வரம் வாங்கி வந்தாயோ? வன்னித்தமிழா!
வஞ்சனை கொண்டு வதைக்கவே வந்தாலும்
வந்தோரை வாழவைக்கும் வளமான வன்னிநிலம்!
கொடும்பகை கொண்டு கூடப்பிறந்தோரையும்
கொன்றொழித்த கொடியவன் கண்டும்
குமுறியழ நாதியற்று குரல்களும் மழுங்கி
ஊமையாய் உணர்விழந்து உறக்கமும் தாமிழந்து
உயிழந்த உடல்களாய் ஊசாடி வந்தவரை
ஓடவிட்டு புறமுதுகில் உதிரமதை ஓடவிட்ட பாதகனே..!
ஓயாது உறங்காது ஒருநாளும் தீராது
எம் பாவம் தொடருதென்றால் - அது
எங்கள் நிலம் இன்னும் உன்னைத் தாங்குவதால்.
சோறிட்ட கைகள் சுட்டதில் தான் துடிக்க
மாமா என்றழைத்த மழலைகள் ஐயோ என்றழைக்க
துப்பாக்கி வேட்டு வைத்த துஷடனே!!- நீ அழிவாய்
துயர்துடைக்க யாருமின்றி!
பாதுகாப்புக்கு நம்முயிர்கள் - உன்
பாதுகாப்புக்கு நம் உயிர்கள்
அரணமைத்து அதில் நீ.. ஆடிய ஆட்டமெல்லாம்
அடங்கியது கண்டோ.. ஆற்றாமல் நீயும்
ஆயிரம் துளைகளிட்டாய் - உதிர
ஆறுகளை ஓடவிட்டாய்!
இன்னும் என்ன வேண்டும்? எடுத்தியம்பு பாதகனே!
ஒன்றுமில்லை எங்களிடம் ஓட்டாண்டியாய் எங்கள் நிலம்
வன்னிநிலம் வாங்கிவந்த தீராத கொடுந்துயரம்
நீ அழிந்தால் தீரும், இல்லையென்றால் நீளும்..
நீ அழிந்தால் தீரும், இல்லையென்றால் நீளும்.. ..VII
- அபிமன்யு
0 comments :
Post a Comment