Thursday, March 26, 2009

ஜனாதிபதி தலைமையில் அனைத்துக் தமிழ் கட்சிப் பிரதிநிதிகள் சந்திப்பு : யாழ்பாணத்தில் உள்ள 22 ஈபிடிபி யினரின் முகாம்களை அகற்றக்கோரினார் சங்கரி.



நேற்று மாலை அலறிமாளிகையில் ஜனாதிபதி தலைமையில் அனைத்து தமிழ் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இவ் ஒன்று கூடலின் போது பேசிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி அவர்கள் யாழ் மாவட்டத்தில் உள்ள படைமுகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு அருகில் மொத்தம் 22 ஈபிடிபி முகாம் உள்ளதாகவும் அவை அங்குள்ள தமிழ் மக்களின் இயல்பு வாழ்கைக்கு மிகவும் அச்சுறத்தலாக உள்ளதாகவும் அவற்றை அகற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அங்குள்ள மக்கள் சுயாதீனமாக வாழ வழிவிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர் வன்னி மக்களை புலிகளிடத்தில் இருந்து மீட்க மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் மக்கள் சிறியதோர் பிரதேசத்தினுள் முடக்கப்பட்டுள்ளனர். அவர்களை அப்பிரதேசத்தில் இருந்து வெளியே கொண்டுவருவதற்கு இந்தியா மற்றும் ஐ.நா சபை போன்ற சர்வதேச ஸ்தாபனங்களின் உதவியை கோரமுடியும் என முன்மொழிந்தார். அதற்கு அங்கு குறுக்கிட்டு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழுதழுதென்றாலும் அவள் பிள்ளையை அவள் தான் பெறவேண்டும் என்ற முதுமொழியை கூறி இலங்கை ஓர் இறையாண்மை உள்ள நாடு எனவும் அதன் விவகாரங்களில் அந்நிய தலையீடு தேவையில்லை எனவும் பதிலளித்துள்ளார்.

சித்தார்த்தன் அவர்கள் பேசுகையில், யாழ்தேவியை செயற்பட செய்வதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுடன் இன்று மதவாச்சி வரை வரையறுக்கப்பட்டுள்ள ரயில் சேவையை வவுனியா வரை அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தபோதும் குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கி வேட்டுச்சத்தங்கள் ஓயும்வரை அரசினது நடவடிக்கைளில் மக்கள் பொறுமை காக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு பேசிய சிறிதரன் (சுகு) அவர்கள் பயங்கரவாதம் இலங்கையில் அடக்கப்படவேண்டும் எனவும் மறுபுறத்தில் தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு உடனடித் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் பிரதிநிதிகளின் சகல வேண்டுதல்கள் கருத்துக்களுக்கும் ஜனாதிபதி பதிலளித்தாகவும் அவரிடம் இருந்து மிகவும் நேரிய பதில்கள் வந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் பிரதிநிதி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment