Friday, January 16, 2009

வன்னியில் மூன்று புதிய பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளை ஏற்படுத்த முடிவு

விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள பிர தேசங்களில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் வன்னியில் மூன்று புதிய பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மீட்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு நிலையை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் விரைவில் இப்புதிய பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளை ஏற்படுத் தவும் நடவடிக்கை எடுக் கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.பல தசாப்தங்களாகச் சீர்குலைந்திருந்த நிர்வாக நடவடிக்கைகளை மீள சீரமைப்பதற்கு வசதியாகவே மேற்படி பொலிஸ் பிரிவுகளை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட பகுதிகளில் அரச நிர்வாகத்தை மீளக்கட்டியெழுப்பவும், சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளவும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க தெரிவித்தார்.

முல்லைத்தீவும் மீட்கப்பட்ட பின் உடனடியாகவே இதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வரும் பொது மக்களின் நலன்கள் தொடர்பாக ஆராய்வதற்காக அனர்த்த நிவாரண சேவைகள் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் வவுனியாவிற்கு சென்றது.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்துள்ள அமைச்சர் பதியுதீன், இடம்பெயர்ந்து வருவோர் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் குறித்தும் விளக்கியுள்ளார்.

இது சம்பந்தமாகத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து தொடர்ந்தும் பொதுமக்கள் வருகை தந்த வண்ணமே உள்ளனர். இவர்களுக்கான உணவு, தங்குமிடம், மருத்துப் பொருட்கள் போன்ற அடிப்படை வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றைத் தடையின்றி பெற்றுக் கொடுப்பதற்காகவும் மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காகவும் மீள்குடியேற்ற அமைச்சினால் மாவட்டச் செயலாளர்களுக்கு நிதிவழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், அப்பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் மற்றும் இராணுவப் பிரிவு உயரதிகாரிகள், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஏ. சீ. எம். ராசீக், வட மாகாண ஆளுநர் டிக்ஷன் தால ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன் போது சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மின்சாரம் உட்பட சகல வசதிகளையும் அம்மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது சம்பந்தமான விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு மூன்று இடங்களைத் தெரிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com