை படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த மோதல்களின் போது படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருந் தொகையான ஆயுதங்களையும் சடலங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
ரி-56 ரக துப்பாக்கிகள் - 25, புலிகளால் தயாரிக்கப்பட்ட மோட்டார் குண்டுகள் - 05, தொலைத்தொடர்பு கருவிகள் - 2 மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.
Thanks Thinakaran
0 comments :
Post a Comment