Thursday, February 12, 2009

புதிய பாதுகாப்பு வலயம் அரசாங்கத்தினால் அறிவிப்பு


மோதல்கள் இடம்பெறும் முல்லைத்தீவுப் பிரதேசத்திலுள்ள பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு 12 கிலோ மீற்றர் நீளமான புதிய பாதுகாப்பு வலயமொன்றை இராணுவம் பிரகடனப்படுத்தியுள்ளது.முல்லைத்தீவு கடலேரியை எல்லையாகக் கொண்ட மேற்குப் பகுதியில், இந்தப் புதிய பாதுகாப்பு வலயத்தை வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம் அறிவித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுமாத்தளன் தொடக்கம் வெள்ளை முல்லை வாய்க்கால் வரையிலான இந்தப் புதிய பாதுகாப்பு வலயம் நேற்று 12ம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் உடனடியாக அமுலுக்கு வருவதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள பாதுகாப்பு வலயம் ரத்துச் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மனிதாபிமான விடயங்கள் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்தே இந்தப் புதிய பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது. இந்தப் புதிய பாதுகாப்பு வலயம் வடமேற்காக ஆரம்பமாகி, கிழக்குக் கரையோரத்தில் பழமாத்தளன் பிரதேசத்தில் முடிவடைகின்றது. இது 12 கி.மீ. நீளத்தையும், 2 கி.மீ. அகலத்தையும் கொண்டதாகும்.

இராணுவம் பிரகடனப் படுத்தியுள்ள இந்தப் புதிய பாதுகாப்பு வலயம், சிறிய கிராமங்களான வெள்ளைமுல்லை, வாய்க்கால், கரையாமுள்ளி வாய்க்கால், வெள்ளையன் மடம், அம்பலவான் பொக்கணை மற்றும் புது மாத்தளன் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் இலகுவாக, அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகைதர முடியும் என்றார்.

இந்தப் புதிய பாதுகாப்பு வலயம் குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “முல்லைத்தீவு மாவட்டத்தில் பலவந்தமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது மோதல்களில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களுக்கு அதி உச்ச பாதுகாப்பை வழங்குவதற்கு இராணுவம் உறுதிபூண்டுள்ளது” என்ற பிரிகேடியர்,இந்தப் புதிய பாதுகாப்புப் பிரதேசத்தை நோக்கி விரைவாக பொதுமக்கள் வந்து சேர வேண்டுமென்று இராணுவம் மக்களை வேண்டுவதாகவும் குறிப்பிட்டார்.

அப்பாவித் தமிழ் மக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்க தேவையான சகல நடவடிக்கைகளையும், வசதி வாய்ப்புகளையும் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் அவ்வப்போது செய்து வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com