வன்னியில் விடுவிக்கப்பட்டு பகுதிகளுக்கு மின்சார இணைப்பு : சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம்.
வடக்கில் மீட்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு மிக விரைவில் மின்சாரம் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதன் முதற் கட்டமாக லக்சபான மின்சார விநியோகக் கட்டமைப்பின் மூலமாக மாங்குளம் வரையான பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போதைக்கு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே யாழ்ப்பாண குடாநாட்டுக்கு இதுவரை காலமும் மின்சாரம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிறுவனத்துக்குப் பதிலாக புதிய நிறுவனமொன்றின் மூலமாக நாள் முழுவதற்கும் மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கென சீன நிறுவனமொன்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் இதுவரை காலமும் யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் எதிர்கொண்ட மின்வெட்டு அவலத்துக்கு வெகுவிரைவில் தீர்வு காணப்படப் போகின்றது. புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சீன நிறுவனமானது நாளாந்தம் 35 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் தைப்பொங்கல் பரிசாக யாழ்ப்பாண மக்களுக்கு 24 மணி நேர மின்சார வழங்கல் சேவையை அரசாங்கம் நடைமுறைப்படுத்த உள்ளது.
இதற்கிடையே விடுவிக்கப்பட்டுள்ள வடக்குப் பிரதேசங்களில் மிக விரைவில் உள்ள10ராட்சி, மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மேலும் வடக்கு மக்களுக்கான நிவாரணங்கள், அத்தியாவசிய சேவைகள் என்பவற்றுக்கு முன்னுரிமையளித்துச் செயற்படுமாறு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசாங்கத்தின் சகல அதிகாரிகளையும் பணித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப் பாதையும் மிக விரைவில் திறக்கப்பட்டு போக்குவரத்து வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ள அதே நேரம், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துக் கொண்ட பின்பு ஓமந்தை வரை பஸ் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைக்கு மதவாச்சி வரை மட்டுமே பஸ் போக்குவரத்து நடைபெறுகின்றது. அங்கிருந்து வவுனியா, ஓமந்தை வரை வேறு பஸ் வண்டிகளிலேயே பயணிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறாக வடக்கு மக்கள் எதிர்நோக்கும் சகல சிரமங்களையும் தீர்த்து வைப்பது தொடர்பில் முன்னுரிமையளித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கத்தின் சகல அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment