அண்ண ரைட். வடக்குக்குப் போவோம். –யஹியா வாசித்- (பாகம்-1 )
கருணா பிழைப்பாரா? இல்லை பிள்ளையான் சாதிப்பாரா?
இப்போ திரும்ப தொடங்கிட்டாங்க 13 வது சரத்தை நீக்குவதா? இல்லை தொடர்வதா? இல்லை
அதுக்குள்ள கொஞ்சம் போய் கொத்தித் திருத்துவதா? வடக்கையும் கிழக்கையும் இணைப்பதா
இல்லை கூறு போட்டு பிரிப்பதா? அகன்ற சிறிலங்காவுக்குள்ள எல்லாமேவா? இல்லை ஒடுங்கிய தமிழர் தாயகத்துக்குள்ள எல்லாமேவா? கருணா பிழைப்பாரா? இல்லை பிள்ளையான் சாதிப்பாரா? டக்ளஸ் நாலு எம்பி சீட் எடுப்பாரா? இல்லை சங்கரியார் இரண்டு சீட் எடுப்பாரா?
எல்லாம் வடக்கில இருந்துதான் கேட்குது. கிழக்கில கப்சிப். யாரும் மூச்சு விடக்காணோம். மூச்சு விட எல்லோருக்குமே பயமாருக்கு. இருக்கிறதே போதும்டா சாமி என்பது போல் தெரிகிறது. ஆனால் எனக்குள்ள பல கேள்வி இருக்கிறது. அதை ஒரு நாலு வார்த்தை நறுக்குணு கேட்கணும் போல் இருக்கிறது. ஆகவே கேட்டு போர்றன். நீங்க மனதில கையை வெச்சு வஞ்சகமில்லாம யோசியுங்க. பிளீஸ்.
வேலணைக்காறியை பாராட்டி எழுதியதைப் பார்த்து விட்டு நேற்று புதுக் குடியிருப்புக்காறி சண்டைக்கு வந்துட்டா. எங்க வீட்டுக்கு ஞாயிற்றுக் கிழமை, ஞாயிற்றுக் கிழமை வந்து
ஓடியல் கூழ் குடித்து விட்டு இப்போ பெரிசா வேலணைக் காறியைப்பத்தி எழுதியிருக்கயளாம்
என்று எங்கடவர் சொன்னார் என்று ஒரு வாங்கு வாங்கி விட்டா. இவள் ரொம்ப நல்லவள்.
கள்ளம் கபடம் தெரியவே தெரியாது. வீட்டுக்குள்ள இரண்டு சாமிபடம் தொங்குது. ஓன்று அவட தங்கச்சி சாமி, மற்றது புருஷன்ட தம்பிச் சாமி. ஆறு வருடங்களுக்கு முன் வீரச்சாவடைந்த வன்னிச் சாமிகள் அவை. அடுப் பெரிப்பாளோ என்னவோ முதலில் அந்த சாமிகளுக்கு ஊது பத்தி எரித்து விட்டுத்தான் அடுத்த வேலை. இப்படி ஆயிரம் சாமிகள் ஒவ்வொரு தமிழச்சியின் வீட்டுக்குள்ளே குடியிருக்கின்றார்கள்.
செத்தும் கொடைகொடுத்த சீதக்காதிகளைப் பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு
செத்துச் செத்து வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த பக்தைகளுக்கு யார் ஆறுதல் கூறுவது. நல்ல முள்ளு மீனைக் கொண்டு வந்து அவித்து அதற்குள்ளே இருக்கும் முள்ளுகளை 'இஞ்சப்பாருங்கப்பா முள்ளுகெடந்தா அக்காட புருஷன் தின்ன மாட்டார்.இதை தனிய எடுத்துடுங்கப்பா'என்று புருஷனை மிரட்டி வேலை வாங்கி,கணவாய் ஒரு பிடி,சுத்தமான ஒடியல் மாவு என்று தெரிந்தும் அதை நாலு தரம் கிளீன் பண்ணி கடுகு,சீரகம்,சுள்ளென உறைப்பதற்கு வெள்ளை மிளகுத் தூள் எனப் போட்டு கொதிக்க,கொதிக்க தந்து'இஞ்ச பாருங்கப்பா சூடாற முதல் குடிச்சிடனும்'என்று எங்களுக்கு அன்பு கட்டளை இடும் அந்த சகோதரி சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது.
எல்லாச் சாமியையும் மறந்து போட்டு லெனின் சாமி, மாஓச் சாமி, சி.பி.எம்.சாமி, நக்சலைட் சாமி, மேற்குலகச் சாமி, கிழக்குலகச் சாமி, சேகுவேராச் சாமி (அது தவறு 'சே' என்று சொன்னாத்தான் மற்றவன் மதிப்பான் என ஒரு கூட்டம். சேட புத்தகம் வாசிக்லயா, சேட படம் பார்க்கலயா ),மக்கள் கலை இலக்கியக் கழகச் சாமி, லஸ்கர் ஏ தொய்பாச்சாமி, அல்கய்தாச்சாமி, இந்திய முஸ்லிம் மாணவர் அமைப்புச்சாமி, இந்தியாச்சாமி, மகிந்தாச்சாமி, புலிச்சாமி என புறப்பட்டதால் தானோ இவ்வளவு கோபப் பார்வைக்கும் காரணம் என எண்ணத் தோன்றுகிறது. உண்மையிலேயே நாம்
எல்லோரும் சாமிகளை மறந்து விட்டோமா. நல்லூர் செட்டி வீதியில் கிளாஸ் முடிந்து வந்து தூங்கும் போது அதிகாலையில சுப்ர பாதம் மனதை வருடுமே. மார்கழி மாதத்தில் நள்ளிரவில்
மொத்த தமிழனும் ஒரு பவனி வருவார்களே. அவைகளெல்லாம் எங்கே போய் விட்டது. கையில காப்பு கட்டி யாழ்ப்பாண தெருக்களில் பச்சைத் தண்ணியும் குடிக்காம நாலு மிளகை மென்று விட்டு ஒரு கொடிய விரதம் இருப்பானே யாழ்ப்பாணி. இவை எல்லாம் தொலைத்து விட்டதால் வந்த வினைகளா இவை.
ஐரொப்பாவில இருந்து புது மாப்பிள்ள கோலத்துல மெட்ராஸ் போய் கோரமண்டல் ஹோட்டலிலும், எக்மோர் இம்பீரியல் ஹோட்டலிலும் றூம் போட்டு படாடோபமாக திருமணம் செய்யும் புதுப் பணக் காறர்களே கைக்கெட்டிய தூரத்தில் இருக்கும் திருப்பதிக்கும், காலுக் கெட்டிய தூரத்தில் இருக்கும் திருச்சி உச்சி பிள்ளையார் கோயிலுக்கும், அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் மதுரை மீனாட்சியம்மனையும் எப்போதாவது தரிசிக்க நினைத்திருக்கின்றீர்களா. கேட்டவரம் கொடுக்கிற சாமிகளல்லவா இவை. திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, பழனி முருகன், பழமுதிர்ச்சோலை என ஒரு ஆயிரம் சாமி இருக்குதல்லவா தமிழனுக்கு. ஒரு சாமியாவது மகிந்தச்சாமிக்கும், 'தல'சாமிக்கும் கனவுல வர மாட்டானா.
காலையில் நான்கு மணிக்கே சுப்ரபாதத்தில் மதுரை குதூகலிக்குமே. மணக்க மணக்க ஜாதி
மல்லியை தலையில் சூடி ஒரு யாழ்ப்பாணத் தாய்மார் கூட்டம் வடக்கு வீதி, தெற்கு வீதி, கிழக்கு வீதி, மேற்கு வீதி என முண்டியடிக்குமே. தேங்காய், கற்பூரம், சந்தணவில்லை, குங்குமம், தீப் பெட்டிஎன வாங்கி அறுபத்து நாலு நாயன் மாரையும் தரிசித்து அந்த அகிலாண்டேஸ்வரி மீனாட்சியிடம் ஆயிரம் கோரிக்கை வைப்பார்களே. அப்போது அந்த யாழ்ப்பாணம் செழித்துத்தானே இருந்தது.
ஜன சமுத்திரத்துக்குள்ளால் நீந்தி அந்த திருச்சி உச்சி பிள்ளையாரை தரிசித்த நமது மூதாதையர் வாழ்ந்து தானே செத்தார்கள். செத்தா வாழ்ந்தார்கள்?நமக்கு நேரமும் இல்லை. நமக்கு வேலையுமில்லை என்று எல்லாவற்றையும் மிதித்து மறந்து விட்டோமா. அதிகாலையில் போய் கியூவில் நின்று கால்வலிக்க வலிக்க நமக்காக திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த உங்கள் முன்னோர்களை நினைத்துப் பாருங்கள்.
