Thursday, January 22, 2009

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு: ஜெயலலிதா


இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

'கடந்த 17ம் திகதி இலங்கைத் தமிழர்கள் குறித்து நான் அளித்த பேட்டி திரித்து கூறப்பட்டுள்ளது. நான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும், இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாகவும் பேசியதைப் போன்று மாயத் தோற்றத்தை உருவாக்க முயல்வது கண்டனத்துக்குரியது.

எந்த நாட்டில் யுத்தம் நடந்தாலும் அப்பாவி மக்கள் அழிவது தவிர்க்க முடியாதது என்றும், பாதுகாப்பான இடங்களுக்கு அப்பாவித் தமிழர்களை செல்லவிடாமல் அவர்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாக பயன்படுத்துவதால்தான் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் கூறியிருந்தேன்.

சுய நிர்ணய உரிமைக்கான இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை அ.தி.மு.க. முழு மனதோடு ஆதரிக்கிறது. அதேசமயம் ஆயுதம் ஏந்தி பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை ஏதிர்க்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஜனநாயக ரீதியில், அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால் அதற்குத் தடையாக இருப்பது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கம்தான்.

அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அதனால்தான் அமிர்தலிங்கம், பத்மநாபா, சிறீசபாரத்தினம், முகுந்தன் என்கிற உமாமகேஸ்வரன் உட்பட பல முன்னணித் தமிழினத் தலைவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்.

இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். விடுதலைப் புலிகளைத் தவிர்த்து, இலங்கைத் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் சிங்கள மக்களுக்கு சமமாக வாழ, நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.

இதற்கு உதவ மத்திய அரசு முன்வர வேண்டும் என தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கருணாநிதி நாடகம்: இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். முதல்வர் கருணாநிதி. தற்போதும் அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருடன் சந்திப்பு என கடந்த 4 மாதங்களாகக் கண்துடைப்பு நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி, போரை தீவிரப்படுத்தியதுதான் மிச்சம்.

இலங்கைத் தமிழர்களுக்காக கருணாநிதி திரட்டிய நிதி அந்த மக்களுக்குப் போய்ச் சேர்ந்ததாக இதுவரை தகவல் இல்லை. அந்த நிதியை கருணாநிதி தன்னுடைய குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது' என ஜெயலலிதா கூறியுள்ளார்.

நன்றி தினமணி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com