Saturday, February 14, 2009

106 உறுப்பினர்களை தெரிவுசெய்ய வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கு இன்று தேர்தல்.

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு 106 உறுப்பினர்களை தெரிவு செய் வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகும் இரு மாகாண சபைகளுக்குமான தேர்தலின் ஐந்து மாவட்டங்களிலுள்ள 40 தொகுதிகளில் 2579 வாக்குச் சாவடிகளில் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் நடைபெறும் சகல வாக்குச் சாவடிகளுக்குமென கட்சிகள் சுயேச்சைக் குழுக்களால் நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள் அனைவரும் காலை 6.00 மணிக்கு வாக்குச் சாவடிகளுக்கு வருகை தரவேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளது டன் வாக்காளர்கள் நேரகாலத்துடன் சென்று தமது வாக்குகளை அளிக்குமாறும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார். இன்று நடைபெறும் மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தல்களில் 17 அரசியல் கட்சிகளையும், 43 சுயேச்சைக்குழுக்களையும் சேர்ந்த 2247 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

பாதுகாப்பு கடமைகளுக்கென 18,000 பொலிஸார் உடனடியாக தேர்தல்கள் நடைபெறும் இரண்டு மாகாணங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கடமைகளுக்கென 26,000 அரச ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இரு மாகாணங்களையும் சேராத வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20 வீதமான அரச ஊழியர்களும் தேர்தல் பணிக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

வாக்களிப்பதற்காக தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய எந்தவொரு ஆவணமும் இன்றி வாக்குச் சாவடிக்கு செல்வாராயின் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார் என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவிக்கிறது.

வாக்களிப்பு இன்று மாலை 4.00 மணிக்கு முடிவடைந்த பின்னர் வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் போது அந்த வாகனத்தின் பின்னாலேயே கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதி ஒருவர் வீதம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்குகள் இன்று இரவு 8.00 மணியின் பின்னர் எண்ணப்படும். வாக்குப் பெட்டிகள் ஒவ்வொன்றும் வாக் கெண்ணும் நிலையங்களுக்கு வந்துசேர 30 நிமிடம் முதல் 2 1/2 மணி நேரமாகும் என்பதால் இரவு 9.00 மணியின் பின்னரே வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவு வழங்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். இரண்டு மாகாணங்களிலும் விருப்பு வாக்குகள் தவிர்ந்த ஏனைய தேர்தல் முடிவுகள் யாவும் அதிகாலை வழங்க முடியும் எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

தேர்தல் கண்காணிப்புகளில் சுமார் 3000 பேர் ஈடுபடவுள்ளனர் பெப்ரல் அமைப்பின் சுமார் 600 பேர் நடமாடும் தேர்தல் கண்காணிப்பாளர்களாக ஈடுபடவுள்ளனர்.

நேர்மையான, நீதியான சுதந்திரமான தேர்தலை நடத்த அனைத்து கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும், மக்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க சகலரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Thamks: Thinakaran.

No comments:

Post a Comment