ஹர்த்தால் சாமி, நடை பயணச்சாமி, வை.கோபால்சாமி, நயன்தாராச்சாமி, நமிதாச்சாமியும்தானே தெரிகின்றார்கள். எங்கே போய் விட்டார்கள்? உங்கள் பத்திர காளிகள். சாமியே சரணம் ஐயப்பா என அவன் காலில் போய் விழுங்களேன் சாமி. அடுத்த நாள் மகிந்தச்சாமி கொள்ளுப்பிட்டிக்கும், புலிச் சாமி பங்கருக்கும் ஓடிடுமே சாமி. ஒரு காலத்தில உங்கட கையில கறுப்பு, சிவப்பு காப்புகளை கண்டிருக்கிறோமே சாமி. இப்போ பியரும், விஸ்கியும்தானே தெரியுது சாமி.
நாங்களும் கொஞ்சகாலம் கஸ்டப்பட்டோம் சாமி. நாங்கதானே எதற்கும் வக்கற்றவங்க. அதனால சவூதி அரேபியா ஜித்தா போய் அங்கிருந்து 30 மைல் தொலைவில் இருக்கின்ற மக்காவில் உள்ள அல்லாஹ் சாமிட பள்ளிவாசல்ல எல்லாவற்றையும் இறக்கி வைத்தோம் சாமி. (எல்லாம். எல்லாம்.) உடல்,பொருள்,ஆவி என எல்லாத்தையும் எறக்கி வைத்தோம் சாமி. கொஞ்சம் லேட்தான் (தெய்வம் நின்று நிதானித்து கொஞ்சம் ஆசுவாசப் படுத்தி வன்னிக்குள்ள)என்றாலும். பக்கா றிலாக்ஸ் சாமி. ரொம்ப றிலாக்ஸ் சாமி. அது ஒரு தவம் சாமி. தவம். விடிய விடிய ஜன சமுத்திரம் சாமி. அந்தக் கடலுக்குள்ளால நீந்தி இரவு ரெண்டரை மணிக்கு அவன்ட காலடியில போய் விழனும் சாமி. எள்ளுப்போட்டாக் கூட டாண் என சத்தம் கேட்கும் சாமி. அப்படி ஒரு மயான அமைதி சாமி. குட்டிக்குட்டி தூக்கணாங்குருவிகள் வானத்தில் கிச்சுக் கிச்சு மூட்டும் சாமி.
ஆண்டவன் அவ்விடத்தில முன்னுக்கு வந்து நிற்பான் சாமி. அந்நேரம் அழனும் சாமி. வாய்விட்டு சத்தம் வராம கூப்பாடு போட்டு அழனும் சாமி. தொண்டக் குளிக்குள்ளால என்னமோ ஒண்டு எறங்கும் சாமி. அது அப்படியே மேல் நெஞ்சைத் தொட்டு கொஞ்சம் கீழிறங்கி நடு நெஞ்சுக்கு வரக்கொள பின் முதுகுத் தண்டும், அடி வயிற்றுக்குள்ள இருக்கின்ற ஈரக் கொலையும் துடிக்கும் சாமி. நீங்க பாஸ். நீங்க பாஸ் ஆயிட்டீங்க என்று அர்த்தம் சாமி. எல்லாக் கஸ்டத்தையும் அவன் வாங்கிக்குவான் சாமி. அப்படியே ஒரு 30 அடி பின்னுக்கு வந்தால் பல கோடி பேர்களுக்கு நீர் வழங்கும் இத்தனூண்டு சம்சம் தண்ணி கிணறிருக்கு சாமி. அதில போய் வயிறு நிரம்ப குடிக்கணும் சாமி. நாம செஞ்ச எல்லாப் பாவத்தையும் கரைத்து உடம்ப பரவசப் படுத்தும் சாமி. மூக்கு நுகரும், நாக்கு தடுமாறும், கண் படபடக்கும். இரண்டு கால் சின்ன விரலும் பதறும் சாமி, பதறும். அப்படியே ஒரு 100 அடி பின்னால வந்தா கிட்டத்தட்ட அரை மைல் தொலைவில ரெண்டு குட்டி மலை ( சபா,மர்வா) இருக்கும்சாமி. அவை இரண்டுக்குமிடையில் ஓடணும் சாமி. ஏழு தரம் ஓடணும் சாமி. நாய்க்கெழைக்கிற மாதிரி எழைக்கும் சாமி. தனித் தனி எண்ணக் கிணற சொந்தமாக வைத்துள்ள உலக பில்லியனர்களும் நம்மளோட ஓடுவான்கள் சாமி. ஓடி முடிய ஒரு ஞானம் பிறக்கும் சாமி. பெட்டி படுக்கையை கட்டி கொண்டுவந்து நம்ம தொழிலை பார்க்க வேண்டியதுதான சாமி. மற்றதை அவர் பார்த்துக் கொள்வார் சாமி. இப்பவும் பார்த்துக் கொண்டுதான் இருக்கார் சாமி.
போங்க போங்க சாமி. திருப்பதி வெங்கடா ஜலபதிக்கிட்ட போங்க சாமி. உலகக் கோடிஸ்வரன் எல்லாம் கியுவில நிற்கின்றான் சாமி. கொஞ்சம் காசு குடுத்தாவது பறவாயில்லை ( அறவிட்ட பணம்தான் இருக்குமே ) தீட்சிதர கூப்பிடுங்க சாமி. கற்பககிரகத்துல ஒழிச்சிக்கிட்டு இருக்கிற எட்டடி உயரமான அந்த கருப்புச்சாமிய காட்டச் சொல்லுங்க சாமி. அவன்ட பச்சை மரகதக் கண்ணைப் பார்க்கலாம் சாமி. அதுக்குள்ளால செந்சிற கருஞ்சிவப்பு உன்னுடைய கண்ணை எரிச்சி விடற மாதிரி பார்க்கும் சாமி. அப்ப வாயத் தொற சாமி. வாயத் தொறந்து நாக்கை புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேழுங்க சாமி. கையை நீட்டி தீர்த்தம் வாங்குங்க சாமி. அதில இத்தனூண்டு குடியுங்க. நாக்குல நல்லவை வரும் சாமி. மிச்சத்தை தலையில தெளியுங்க சாமி. நல்லகாலம் பொறக்கும் சாமி. வெளிய வந்து ஒரு லட்டு வாங்குங்க. மூன்று நேரம் சாப்பிடலாம் சாமி. வெங்கடாஜலபதிக்கு 300 அடி முன்னால இருக்கும் விடுதி ஓரத்துல போய் நின்று லட்டுல ஒரு கடி கடித்துக் கொண்டு எல்லாவற்றையும் அசை போடுங்க சாமி. அது லட்டல்ல சாமி. அது பல பேரின் புண்ணியம் சாமி. ஒவ்வொரு பருக்கையா சாப்பிடுங்க சாமி.
ஒவ்வொரு சுவை தெரியும் சாமி. அதைவிட்டுப் போட்டு மொத்த காசையும் கொண்டு போய் ரஜனி சாமிக்கும், நயன்தாரா சாமிக்கும் கொட்டிப் போட்டு. போங்கசாமி. எப்ப போய் விரதத்தை முடிக்கப் போறிங்க சாமி. நிறைய விட்ட கடன் தொட்ட கடன் தமிழனுக்கு இருக்கு சாமி. போங்க சாமி. புண்ணியம் செய்யுங்க சாமி.அவனும் திறக்கல என்றா வாங்க சாமி. மகிந்தட உள்வீட்டுக்குள்ளவும், தலைவர்ர கோட்டைக்குள்ளவும் எல்லோருமாக போவோம் சாமி. அடம்பம் கொடியும் திரண்டால்தான் ஒரு ராஜ நடை தெரியும் சாமி. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை. சாமியேய் சரணம் ஐயப்பா.
( பார்த்திங்களா சாமி ஒரு கிழக்குமாகாணத்துச் சாமி. அதுவும் ஒங்களுக்கிட்ட அடி அடியென வாங்கியும் ரோஷம் வராத சோனிச் சாமி புத்தி சொல்லுற அளவுக்கு போயிட்டோமே
என வருத்தப் படாதேங்கோ சாமி. நான் கூர் தீட்டிப் பார்க்கிற ஆள் இல்ல சாமி. எப்பொருள் யார் யார்.....என்று திருவள்ளுவச் சாமிட குறள ஒரு யாழ்ப்பாணச்சாமி சொன்னதனால் சாமி. பிளீஸ் சாமி. தொடர்ந்து கொஞ்ச நாளுக்கு சாமி வலம் வர இருக்கன் சாமி. இப்ப கீழ் திருப்பதில நிற்கிறேன் சாமி. மேல்திருப்பதிக்கு போவேன் சாமி.........)
0 comments :
Post a Comment