Monday, February 9, 2009

புலிகளின் இறுதிக் காலத்திலும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தபடி..-பரசுராமன்.



மனித குலம் வெட்கித் தலைகுனியும் படியான செயல்களில் புலிகளின் நடத்ததைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. கடந்த கிழமை 12 வயதுச் சிறுமி ஒருவரை ஏமாற்றி தற்கொலையாளியாக அனுப்பி வைத்தது சர்வதேச சட்டதிட்டங்களை மீறும் ஒரு செயலாகும். ஒரு போராளிகள் அமைப்பு அல்லது ஒரு அரசியல் விடுதலையை எதிர்பார்த்து நிற்கும் அமைப்பு என்றுமே இப்படியான செயல்களில் ஈடுபடமுடியாது.

இந்த மாதிரியான மனித உரிமைமீறல்களை விடுதலைப்புலிகள் தமது மிக இக்கட்டான காலகட்டத்திலும் பாவித்திருக்க கூடாது. இந் நடவடிக்கைகள் சர்வதேச சமுகத்தால் மட்டுமல்ல அனைத்து தமிழ்மக்களாலும் கண்டிக்கப்படவேண்டும். புலிகள் தமது தலைவர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் பொருட்டு தமிழ் மக்களை கேடயமாக பாவித்து நிற்கும் இச்செயல்களை சர்வதேச சமுகம் என்றுமே மன்னிக்காது. மன்னிக்கவும் கூடாது.

தமிழ் மக்களை பாதுகாப்பாக வாழவைக்கும் செயல் இதுவல்ல என்பது தற்போது வெட்டை வெளிச்சமாகியுள்ளது. போர்க்காலகட்டங்களில் மக்களை பலவேறுதிசைகளில் பரந்து, பாதுகாப்பாக வாழவிடவேண்டிய புலிகள் இப்படி குறுகிய பிரதேசத்தில் அடைத்து வைப்பதன் நோக்கம் மக்களை பலிகொடுப்பதன் மூலம் தாம் ஒரு யுத்தநிறுத்தத்தைப் பெறலாம் என்ற கனவின் பிரதிபலிப்பே! வன்னியில் புலிகளின் பிடியில் சிக்கித்தவிக்கும் அப்பாவிப் பொதுமக்கள் சுதந்திரமாக வெளியே வர நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து சமுகத்தினரும் முன்வரவேண்டும்.

இந்த நிலையில் லண்டனில் இயங்கும் ஜபிசி ரேடியோவோ, தற்போது நடைபெறும் வன்னி மக்களின் பிரச்சினையை கூறி நன்றாகவே மக்களை உணர்ச்சி வசப்படுத்தி மிக முட்டாள்த்தனமான நடவடிக்கைகளுக்கு தூபம் இடுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கின்றது. இன்னும் எத்தனை நாள்தான் இந்த ஏமாற்று நாடகம்?

No comments:

Post a Comment