போர்நிறுத்ததை புலிகள் மதிக்கவில்லை: அன்பழகன் குற்றச்சாட்டு
இலங்கை அரசின் 48 மணி நேர போர்நிறுத்த அறிவிப்பை விடுதலைப் புலிகள் மதிக்கவில்லை என்று தமிழக நிதியமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான க. அன்பழகன் சட்டமன்றத்தில் கூறினார்.
காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் எழுப்பிய கேள்வி ஓன்றுக்கு பதில் அளிக்கும்போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் பேசியதாவது:
இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற 48 மணி நேரம் போர்நிறுத்தம் செய்ய இலங்கை அரசு முன்வந்துள்ள நிலையில், விடுதலைப் புலிகள் ஏன் அதை மதிக்கவில்லை.
இலங்கை அரசின் தற்காலிக போர்நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது ஆச்சரியமளிக்கிறது.
புலிகளின் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி ஏராளமான மக்கள் அங்கு அடைக்கலம் தேடினர். ஆனால், எதிர்பாராதவிதமாக இருதரப்பிலும் நடைபெறும் மோதலில் அவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கான முதல் நடவடிக்கை தான் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி ஏற்பட இதுபோல் பல நடவடிக்கைகளை நாம் எடுக்கவேண்டும்.
போர் நடைபெறுவதை நம்மிடம் தெரிவிக்கக் கூட இலங்கை அரசு விரும்பவில்லை. இது தொடர்பாக அவர்களிடம் நாம் முறையிட்டால் கூட தீவிரவாத இயக்கத்தினருக்கு ஏதிராகத் தான் போர் நடைபெறுகிறது ஏன்று கூறுவார்கள்.
இந்திய, இலங்கை அமைதி ஓப்பந்தத்தை பரிசீலிப்பதாக ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இலங்கை மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட அந்நாட்டு அரசிடம் முறையிட வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment