Monday, January 26, 2009
காங்கோ கிளர்ச்சிக்குழு தலைவருக்கு எதிரான போர்க் குற்ற வழக்கு
த ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கு விசாரணை ஆரம்பமாகியுள்ளது. முன்பு காங்கோலிய கிளர்ச்சிக்குழு தலைவராக இருந்த தோமஸ் லுபங்கா மீதான வழக்குதான் விசாரிக்கப்படுகிறது.
அவரது அமைப்பான யூ.பி.சி அமைப்பினால், 2002 ஆம் ஆண்டு செப்டம்பருக்கும் 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டுக்கும் இடையே சிறார்கள் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுவதுதான் இவருக்கு எதிரான முக்கியமான குற்றச்சாட்டு.
பாலியல் வல்லுறவு, கொலை, சித்திரவதை ஆகியவை குறித்து பல மனித நேய அமைப்புக்கள் இந்த அமைப்பின் மீது குற்றஞ்சாட்டுகின்றன.
ஆனால், இவர் மீது சிறாரைப் படைக்கு சேர்த்தது தொடர்பான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் சுமத்துவது என்றும் அது குறித்தே விசாரிப்பது என்றும் சர்வதேச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
ஆனால், இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வது இந்த யூபிசி அமைப்பு மாத்திரமல்ல. அங்கு முப்பதினாயிரத்துக்கும் அதிகமான சிறார்கள் படைகளில் பயன்படுத்தப்பட்டதாக ஐ. நா மதிப்பிட்டிருக்கிறது.
உலகெங்கும் உள்ள ஆயுதக்குழுக்கள் மற்றும் படைகளின் தலைவர்களுக்கு இதன் மூலம் சர்வதேச நீதிமன்றம் தெளிவான செய்தி ஒன்றை சொல்ல விரும்புகிறது. அதாவது அவர்களுக்கு என்றாவது ஒருநாள் விசாரணை காத்திருக்கிறது என்பதுதான் அதுவாகும்.
ஆனால், இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் சர்வதேச நீதிக்கு விடிவுகால காலம் வந்து விட்டதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. ஒருவகையில் பார்க்கப்போனால் ஆம் என்ற பதில் இதற்கான விடையாகக் கூறப்படலாம். ஆனால், மறுபுறம் பார்த்தால் இந்த நடைமுறைகளின் பாதையில் பாரதூரமான அரசியல் மற்றும் இராஜதந்திர தடைகள் இன்னமும் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
Thanks BBC
No comments:
Post a Comment