புலிகளியக்கம் தடை : பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு கோமணம் இழந்தார் பிரபாகரன். - விருகோதரன்.
நேற்றுமுன்தினம் கூடிய அமைச்சரவை புலிகளியக்கத்தை இலங்கையில் தடை செய்வதென்ற முடிவுக்கு ஏகமனதாக வந்துள்ளது. உலகிலே இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என 30க்கும் மேற்பட்ட முன்னணி நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கம் என பட்டியலிட்டு தத்தம் நாடுகளில் அவர்கள் செயற்பட தடை விதித்துள்ளனர். அவ்வியக்கம் இலங்கையில் பல நாசகார வேலைகளில் ஈடுபட்டிருந்த போதும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவேண்டுமாயின் ஒரு தொகுதி தமிழ் மக்கள் ஆதரிக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என்ற தேவையின் நிமித்தம் புலிகளியக்கத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 2002 ம் ஆண்டு நீக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை மேசையில் சம அந்தஸ்து:
கடந்த 2002ம் ஆண்டு நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. அக்காலகட்டங்களில் சட்டம் ஒழுங்கைப் பேணி ஆங்காங்கே உருவாகின்ற பிணக்குகளுக்கு தீர்வுகாணும் நோக்குடன் உபகுழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. அக் உபகுழுக்கூட்டங்களில் பங்குகொண்ட புலிகளியக்கத்தினர் இலங்கை இராணுவத்தினருக்கு நிகராக தமது இராணுவச் சீருடைகள் அணிந்து சம அந்தஸ்துடன் உட்கார்ந்திருந்தனர். இவ்வாறு புலிகளுக்கு அரசாங்கம் வழங்கிய புரிந்துணர்வுடன் கூடிய அதிகபட்ச விட்டுக்கொடுப்புகள் அவர்களை இறுமாப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
தமிழ் மக்களின் நியாயமான பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் தமக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாக எடுத்துக் கொண்டனர். தமிழ் மக்களது நியாயமான பிரச்சனைகளையும் அவற்றிற்கான தீர்வின் அவசியத்தையும் கொச்சைப்படுத்தினர். புலிகளது இராணுவ வெற்றிகளாலும் அவர்களது இராணுவ பலத்தாலும் உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த ஓப்பந்தம் என்று சாதாரண தமிழ் மக்களை இரண்டாம் தரப்பிரஜைகளாக்கினர். இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட்டால் அதற்கு புலிகளது இராணுவப்பலமே காரணம் என்றும் மக்கள் என்றுமே புலிகளுக்கு இரண்டாம் தரப்பிரஜைகளாக இருக்க வேண்டும் என்கின்ற ஓர் தோற்றத்தையும் உருவாக்கினர். பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் மக்கள் தரப்பில் இருந்து ஒருவரைக்கூட உள்வாங்காமல் முற்றுமுழுதாக ஆயுததாரிகளையும் புலிகளது அரசியல் மற்றும் சட்ட ஆலோசகர்களையுமே பங்குகொள்ள வைத்தனர்.
தீர்வுயோசனைகளை தட்டிக்கழித்தனர்.
நியாயமானமுறையில் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வொன்றை எதிர்த்ததுடன், தற்காலிக நிர்வாக அலகொன்றை வலியுறுத்தினர். புலிகள் இடைக்கால நிர்வாக அலகொன்றை வேண்டி நின்றதன் கபடம் யாதென்பதை மக்கள் நன்றாக புரிந்து வைத்திருந்ததுடன் புலிகளின் நடவடிக்கைகளில் மக்கள் மிகவும் விசனமடைந்திருந்தனர். மக்களின் மேல் நம்பிக்கையில்லாத புலிகள் மக்களை ஜனநாயக வழியில் அணுகி மக்களின் ஆணையை பெற மறுத்ததுடன் மக்கள் வழங்க வேண்டிய அதிகாரங்கள் யாவற்றையும் அரசிடம் பின்கதவால் பெற்றுக்கொள்ள முயற்சித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அரசு பிரகடனம் செய்யவேண்டும் என வலியுறுத்தினர். இலங்கையில் பல அங்கீகரிக்கப்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கையில் அரசியல் அந்தஸ்து பெறாத உலகபயங்கரவாதிகளான புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக பிரகடனப்படுத்த இலங்கை அரசிற்கு அதிகாரம் கிடையாது என்பதை ஏற்க மறுத்தனர். தமிழ் மக்களை தமது கொத்தடிமைகளாக வைத்திருக்கவும் அம்மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை பறிக்கவும் முற்பட்டனர்.
இனவெறியூட்டி உலகவெளிச்சம் காட்டாமல் வளர்த்த அப்பாவித் தமிழ் இளைஞர் யுவதிகளை பலிக்கடாக்களாக்கி உருவாக்கிய கனவு ராஜ்சியத்தை வைத்து தாம் ஓர் நிழல் அரசை வைத்துள்ளதாக தமிழ் மக்கள் மீது அதிகாரம் புரிந்தனர். கடந்த சாமாதான ஒப்பந்த உடன்படிக்கைக் காலப்பகுதிகளில் உலக நடமுறைக்கு மாறான பல விடயங்களை மேற்கொண்டனர்.
இலங்கை என்கின்ற ஒருநாட்டின் குடிவரவு குடியகல்வு முறைகளை மீறி ஓமந்தை மற்றும் முகமாலையில் போலி குடியகல்வு மற்றும் குடிவரவு கதவுகளைத் திறந்து நடைமுறைப்படுத்திய புலிகள் அவ்வழியினூடாக பயணித்த ஓவ்வொருவரிடமும் 350 ரூபாய்களை அறவிட்டதுடன் அதனூடாக கொண்டு செல்லப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் வாகனங்களுக்கும் வரிவிதித்தனர். பயணிகளிடம் நேரடியாக பணம் பெறாத புலிகள் வாகன உரிமையாளர்களிடம் ஒவ்வொரு பயணிக்கும் 350 ருபாய்களை அறவிட்டனர். அதன் பொருட்டு வாகன உரிமையாளர்கள் வழமையான கட்டணத்திற்கு மேலாக பயணிகளிடம் 350 ரூபாய்களை பெற்று வந்தனர். இவ்விடயமானது இலங்கை அரசின் மீது பாரிய அழுத்தங்களைக் கொடுத்தது. பயங்கரவாத இயக்கமொன்று அந்நாட்டு மக்கள் மீது மேற்கொள்ளும் வரிவசூலிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் அரசிற்கேற்பட்டது. வரிவசூலிப்பை நிறுத்துமாறு புலிகளை பல முறை எச்சரித்தனர். புலிகள் அவற்றை செவிமடுக்காததைத் தொடர்ந்து வரிவசூலிப்பை நிறுத்தும்வரை ஏ9 பாதையை மூடுவதாக அரசு நிபந்தனை விதித்தது.
புலிகள் படையினரை வலிந்து போருக்கழைத்தனர்.
வரிவசூலிப்பபை நிறுத்த புலிகள் மறுத்தபோது ஏ9 பாதையை மூட நிர்ப்பந்திக்கப்பட்டது. அரசு ஏ9 பாதையை மூடியதால் தமது வருவாயை இழந்த புலிகள் மக்கள் மீது அதன் சுமையைச் சுமத்தினர். யாழ்ப்பாணத்தில் அரச கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கான உணவு வழங்கல் பாதைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் இன்று வரை அம்மக்களுக்கான வழங்கல் பாதைகளை இலக்கு வைத்தே வருகின்றனர். மறுபுறத்தில் மாவிலாற்றில் பாமர மக்களுக்கும் அங்கு வாழுகின்ற உயிரினங்களுக்குமான நீர் வழங்கலைத் தடைசெய்து சிறிலங்கா அரசை போர் ஒன்றுக்கு வலிந்திழுத்தனர். புலிகள் படையினரை வலிந்து போருக்கிழுத்து இன்று முழுக் கிழக்கையும் இழந்துள்ளதுடன் வன்னியின் 80 வீதமான நிலப்பரப்பை இழந்து ஏகப்பட்ட உயிர்களையும் பலிகொடுத்துள்ளனர்.
