Friday, January 16, 2009
இலங்கையில் மூவின மக்களும் சுதந்திரமாக வாழ இந்நாட்டு யாப்பில் இடமுண்டு - ஜனாதிபதி
அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இன்று (16.01.2009) கண்டியில் நடைபெற்ற தைப்பொங்கல் தேசிய விழாவின் போது தமிழில் ஆற்றிய உரையின் சாரம்சம் கீழே தரப்படுகின்றது. இந்த விழாவின் போது பெருந்தொகையான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தமிழ் மக்கள் சார்ந்த முதலாவது நிகழ்வு இதுவென்பதுடன் கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு சாதாரண தமிழ் மக்கள் வருகை தந்த முதலாவது சந்தர்ப்பமும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அந்த விழாவின் போது ஜனாதிபதி அவர்கள் சுமார் ஐந்து நிமிடங்கள் வரையில் தமிழில் சரளமாக உரையாற்றினார்.
அந்த உரையின் சாராம்சம் வருமாறு:
கௌரவ மதகுருமார்களே அன்பர்களே பிள்ளைகளே!
உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள இங்கு வருகை தந்த உங்கள் எல்லோரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன்.
பொங்கல் நாள் உழவர் திருநாள். தமிழர் பெருநாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அது போல இந்த வருடம் இந்து மக்கள் அனைவருக்கும் நிச்சயமாக நல்ல வழி பிறக்கும் என உறுதியாக நான் நம்புகின்றேன்.
இந்த நாட்டில் வாழும் எல்லா இன மக்களும் சந்தேகமில்லாமல் பயமில்லாமல் வாழக் கூடிய சூழ்நிலை நிச்சயமாக வெகு விரைவில் உருவாகும். எமது அரசியல் யாப்பில் உள்ளபடி எல்லா மக்களும் சம உரிமையோடு சமத்துவமாக வாழ வேண்டும். அந்த நிலையை நான் நிச்சயமாக உருவாக்குவேன். இந்த நாட்டின் எந்தப் பகுதியில் வசித்தாலும் நாம் எல்லோரும் இந்த நாட்டு மன்னர்களே. இன மத பேதம் எதுவுமில்லை. நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள். எல்லா மக்களையும் பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பு எனது கடமை. நான் அதை உறுதியாக செய்வேன்.
நாட்டு மக்கள் எல்லோருக்கும் ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும். மீண்டும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள். நன்றி.
வணக்கம்.
தகவல் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு ( தமிழ் )
No comments:
Post a Comment