ஐ.நா. அமைதிகாக்கும் படையை அனுப்பும் காலம் நெருங்கிவிட்டது: இவான்ஸ்
இலங்கையில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படை அங்கு அனுப்பப்படவேண்டிய இக்கட்டான சூழ்நிலை தோன்றியிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் முக்கிய உறுப்பினர் தெரித்தார்.
ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான பாராளுமன்றக் குழுவின் தலைவர் ரொபேர்ட் இவான்சே இவ்வாறு கூறியுள்ளார். கூடிய விரைவில் இலங்கைக்கு அமைதிகாக்கும் படையினர் அனுப்பப்படவேண்டுமென இவான்ஸ், ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ முனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“கால் மில்லியன் மக்கள் மோதல்களில் மாத்திரம் சிக்குண்டிருக்கவில்லை, இரத்த ஆறுக்குள் சிக்குண்டுள்ளனர் என்பதை அனைத்து ஆதாரங்களும் நிரூபிக்கின்றன” என பிரித்தானியாவைச் சேர்ந்த இவான்ஸ் கூறினார். தமிழ் மக்கள் அடக்கப்பட்டிருப்பதுடன், அச்சத்தில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
“இலங்கை இராணுவத் தரப்பினர் தொடர்பாகவும், முகாம்கள் தொடர்பாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேநேரம், அவற்றுக்குச் சமமாக விடுதலைப் புலிகளும் தமது கட்டுப்பாட்டிலிருந்து செல்லும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன” என்றார் அவர்.சர்வதேச சமூகம் எதிர்வரும் நாட்களில் உடனடியாகச் செயற்படாவிட்டால் 250,000 மக்களின் நிலைமை மோசமடைந்துவிடும் என இவான்ஸ் கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் மோசமடைந்திருக்கும் நிலை தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மார்க் மலொக் பிரவுண் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளர் பெரேரோ வொல்னருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நன்றி: ஐஎன்லங்கா இணையம்.
0 comments :
Post a Comment