நடுவானில் விமானத்துக்குள் பருந்து புகுந்ததில் அல்லோலகல்லோலம் ‘எயார் லங்கா’ அவசர தரையிறக்கம்.
நடுவானத்தில் விமானத்திற்குள் பறவை புகுந்ததால் ஏற்பட்ட அபாயத்திலிருந்து 121 பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.கொழும்பிலிருந்து சென்னைக்கு 121 பயணிகளுடன் எயார் லங்கா விமானம் நேற்றிரவு வந்து கொண் டிருந்தது.
சென்னைக்கு வருவதற்கு சுமார் அரை மணி நேரம் இருந்த போது நடுவானில் விமானத்தின் மீது மோதிய பருந்து அதன் காற்று இடைவெளிக்குள் புகுந்தது. இதனால் விமானத்தில் சிறு தள்ளாட்டம் ஏற்பட்டது. பறவை புகுந்ததால் விமானத்திற்கு ஏற்பட்ட அபாயத்தை உணர்ந்த விமானிகள் அவசர அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு தரையிறக்கம் செய்ய அனுமதி கோரினார்கள்.
சென்னை விமான நிலையத்திலிருந்து உடனடியாக அனுமதி கிடைத்ததை அடுத்து விமானிகள் அந்த விமானத்தை சென்னை விமான நிலையத்தை நோக்கி வேகமாக கொண்டு வந்தனர்.இதற்கிடையே விமானம் தரையிறங்கும் போது தீப்பற்றும் அபாயத்தை எதிர்நோக்கி சோப்பு நுரைகளுடன் தீயணைப்பு வண்டிகள் விமான நிலையத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்தன. எனினும் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
உடனடியாக பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தங்களது உடமைகளை பயணிகள் தேடிய போது அவை பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போதுதான் நடந்த விபரீதம் பயணிகளுக்கு தெரியவந்தது. தங்களை பத்திரமாக தரையிறக்கிய விமானிகளை பயணிகள் பாராட்டினார்கள்.
விமானத்திற்குள் புகுந்த பருந்து நன்றாக சிக்கிக் கொண்டதால் அதை இதுவரை வெளியே எடுக்க முடியவில்லை. மும்பையிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பறவை அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் அந்த விமானம் புறப்பட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த எதிர்பாராத நிகழ்வின் காரணமாக சென்னையிலிருந்து நேற்றிரவு கொழும்பு செல்ல வேண்டிய சுமார் 120 பயணிகள் விமான நிலையத்தில் சுமார் 12 மணி நேர மாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. (வ)
Thanks Thinakaran
0 comments :
Post a Comment