Thursday, January 29, 2009

சிவிலியன்களை விடுவிக்க: புலிகளுக்கு ஜனாதிபதி 48 மணிநேர காலக்கெடு



வடக்கில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்து வரும் 48 மணி நேரத்தினுள் சிவிலியன்களை சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டுமென ஜனாதிபதி புலிகளிடம் வற்புறுத்திக் கேட்டுள்ளார்.

அதேநேரம், வடக்கிலிருந்து இடரற்ற சூழலை நோக்கிப் பாதுகாப்பாகச் செல்லும் சகல மக்களினதும் சொந்தப் பாதுகாப்புக்கும், உரிமைகளுக்கும் தான் உத்தரவாதம் வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடக்கில் புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் நிலை தொடர்பாக ஜனாதிபதி நேற்றிரவு அறிக்கையொன்றை விடுத்தார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது:- tஎன்னுடைய அரசாங்கம் எப்போதும் நாட்டிலுள்ள மக்கள் அனைவரினதும் நலன்புரி நடவடிக்கைகளிலும், அவர்களது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்ற த்திலும் பெரும் அக்கறையுடனேயே செயற்பட்டு வருகிறது.

விசேடமாக, புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் நலனிலும் எனது அரசாங்கம் பெரும் கரிசணை கொண்டு செயற்படுகிறது. இந்த வகையில், இலங்கையிலுள்ள சகல மக்களும் சமாதானமாக வாழ வேண்டுமென்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

விசேடமாக வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு அவர்களது ஜனநாயக உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம், இலங்கையில் நீண்டகாலம் பின்பற்றப்பட்டுவரும் ஜனநாயகப் பாரம்பரியம் மூலம் அவர்களது அபிலாஷைகளுக்கேற்ப தேர்தல் மூலம் அவர்களுடைய தலைவர்களை சுதந்திரமாகத் தெரிவு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

என்றாலும், வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு பேச்சுவாரத்தை மூலம் தீர்வுகாண எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் புலிகளால் குழப்பியடிக்கப்பட்டன. இலங்கை மக்கள் மீது புலிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். பயங்கரவாதத்தை அகற்றி மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்தனர்.

இந் நடவடிக்கையின் போது அரசாங்கத்தினரும் படையினரும் சிவிலியன்களின் நலன்புரி நடவடிக்கைகளிலும், உயிர்களைப் பாதுகாப்பதிலும் சொத்துக்களை அழிக்காமல் இருப்பதிலும் மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றனர்.

மேலும், ஜனநாயக ரீதியில் மக்கள் ஆணைபெற்ற அரசாங்கம் என்ற வகையில் இலங்கையின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் உறுதியுடன் செயற்படுகிறது. இலங்கை மக்களை ஐக்கியப்படுத்தும் அதேநேரம் சகல பிரச்சினைகளுக்கும் ஜனநாயக வரையறைக்குள்ளேயே தீர்வு காண வேண்டுமென்பதிலும் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

இந்த வகையில் அரசாங்கத்தினதும் மக்களினதும் இலக்கை அடைவதற்கு பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கிறது. வடக்கில் வாழும் மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகள் மூலம் தங்களது தலைவர்களைத் தேர்ந்தெடுத்து வாழ்வதற்கு உரிமை இருக்கிறது.

சகல பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமும் கலந்துரையாடல் மூலமுமே தீர்வு காணப்படும். வன்முறைகள் மூலம் தீர்வுகாண அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்காது.
பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையால் வடக்கில் குறுகிய நிலப்பரப்பினுள் பொது மக்கள் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

பெரும் தொகையான மக்கள் புலிகளால் பலாத்காரமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் அப்பாவி மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
புலிகளால் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கவனத்தில் கொண்ட நாம், யுத்தப் பிரதேசத்தில் பொது மக்கள் பாதுகாப்பு வலயமொன்றை பிரகடனப்படுத்தினோம். இது முழுக்க முழுக்க சிவிலியன்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே ஏற்படுத்தப்பட்டது.

படையினருக்கும், ஆயுதம் ஏந்திய புலிகளுக்குமிடையில் மோதல்கள் ஏற்படுகின்ற போது பொது மக்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.துரதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு வலயத்தினுள் புலிகள் ஆட்லறித் தாக்குதல் நடத்தி வருகின்ற அதேநேரம் அந்தப் பகுதிகளினுள் இருந்து கொண்டு பாதுகாப்புப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், கண்மூடித்தனமான முறையில் சிவிலியன்களைக் கொல்கின்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்து வரும் 48 மணி நேரத்தினுள் சிவிலியன்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டுமென நான் புலிகளிடம் கேட்டுக் கொள்கிறேன். அந்த சிவிலியன்கள் அனைவரும் ஒரு பாதுகாப்பா இடரற்ற சூழலுக்குள் பாதுகாப்பாக செல்வதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

வடக்கில் மோதல் நடைபெறும் பகுதிகளில், (புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில்) வாழும் சகல மக்களினதும் சொந்தப் பாதுகாப்பும் இலங்கையில் வாழும் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் உரிமைகளும் அந்த மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நான் உத்தரவாதம் வழங்குகிறேன். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment