Wednesday, February 11, 2009

பிரபாவின் பதாகைகள் பிரமாண்ட படப்பிடிப்புக்கூடம் பெருந்தொகை சீடிக்கள் மீட்பு.

விசுவமடு, சுந்தரபுரம் பிரதேசத்தில் புலிகளின் பிரதான அச்சகம் உள்ளிட்ட பாரிய முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.பெரும்தொகையான புதிய ரக வாகனங்கள், நவீன அச்சக இயந்திரங்கள், புகைப்படக் கூடம், பிரபாகரனின் பெனர்கள், போஸ்டர்கள், கட்டவுட்கள், லெமினேடிங் இயந்திரங்கள், கமராக்கள் மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையணியினர் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இந்த முகாமை கைப்பற்றியுள்ளனர்.விசுவமடு சுந்தரபுரம் பகுதியில் புலிகளுடனான கடும் மோதல்களைத் தொடர்ந்து முன்னேறிய படையினர் இந்த அச்சகப் பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

இப்பகுதியில் படையினர் நடத்திய பாரிய தேடுதல் நடவடிக்கையின் போது புலிகளின் எட்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.23 துப்பாக்கிகளும், புதிய ரகத்திலான வாகனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.புலிகளின் தலைவர்கள் இம் முகாமில் கடந்த ஓரிரு தினங்களுக்குள் தங்கியிருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த அச்சகத்தில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களுடன் பெருந்தொகை யான சீடிக்களும் கைப்பற்றப்பட்டன. புலிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள், சந்திப்புக்கள், உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பதியப்பட்ட சீடிக்களையே படையினர் கைப் பற்றியுள்ளனர்.

அச்சகத்தில் உள்ள நவீன உபகரணங்கள் அண்மையில் கொள்முதல் செய்யப்பட்டதாகவே தென்படுவதாக படைத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.புலிகளின் உள்நாட்டு, வெளிநாட்டு பிரசார நடவடிக் கைகளுக்காக இந்த அச்சகத்தையே அவர்கள் பிரதானமாக பயன்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு தென்பகுதியில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் நான்கா வது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நிஷா ந்த வன்னியாராய்ச்சி தலமையிலான படைப் பிரிவினர் அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மற்றுமொரு அச்சகம் ஒன்றையும், கட்டிங் இயந்திரம் ஒன்றையும் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

புலிகள் இயக்க உறுப்பினர்களின் புகைப்படங்களும், புலி களின் முக்கிய புகைப்படங்களும் அச்சிடப்பட்ட பெருந் தொகையான புத்தகங்களையே படையினர் மீட்டெடு த்துள்ளதாக தெரிவித்த அவர்,அச்சு இயந்திரங்களுடன் அவற்றுக்குத் தேவையான பெருந்தொகையான உபகரணங்களும் இங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, துணுக்காய் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போது :-

கிளேமோர் குண்டுகள் நிரப்பப்பட்ட பெட்டிகள் – 16, அதனை வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் ஸ்டேன்ட் – 04, ரிமோர்ட்கொண்ட்ரோல் மற்றும் ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு, அக்கராயன்குளம் பகுதிகளிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் மேற்கொண்ட தேடுதல்களின் போது :-

ரி – 56 ரக துப்பாக்கி ரவைகள் – 1500, கைக்குண்டுகள் – 05, 6 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள் – 02, மற்றும் 6 பற்றரிகளையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Thanks: Thinakaran.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com