Monday, January 19, 2009

யாழ் குடாநாட்டுக்குப் புதிய கடல்மார்க்கம்: கடற்படை



யாழ் குடாநாட்டுக்கான புதிய கடல்மார்க்கப் பாதையொன்றை கடற்படையினர் திறந்திருப்பதாக கடற்படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனையிறவு மற்றும் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏ-9 வீதியும், பூநகரி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏ-32 வீதியும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையில் புதிய கடல்மார்க்கப் பாதையொன்று கடற்படையினரால் திறக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணச் செலவைக் குறைக்கும் நோக்கில் தலைமன்னாருக்கும், புங்குடுதீவுக்கும் இடையில் கடல்மார்க்கப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமன்னாருக்கும், புங்குடுதீவு குறிகட்டுவான் பகுதிக்கும் இடையில் பொதுமக்கள் கப்பலான-543ஐ கடற்படையினர் பயணிகளின் போக்குவரத்துக்கு ஈடுபடுத்தியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி.கே.பி.தஸநாயக்க கூறினார். 350 பேர் பயணிக்கக் கூடிய கப்பல் வாரத்தில் மூன்று நாட்கள் பணியில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் 120 கடல்மைல் தூரம் காணப்படுகின்றபோதும், தலைமன்னாருக்கும், புங்குடுதீவுக்கும் இடையில் 22 கடல்மைல் தூரமே இருப்பதாக கடற்படை சுட்டிக்காட்டுகிறது. எனினும், தேவை ஏற்படுமிடத்து திருகோணமலைக்கும், காங்ககேசன்துறைக்கும் இடையில் ஜெட் லைனர் கப்பல் பணியில் ஈடுபட்டிருப்பதாக கடற்படையினர் கூறுகின்றனர்.

அதேநேரம், திருகோணமலை-புல்மோட்டை, திருகோணமலை-வெருகல் வீதிகள் மற்றும் கொழும்பு-தலைமன்னார் வரையான மேற்குப்பகுதி கரையோரங்களைப் பாதுகாப்பதற்கு 12,000 இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thanks INL

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com