Thursday, February 12, 2009

அதிகாரப் பகிர்வு உடனடியாக முன்வைக்கப்பட வேண்டும்: இந்திய வெளிவிவகார அமைச்சர்.


இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வு உடனடியாக முன்வைக்கப்பட வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையைப் பாதித்திருக்கும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அதிகாரப் பகிர்வே ஒரு சிறந்த தீர்வாக அமையும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இலங்கை விடயம் தொடர்பாக, கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கனொன், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இலங்கையின் வடபகுதியிலுள்ள மக்களின் நிலைமைகள் குறித்து இந்தியாவை நம்பியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

“உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளோம்” என முஹர்ஜி பதிலளித்துள்ளார். அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்துவதே முதலில் அவசியமானது என்றார் அவர்.

இதேவேளை, இலங்கை இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்ட மூலத்துக்கு அப்பால் சென்றுகூட தீர்வை முன்வைக்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது இலங்கை விஜயத்தின் போது கூறியிருந்ததாக முஹர்ஜி முன்னர் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment