கொழும்பு - வவுனியா ரயில் சேவை நேற்று மீண்டும் ஆரம்பம்
மதவாச்சி வரை நடைபெற்று வந்த யாழ் தேவி ரயில் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் சுமார் 10 மாத இடைவெளிக்கு பின்னர் வவுனியா வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு மதவாச்சி வரை மட்டுமே வடபகுதிக்கான ரயில் சேவை நடத்த அனுமதிக்கப்பட்டது.
நேற்று கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்ட யாழ் தேவி, வவுனியாவிற்கு பகல் 1.15 மணியளவில் வந்தடைந்தது.
ரயில்வே பொது முகாமையாளர் கலாநிதி லலித்த சிறிகுணறுவான் மற்றும் உயர் அதிகாரிகளும் இந்த ரயிலில் வவுனியா வந்தனர்.
ரயில் நிலையத்தில் நடைபெற்ற எளிமையான வைபவத்தில் அதிபர் க. சண்முகம் வரவேற்புரை நிகழ்த்தினார். சர்வ மத தலைவர்கள், வன்னி எம்.பி. சிவநாதன் கிஷோர், புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தலைவர் செ. திரைவீரசிங்கம், மீள்குடியேற்ற அமைச்சரின் இணைப் பாளர் எம். கே. ஆரிப், நகர சபை செயலாளர் ரி. ஜெயராஜ். உட்பட பலர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.
தினமும் இந்த பகல் ரயில் சேவை வவுனியா வரை நடைபெறும். கொழும்பிற்கான இரவு தபால் ரயில் மதவாச்சியிலிருந்து புறப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடபகுதிக்கான யாழ்தேவி யாழ்ப்பாணம் வரை செல்லவேண்டும். அதுவே எங்களுடைய பிராத்தனையென தெரிவித்த ரயில்வே பொது முகாமையாளர், அமைச்சரின் உத்தரவின்பேரில் யாழ்தேவி வவுனியா வரை நீடிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். யாழ்தேவியில் பெருமளவிலானவர்கள் கொழும்பிற்கு பயணமானார்கள்.
நன்றி தினகரன்
0 comments :
Post a Comment