புலிகளது அனைத்து அராஜகங்களுக்கும் இராணுவ ரீதியாக தீர்வு காணப்பட்டு வருகின்ற நிலையிலும் புலிகள் மக்களை துன்புறுத்துவதை நிறுத்தவில்லை. மக்களைத் தொடர்ந்தும் மனிதகேடயங்களாகவே பயன்படுத்தி வருகின்றனர். இன்று வன்னி மக்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபினான யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்படுவர் என்பது பல முன்னணி ஆய்வாளர்களால் எதிர்வு கூறப்பட்டுள்ளபோதும் புலிகளது அகம்பாவம் முடிவுற்ற பாடில்லை. வன்னிப்பெரு நிலப்பரப்பில் பரந்து வாழ்ந்த மக்களை அங்குள்ள மிகச்சிறியதோர் பிரதேசத்தினுள் தமது கேடயங்களாக தொடர்ந்தும் அடைத்து வைத்துள்ளனர். கிழக்கை முற்றாக விடுவித்த படையினர் வன்னிமீது போர் தொடுக்கு முன்னர் புலிகளை உடனடியாக பேச்சு வார்த்தை மேசைக்குத் திரும்புமாறு வலியுறுத்தினர். ஆனால் புலிகள் அவற்றிற்கு செவிமடுக்கவில்லை.
புலிகள் ஏன் ஆயுதங்களை கைவிட விரும்பவில்லை?
இறுதியாக வன்னியின் பெருநிலப்பரப்பு படையினர் வசம் வீழ்ந்த பின்பும் கூட இலங்கை ஜனாதிபதி புலிகளை ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்திருந்தார். ஆனால் புலிகள் ஆயுதங்களை கிழே வைக்க மறுத்தனர். புலிகள் பேச்சுவார்த்தை ஒன்றிற்கு செல்லாமைக்கான காரணம், தமது இராணுவ பலம் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார்கள் என அர்த்தப்படாது. பேச்சுவார்த்தை ஒன்றினூடாக நிச்சயாமாக ஓர் நியாயமான தீர்வை எட்ட முடியும் என்புது புலிகளுக்கு தெரிந்த விடயம். அவ்வாறு மக்களுக்கானதோர் தீர்வு எட்டப்பட்டால் புலிகள் புறந்தள்ளப்படுவார்கள் என்ற அவர்களது கணிப்பே புலிகளை என்றும் ஆயுத பலத்துடன் இருக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளியது. புலிகளுக்கு தமது பலம், பலவீனம் இரண்டும் நன்றாகப் புரியும்.
புலிகளது கூக்குரல்.
கடந்த காலங்களாக புலிகள் என்றுமே யுத்தத்தை விரும்பவில்லை என்றும் பேச்சுவார்த்தை ஒன்றிற்காக அரசின் சாதகமான பதிலை காத்திருப்பதாகவும் கதைவிட்டு வந்தனர். இங்கு பேச்சுவார்த்தை என்பது எதற்காக? ஏன்பதை புலிகள் திடமாக தெரியப்படுத்த வேண்டும். இலங்கை அரசு தெட்டத்தெளிவாக "ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு" என அறிவித்திருக்கின்றது. புலிகள் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு தாம் தாயாராக இருக்கின்றோம் என்றால் முதலாவதாக அரசினுடைய ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்கின்ற விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்களா? ஏன்பதை தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறாயின் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
இரு இராணுவங்கள் செயற்பட அனுமதிக்கப்பட மாட்டாது.
