ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவரும், சுவிஸ் துணைத் தூதுவருமான திரு.மடுவகெதர அவர்களுடன் புளொட் சுவிஸ்கிளையினர் சந்திப்பு!!
ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவரும், சுவிஸ்லாந்துக்கான இலங்கைப் பதில் தூதுவருமான திரு.மடுகெதரவுக்கும் புளொட் சுவிஸ் கிளையின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்றின் போது புளொட் சுவிஸ்கிளைப் பிரதிநிதிகளால் கோரப்பட்ட விடயங்கள் சில நேற்றுமுன்தினம் சுவிஸ் பேர்ன் மாநகரில் இடம்பெற்ற சந்திப்பின் போது நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்த வகையில் புளொட் பிரதிநிதிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சுவிஸில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் கல்வி கற்பதற்காக இலவசமாக பாடப்புத்தகங்களைப் பெற்றுத் தருமாறு விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய புலம்பெயர்ந்து சுவிஸில் வாழும் இலங்கைத் தமிழ் மாணவ, மாணவியர்கக்கான இலவசப் பாடப்புத்தகங்களில் ஒரு தொகுதி நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பின் போது புளொட் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது 200 புலம்பெயர் மாணவ, மாணவியர்க்கான பாடப்புத்தங்கள் சுவிசுக்கான இலங்கைத் துணைத் தூதுவரால் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் தேவையான புத்தகங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் துணைத்தூதுவர் மடுவகெதர தெரிவித்துள்ளார்.
மேற்படி வைபவத்தில் புளொட் சுவிஸ் கிளையின் பிரதிநிதிகளுடன் ஈபிடிபி, ஈபிஆர்எல்எப் அமைப்பின் பிரதிநிதிகளும் தமிழர் கலாச்சார மன்ற பிரதிநிதிகளும் தமிழழ்ஏடு ஆசிரியர் பாலசுப்ரமணியம் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றிச் சிறப்பித்திருந்தனர். ஈபிடிபி அமைப்பின் சார்பில் உரையாற்றிய சிறி என்பவர் திரு.மடுவகெதரவின் சேவைக்கு நன்றியைத் தெரிவித்தார். தமிழ்ஏடு பாலா மாஸ்டர் அவர்கள் புலிகள் கடந்த காலத்தில் விடுத்த தவறுகளையே ஏனைய அமைப்புக்களும் கிராமம் கிராமமாக மேற்கொள்வதாகவும் இதுகுறித்து அரசு கவனம் செலுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார். தமிழ்சிங்கள நட்புறவுச் சங்கத்தின் சார்பில் உரையாற்றிய நந்தன என்பவர் எமது ஒற்றுமையும் நன்முயற்சியும் தொடர வேண்டுமெனவும் எதிர்வரும் காலங்களில் தமிழர் சிங்களவர் என்ற பாகுபாடு இல்லாது ஒற்றுமையாகச் செயல்படுவோம் எனவும் தெரிவித்தார்.
மேற்படி வைபவத்தில் உரையாற்றிய துணைத்தூதுவர் மடுவகெதர, கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டு அங்கு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நிவாரண நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் வடக்கும் பயங்கரவாதிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டு அங்கு பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அங்கு நிவாரண நடவடிக்கைளையும் மேற்கொள்ளவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
புளொட் பிரதிநிதிகள் சார்பாக இங்கு உரையாற்றிய சுவிஸ்ரஞ்சன் புத்தகங்கள் வழங்கப்பட்டமைக்கு நன்றியைத் தெரிவித்ததுடன், இரண்டாவது கோரிக்கையாக சுவிசுக்கான இலங்கைத் தூதரகம் ஜெனீவா நகரில் அமைந்திருப்பதன் காரணமாக சுவிஸின் மறுபகுதியில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அங்கு சென்று வருவதற்கு சுமார் நான்கு மணிநேரம் பயணம் செய்யவுள்ளதாகவும், இதனால் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும், எனவே புலம்பெயர் தமிழ் மக்களின் நலன்கருதி பேர்ன் நகரில் சுவிசுக்கான இலங்கைத் தூதரக கிளைக் காரியாலயமொன்றை நிறுவுவதன் மூலம் புலம்பெயர் தமிழ்மக்களின் சிரமங்கள் குறையுமென்றும் கேட்டுள்ளார். அத்துடன் அரசாங்கமானது யுத்தத்தின் மூலம் பல வெற்றிகளைப் பெற்றுச் செல்கின்ற போதிலும் தமிழ் மக்களுக்கான உரிய அரசியல் தீர்வொன்றினை முன்வைப்பதன் மூலமே அந்த வெற்றி பூரண வெற்றியாகக் கருதப்படுமென்று குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த தூதுவர் மடுவகெதர, இதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
(முக்கிய குறிப்பு.. இலங்கைப்பாடத் திட்டத்துக்கமைய பிரசுரிக்கப்பட்ட மேற்படிப் புத்தகங்களை பெறவிரும்பும் சுவிஸில் உள்ள தமிழ் பாடசாலையினர் கீழ்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 0763997065 அல்லது 0763681546)
0 comments :
Post a Comment