Wednesday, February 4, 2009

அம்பாறை தமிழ் கூட்டமைப்பு எம்பி க்கள் தலைநகரில் களியாட்ட விடுதிகளில், கூட்டமைப்பு முன்னணி ஆதரவாளர்கள் இனியபாரதியுடன். நகுலன்



அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் திட்டமிட்ட வகையில் இன விகிதாசார ரீதியாக ஒடுக்கப்பட்டு அங்கு மூன்றாம் தரப்பிரஜைகளாக கைகட்டி நிற்க வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் ஒருமித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்களித்து அம்பாறை மாவட்டத்தில் பெறக்கூடிய ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொண்டனர். தமிழ் மக்களுக்குள் ஒவ்வொரு அரசியல் பின்னணி இருக்கின்றபோதும் கடந்த தேர்தலில் தாம் காலாகாலமாக ஆதரித்து வந்த அரசியல் கட்சிகளை புறந்தள்ளி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒருமித்து வாக்களித்தன் நோக்கம் அம்பாறை மாவட்டத்தில் தமது அரசியல் உரிமையை உறுதிப்படுத்தி தமது தடயங்களை தக்கவைத்து கொள்வதற்காகவே அன்றி பத்மநாதன், சந்திரகாந்தன் போன்றோர் தமிழ் மக்கள் பெயரால் சொகுசு வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவல்ல.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்றுள்ள பத்மநாதன் மற்றும் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோர் இன்று பாராளுமன்றில் புலிகளின் பிரதிநிதிகளாக செயற்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அம்பாறைப் பிரதேசத்திற்கு சென்று தாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களை சந்தித்திராத இவர்கள் கொழுப்பில் அரசபடையினரின் பாதுகாப்பில் இருந்து கொண்டு வன்னியில் முடக்கப்பட்டுள்ள பிரபாகரனுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

கடந்தவாரம் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்பி சந்திரகாந்தன் புலிகளுக்காக முதலைக் கண்ணீர் வடித்திருப்பதை காணமுடிந்தது. இன்று வரை மக்களுக்காக எந்தவிதமானதோர் சேவையையும் செய்திராத இவர் இலங்கை பாதுகாப்பு படையினரின் உயர் மட்டத்துடன் சிறந்த நட்பை பேணும் அதே நேரம் மக்களுக்கு மீண்டும் மீண்டும் இனவாத நஞ்சை ஊட்ட முற்பட்டு வருகின்றார். தமது சொந்த வாழ்விற்காக படையிருடன் மிகவும் நட்பாக பழகும் இவர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ள வழங்களைப் பயன்படுத்தி சில பாதுகாப்பு படை அதிகாரிகள் லண்டன் போன்ற நாடுகளில் குடியேறி சொகுசாக வாழ்வதற்கு உதவி புரிந்து தனது நட்பை வலுப்படுத்தி கொண்டிருக்கும் அதே நேரத்தில் எதுவுமே அறியாத அப்பாவி தமிழ் மக்களுக்கு இனவாத கருத்துக்களை கூறுவதுடன் சிறிலங்கா இராணுவம் இன அழிப்புச் செய்கின்றது எனவும் கூறுகின்றார்.

இன்று தமிழ் மக்கள் சார்பாக பாராளுமன்றம் சென்றுள்ள இவர்களது முழுக்கவனமும் பிரபாகரனை பாதுகாத்துக் கொள்வதில் திரும்பியுள்ளதே அன்றி தாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களின் அவலங்கள் சார்ந்ததாக இல்லை. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் யுத்தத்தில் அதிகூடிய இழப்புக்களுக்கு முகம் கொடுத்துள்ள மக்கள் தமிழ் கூட்டமைப்பினர் தமக்காக ஏதாவது செய்வர் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இன்று நடைபெறுவது நேர் எதிராக உள்ளது.

இந்நிலைமைகளை உணர்ந்து கொண்ட தமிழ் கூட்டமைப்பின் முன்னணி ஆதரவாளர்கள் இன்று தமிழ் கூட்டமைப்பு கூத்தாடிகளை கைவிட்டு அம்பாறை மாவட்டத்திலே தனி ஒரு மனிதனாக நின்று தன்னால் முடியுமானவற்றை மக்களுக்காக செய்துகொண்டிருக்கின்ற இனியபாரதியுடன் இணைவதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக திருக்கோவில் பிரதேசத்தினுள் இனியபாரதி பிரவேசித்த போது புலிகளின் பொய்பிரச்சாரங்கள் மக்கள் மனங்களில் ஓர் பயஉணர்வை கொடுத்திருந்தது. ஆனால் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற அவரிடம் உள்ள துடிப்பு புலிகளது பொய்பிரச்சாரத்தை தோற்கடித்துள்ளது. இதன் பயனாக கடந்த சில மாதங்களாக மக்களுக்கும் பாரதிக்குமிடையேயான ஐக்கியம் மேலும் வலுப்பெற்றுள்ளதை உணரமுடிகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்த பலர் நேரடியாகவே இனியபாரதியுடன் இணைந்து வேலை செய்துகொண்டிருப்பதை பார்க்கும்போது அம்பாறை மாவட்டத்தில் எதிர்காலத்தில் தமிழ் கூட்டமைப்பினர் காலடி பதிக்க முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

அம்பாறை மக்கள் என்றுமே மேலாதிக்க சக்கிகளுக்கோ அன்றில் அற்ப சொற்ப லாபங்களுக்கோ சோரம் போனவர்கள் அல்லர் என்பதை கடந்த மாகாண சபைத்தேர்தலில் கூட நிரூபித்து காட்டியிருந்தனர். அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் உணர்வே இன்று கிழக்கு மாகாண சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றுவதற்கும் அதன் முதலமைச்சராக பிள்ளையான் நியமிக்கப்படுவதற்கும் மூலகாரணமாக அமைந்திருந்தது. ஆனால் அவ்வுண்மையை மறந்த பிள்ளையான் இன்று அம்பாறை மக்களின் அரசியல் எதிரிகளாக நிற்கின்ற முஸ்லிம்களுடன் இணைந்துநின்று அம்பாறை தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொள்ளாதிருப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது. முதலமைச்சர் பதவியேற்றதில் இருந்து மருதமுனை போன்ற முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்றிருக்கின்றாரே அன்றி இன்றுவரை அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு எதுவும் செய்துள்ளதாக பதிவுகள் இல்லை.

மக்களின் அவலங்கள் தொடர்கின்ற நிலையில் மறுபுறத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமைப் போட்டி இன்னும் முடிவுறவில்லை என்பது வேதனையளிக்கின்றது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் பாரளுமன்ற உறுப்பினர் முரளிதரனும் முதலமைச்சர் சந்திரகாந்தனும் பத்திரிகைகளுடாக ஒருவரையொருவர் சாடியுள்ளமை மக்களை மேலும் பீடித்துள்ளது. இத்தனை காலமும் புலிகளதும் தமிழ் கூட்டமைப்பினரதும் ஏகப்பிரதிநிதித்துவமோகத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் கிழக்கிற்கென ஓர் அரசியல் தலைமை உருவாகுவதையிட்டு மகிழ்ச்சி அடைந்திருந்தனர். ஆனால் இன்று அக்கட்சியினுள் உருவெடுத்திருக்கும் போட்டிபொறாமையானது மக்களை எந்தவகையிலும் பாதிப்பதை அனுமதிக்க முடியாது. எனவே தத்தமக்குரிய அரசியல் உரிமைகளை பகிர்ந்து கொண்டு மக்களின் நலனில் நின்று அரசியல் நடாத்த அவர்கள் முன்வரவேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும். கட்சியும் தலைமையும் மக்களுக்காகவே அன்றி கட்சிக்காகவும் தலைமைக்காகவும் மக்கள் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு தமக்குள் புகைந்து கொண்டிருக்கும் பிணக்குகள் மக்களுக்கு பின்னடைவுகளை கொடுக்காதவாறு அவற்றுக்கு தீர்வுகளைக் கண்டுகொள்வது சிறந்ததாகும். VIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com