Saturday, January 17, 2009

கல்விச் சமூகமே செல்வ விருட்சங்கள் - எம்பி முரளிதரன்



என் அன்பிற்கும் நேசத்திற்குமினிய கல்விச் சமூகமே!

உங்களின் ஒருமித்த பயணமே எம்மினத்தின் புதியதோர் ஜனனமாகும்.

தொடர் யுத்தம் காரணமாகவும் இனப்பூசல்களின் காரணமாகவும் எல்லா வழிகளிலும் எல்லாத் துறைகளிலும் எமது சமூகம் பின்தள்ளப்பட்டுக் கொண்டே சென்று கொண்டிருக்கின்றது. இதனால் எம்மினம் அதிலும் கல்விச் சமூகம் மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. அன்றைய ஆட்சியாளர்களின் இனவாதச் சிந்தனையின் நிமிர்த்தம் பிரதேசம், மொழி, கல்விப் பிரிவுகளில் புறக்கணிப்புகளும், பாகுபாடுகளும் நிகழ்ந்ததாலேயே எமது இளைய தலைமுறையினர்கள் ஆயுதப்போராட்டத்தின் பக்கம் சென்றார்கள்.

அன்றைய சூழல் ஆட்சிபீடமேறிய எந்த ஒரு அரசும் தமிழர்களுக்காக எந்த விதமான ஒரு நியாயமான தீர்வைவையும் முன்வைக்க முன்வராத சூழலே காணப்பட்டது. ஆனால் இன்றைய அரசோ, கடந்த அரசோ இதயசுத்தியுடன் செயற்பட முன்வந்திருந்தன. கடந்த நான்கு ஜனாதிபதிகள் ஆட்சிபீடமேறியும் அவர்களால் துணிந்து எந்தவிதமான முடிவும் தனித்து நின்று எடுக்கவும் முடியவில்லை, விரும்பவும் இல்லை இருந்தும் உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் சக்திகளின் அழுத்தங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பயந்த இவர்கள் எதிர்காலத்திலும் ஆட்சியை கைப்பற்றும் நோக்குடனேயே சமாதானச் சூழலைப் பயன்படுத்தியதால் தமிழர் பிரச்சினையும் இழுத்தடித்துக்கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது.

ஆனால் இன்றைய ஜனாதிபதி அவர்கள் அகச்சூழலைக் கண்டோ, புறச்சூழலைக் கண்டோ பின் நிற்க விரும்பவில்லை. தனது தற்றுணிவை பயன்படுத்தியாவது தமிழர்களுக்கு ஒரு நியாயமான சுதந்திரத்தையும், நாட்டிற்கு ஒரு நிலையான சமாதானத்தையும் ஏற்படுத்தும் எண்ணத்துடனேயே செயற்படுகிறார் என்பதை காணக்கூடியதாக உள்ளது. ஆயுதபலத்தின் மூலம் மக்கள் ஆதரவுப்பலத்தின் மூலம் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழர்கள் சார்பாக பேரம் பேசும் சக்தி இருந்தது. அதையெல்லாம் சரியான முறையில் பயன்படுத்த புலித்தலைமை விரும்பாததாலேயே எம்மினத்திற்கு இத்தனை அவலங்களும் துன்ப துயரங்களுமாகும்.

இனிமேலும் இழந்ததும் போதும், எம்மினம் அழிந்ததும் போதும். வீரம் மட்டும் இருந்தால் போதாது விவேகமுள்ள கல்விச்சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையே இன்றைய எமது சமூகத்தின் அவசரத் தேவையாகும். ஏத்தனையோ சமஸ்டிக்கு நிகரான சுதந்திரமான பல நன்மைகளும் சிறப்பான அதிகாரங்களும் எமது காலடி தேடி வந்திருந்தும் அந்தச் சந்தர்ப்பங்கள் அனைத்துமே அடுத்த கட்ட ஈழப்போருக்கே எம்மை வழி நடத்தியவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்ததால் அதன் முழுத்தாக்கத்தையும் இன்று எமது சமூகமே சுமக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இது மேலும் தொடர்ந்தால் எம்மினத்தின் எச்சங்களோ, தடயங்களோ இல்லாமல் போய்விடும் என்ற நோக்குடனேயே நானும் புலித்தலைமையிடம் பல சந்தர்ப்பங்களில் ஒரு சில கருத்துக்களை முன் வைத்தேன், எடுத்துரைத்தேன் ஆனால் அவை அனைத்துமே உதாசினப்படுத்தப்பட்டதாலேயே நான் எமது சமூகத்தை தொடர் யுத்தப்பிடியிலிருந்து விடுவிக்க முடிவு எடுத்தேன்.

எமது தமிழர் பிரச்சினை அரசியல் ரீதியான பிரச்சினை அரசியல் ரீதியான பிரச்சினையை ஆயுத ரீதியாக தீர்வு காண முற்பட்டது எம்மை வழிநடத்திய அரசியல் தலைவர்களே. 1983 இல் பதின்மூன்று இராணுவத்தினர் புலிகள் அமைப்பால் படுகொலை செய்யப்பட்டார்கள் அந்தப்பயங்கரவாத பிரச்சினையை இனவாத அரசியல் தலைவர்கள் சிலர் இனப்பிரச்சினையாக. இனவாதப்பிரச்சினையாக எரிய வைத்தார்கள் அதன் நிமிர்த்தம் தென் பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான எமது தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். சொத்துக்கள் சூறையாடப்பட்டது. ஒரு வித பதற்றத்தின் மத்தியிலும் குழப்பத்தின் மத்தியிலும் இருந்து எம் சமூகத்தை அப்போதைய வீராவேசப் பிரச்சாரங்களும் பயத்தை உண்டாக்கிய கதைகளும் எமது இளைய தலைமுறையினரை அறிவீனமாக்கியது என்றே சொல்ல வேண்டியுள்ளது.

அந்த வகையிலேயே எதிர்காலத்தில் எப்படியாவது ஒரு மருத்துவனாக வேண்டும். மக்கள் பணி செய்ய வேண்டும் என்ற பிடிவாதத்தோடு கல்வி பயின்ற நானும் எம்மினத்துக்கு உதவி செய்யும் நோக்குடன் அந்நிய தேசங்களுக்கு சென்று பயிற்சி முடித்து கடந்த இருபத்திரண்டு வருடங்களுக்கு மேலாக யுத்தக்களத்தில் எமது மக்களுடன் இருந்தவன் என்ற அனுபவ உண்மையில் கூறுகின்றேன். எதிர்காலத் தமிழர்களின் வாழ்க்கை, அபிலாசைகள், வளர்ச்சி, முன்னேற்றம் எல்லாமே பின்தள்ளப்பட்டுக் கொண்டு செல்வதை இனியும் நாம் அனுமதிக்க முடியாது. தொடர் யுத்தத்தினாலும், தொடர் இழப்புக்களினாலும் சீரழிந்து கொண்டு செல்லுகின்ற எம்மினத்தையும், இளைய தலைமுறையினரையும் புலிகள் அமைப்பின் பொறிப்பிடிக்குள் இருந்து மீட்க வேண்டும் அவர்களுக்கு ஓர் நல்ல அரசியல் பலத்தின் மூலம் அமைதியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடனேயே நானும் பல ஆபத்து அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்தேன்.

எமது எதிர்கால சமூகத்தை கல்வி, கலாச்சாரம், அறிவு, சமயம், என்று பயன்படுத்தி ஒரு சிறந்த முற்போக்கு சிந்தனையுள்ள கல்விச் சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ள இக்காலகட்டத்தில் செல்வ விருட்சங்களாக வளர்ந்து கொண்டு செல்கின்ற உங்களது அறிவும் ஆதரவும் ஆலோசனைகளும் எமது சமூகத்தின் எம்மினத்தின் வளர்ச்சியில் எல்லா வழிகளிலும் தேவையானதொன்றாகும். மாணவர் படை மூலமே ஒரு நல்ல மக்கள் படையை, மக்கள் ஜனநாயக சக்தியை உருவாக்க முடியும் உங்களால் வழிநடத்தப்படும் மக்கள் சக்தியே நாளை ஒரு சிறந்த ஜனநாயக முற்போக்கு சிந்தனையுள்ள மக்கள் சமூகமாக எம்மினம் தனது அபிலாசைகளை நோக்கிப் பயணிக்க முடியும்.

மக்கள் தொகையில் குறைந்த தமிழர்களும், மக்கள் தொகையில் கூடிய சிங்களவருமான இரண்டு தேசிய இனங்கள் இங்கே வாழ்கின்றது என்பதை தொடர் யுத்தக் கொடுமையும், அழிவுகளும் மக்கள் அவலங்களும் இலங்கை மக்களையும் அரசியல் தலைவர்களையும் சிந்திக்க வைத்திருப்பதைக் காண முடிகின்றது. இன்று தமிழ் பேசும் மக்கள் இலங்கையின் எந்தப் பகுதிகளுக்கும் சென்று வர முடிகின்றது. ஆனால் சிங்கள மக்கள் எமது வடகிழக்கு தமிழ் பிரதேசங்களுக்கு சென்று வருவதில் எத்தனையோ அச்சுறுத்தல்களும் ஆபத்துக்களும் தொடர்ந்து கொண்டிருப்பதானது வேதனைக்குரிய விடயம் மட்டுமல்ல, இன ஐக்கியத்திற்கும் மேம்பாட்டிற்கும் குந்தகத்தை ஏற்படுத்தும் செயலுமாகும்.

ஏன் இந்தச் சூழ்நிலை! இந்த நிலைமையை நாம் மாற்றியமைக்கும் பட்சத்தில் தான் தமிழினத்தோடு சிங்களவர்களுக்கும் சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் நம்பிக்கையும், விசுவாசமும் ஏற்பட வழி பிறக்கும். கல்விச் சமூகங்களின் மூலமே எம் சகோதர சிங்கள மக்களின் மனங்களையும் வெகு சீக்கிரத்தில் வென்றடுக்க முடியும் என்பதை இங்கே நான் முன்வைக்கின்றேன். தொடர் யுத்தம், இயற்கை அனர்த்தம் என்று எல்லாப் பக்கமும் பல்வேற அனுபவங்களைப் பெற்றுள்ள எமது மக்கள் இன்று நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டுள்ளார்கள் சமாதானம், சகோதரத்துவம் என்ற வெளிப்பாடோடு எழுச்சி கொண்டுள்ளார்கள் என்பதைக் காண்கிறோம். படுகொலைகளும், பயங்கரவாத நாசகார செயல்களையும் மக்கள் வெறுக்கின்றனர். காரணம் முடிவே இல்லாத தொடர் யுத்தமும் தொடர் இழப்புக்களும் விடிவே இல்லாத பின்தள்ளப்பட்ட நிம்மதியில்லா வாழ்க்கைக்கே வித்திட்டுச் செல்கிறது. ஏன்பதை எம்மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். இனரீதியான துவேசங்களையும் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்புணர்வுகளையும் கூறியபடியே இனங்களுக்கிடையே தீராப்பகையையும், நம்பிக்கையற்ற தன்மையையும் ஏற்படுத்தி எம்மக்களை திசை திருப்பும் நோக்குடன் ஒரு சில ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் செயற்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.

இதனால் எமது மக்களும் கல்விச் சமூகமே பெரிதும் பாதிக்கப்படுகின்றது என்பதைப் புரிந்து கொன்டு சமூதாய ரீதியில் இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் விதத்தில் இவர்கள் மக்கள் நலன் கருதி மாணவர் நலன் கருதி செயற்பட முன்வருவதானது நாட்டிற்கே நன்மை பயப்பதாக அமையும். என் அன்புமிக்க கல்விச் சமூகமே உங்களின் முன்னேற்ற முயற்சிகளில் என்றும் கருணா அம்மான் துணையிருந்து சேவை செய்ய முற்பட்டுள்ளேன். ஆயுதப்போராட்டத்தில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் அம்மானின் பயணங்கள் என்றும் எமது சமூகத்திற்கு நல்ல பிரதிபலனேயே பெற்றுத்தரும் என்பதை உறுதியாக முன்வைக்கின்றேன். ஏதோ படித்தோம் பட்டம் எடுத்தோம் விரும்பிய தொழிலைப் பெற்றோம் அல்லது வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுச் சென்றுள்ளோம் என்று எமது கல்விச் சமூகமும் புத்திஜீவிகளும் கூடுதலாக எம் மக்கள் மத்தியிலிருந்து நீண்ட தூரம் விலகிக் கொண்டிருப்பது மிகவும் வேதனையாவுள்ளது.

உங்கள் கனவுகள் ஆசைகளுக்கேற்ப உங்கள் நடைமுறை எதிர்கால வாழ்க்கையை அமைப்பதே ஜனநாயக உரிமை அதே சமயம் யுத்தம் என்ற பிடியில் சிக்கி எல்லா வழிகளிலும் சீரழிந்து சிதைந்து போயுள்ள எமது மக்களையும் அரசியல் ரீதியாக வளப்படுத்த என்னுடன் உங்களது அறிவு ஆலோசனை அறிவுரைகளை பகிர்ந்து கொள்ள முன் வாருங்கள் உங்களால் மட்டுமே அறிவுள்ள அனுபவமுள்ள ஆரோக்கியமான ஒரு கல்விச் சமூகத்தை எமது மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப முடியும் என்பதே உண்மையாகும். எனது பாராளுமன்ற பிரவேசத்தின் பின்பு என்னுடைய முதலாவது செயற்பாடாக கல்விச் சமூகத்தையும் புத்திஜீவிகள் வழிகாட்டிகளையுமே தொடர்பு கொண்டேன். சந்தித்தேன் அவர்களின் ஆலாசனைக்கு இணங்கவே கிழக்கு பல்கலைக் கழகத்தின் குறைபாடுகள, தேவைகள், தடைகள், தொடர்பாக எமது மதிப்பிற்க்குரிய ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு எடுத்துரைத்தேன். அதன் இடைநிறுத்தப்பட்ட செயற்பாடுகள் தொடர்வதற்குரிய செயற்பாட்டை ஏற்படுத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் எமது கல்விச் சமூகத்தின் வளர்ச்சிக்கும், முயற்சிக்கும் உதவியாக இருந்து உங்களில் ஒருவனாக இருந்து எமது கல்வி சமூகத்தில் சிறப்பான திருப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளேன். தயவு செய்து எமது கல்விச் சமூகம் மற்றும் புத்திஜீவிகள் வழிகாட்டிகளும் எனக்கு அறிவுரை ஆலோசனைகளை வழங்கி எம் மக்கள் சமூகத்தை அரசியல் பலத்துடன் கட்டியெழுப்ப முன் வர வேண்டும் என்று அன்போடும் முழு நம்பிக்கையோடும் எதிர்பார்க்கின்றேன். மக்கள் நோக்கிய என் பயணத்தை தொடர்கின்றேன்.

நன்றி.
கருணா அம்மான்
பாராளுமன்ற உறுப்பினரும்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com