புலிகள் இதய சுத்தியுடன் மக்களுக்கான ஓர் தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் பேச்சுவார்த்தைக்கு வருவார்களாக இருந்தால் புலிகளுக்கு ஆயுதங்கள் எதற்காக? புலிகள் தமது ஆயுதங்களை தமிழ் மக்களை அடக்கியாளவும் பிற தமிழ் அரசியல் கட்சிகளை நசுக்கவும் வைத்திருக்கின்றார்களே அன்றி தமிழ் மக்களுக்கான விடுதலைக்கான ஆயுதங்களாக எவரும் அவற்றை கருதி விடமுடியாது. தமிழ் மக்களுக்கு இலங்கையில் தமிழீழம் என்கின்ற ஒன்றிற்கு ஒப்பானதோர் தீர்வு கிடைத்தால் கூட நாட்டினுள் இரு இராணுவங்கள் செயற்பட அனுமதிக்கப்பட மாட்டாதென்பது புலிகள் உட்பட அனைவரும் அறிந்து வைத்துள்ள உண்மை. எனவே இத்தனை காலங்களும் மக்களை ஆயுதமுனையில் ஆட்சி செய்து வந்த புலிகள் அவற்றை கீழே வைத்து விட்டு தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ள முனையமாட்டார்கள். இவ்விடயத்தை புலிகள் கடந்தகாலங்களில் இந்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்த தீர்வை சிதைத்த விடயங்களிலும் பிற்காலங்களில் அரசு முன்வைத்த தீர்வு யோசனைகளை தட்டிக்கழித்த விதங்களிலும் இலங்கை அரசுடன் செய்துகொண்ட ஓப்பந்தங்களை முறித்த விதங்களிலும் உணர்ந்து கொள்ள முடியும். எனவே இவ்யுத்தத்திற்குத் தீர்வு காணும் விடயத்தில் புலிகள் உடன்பட மாட்டார்கள் என்பது தெட்டத்தெளிவு. எனவே தமிழ் மக்களின் அரசியல் வட்டத்தில் இருந்து புலிகளை நீக்குவது இன்றியமையாதது.
நடேசனினதும் இந்திய அரசியல்வாதிகளதும் பிதற்றல் :
கடந்த சில காலங்களாக புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளரும் இந்திய அரசியல்வாதிகளும் யுத்த நிறுத்ததையும் பேச்சுவார்த்தையையும் வலியுறுத்தி வருகின்றனர். அனால் எதன் அடிப்படையில் பேச்சு என்பதை எவரும் தெரியப்படுத்தவில்லை. மறுபுறத்தில் கெரில்லா யுத்தம் மற்றும் கிளிநொச்சியை மீண்டும் கைப்பற்றுவோம் என்றெல்லாம் கதைகளை அவிட்டு விடுகின்றனர். ஆனால் கெரில்லா யுத்தம் இன்றைய காலகட்டத்தில் கைகூடப்போவதில்லை என்பதை வேறு ஒர் இடத்தில் விரிவாக பார்க்கலாம். கிளிநொச்சியை புலிகள் இனிமேல் கனவில் கைப்பற்றலாம் என நான் நினைக்கின்றேன். எனவே எஞ்சியுள்ள போராளிகளில் ஒருவரது உயிரைத்தன்னும் பலிகொடாமல் மக்களின் சுகமான வாழ்விற்கு வழிவிட்டு புலிகள் அரசினது வேண்டுகோளை ஏற்று மக்களைக் காப்பற்றுவதே சிறந்ததாகும்.
தடை புலிகளுக்கு சொல்வது என்ன?
இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத இயக்கமொன்றை ஆதரிப்பதும் அவ்வியக்கத்திற்காக பரிந்து பேசுவதும் பிரச்சாரவேலைகளில் ஈடுபடுவதும் தண்டைனைக்குரிய குற்றங்களாக்கப்பட்டுள்ளது. ஓட்டுமொத்தத்தில் சட்டப்படி புலிகளியக்கம் இன்று மக்களில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளபோதும் இலங்கை அரசு அவ்வியக்கதினுடனான பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே வைக்கப்பட்டுள்ளதென அறிவித்துள்ளது. புலிகள் வன்னியில் தமது விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைத்துள்ள மக்களை விடுவிக்கவேண்டும் அன்றேல் அவ்வியக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும் என நாட்டின் ஜனாதிபதி பலமுறை எச்சரித்தும் அவர்கள் அதை செவிமடுக்க வில்லை. இன்று புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதிச் சந்தர்ப்பத்தை அவர்கள் உபயோகித்துக் கொள்ளவேண்டும். VIII
0 comments :
Post a Comment