இடம்பெயரும் வன்னி மக்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கரிசனை
வன்னியில் நிலவும் யுத்த சூழல் காரணமாக வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவின் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குத் தப்பி வந்த மக்களின் நலன்கள் தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளார். அதற்கு மேலதிகமாக வன்னிப் பிரதேசத்தினுள் புலிகளின் பிடிக்குள் சிக்குப்பட்டுத் தவிக்கும் மக்கள் தொடர்பிலும் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் விசேட கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக புலிகளின் பிடிக்குள்ளிருந்து தப்பி வந்து வவுனியா செட்டிக்குளம் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களை அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளனர். மேலும் அந்த மக்களுக்கு வழங்கப்படும் வசதிகள், நிவாரணங்களை மேம்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குழு வவுனியா அரச அதிபருடன் கலந்துரையாடியுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் புலிகளின் பிடிக்குள் சிக்குப்பட்டு பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்து செல்ல முடியாது தவிக்கும் மக்களின் நலன் பேணல் தொடர்பாகவும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் வவுனியா அரசாங்க அதிபருக்கு விசேட பணிப்புரை விடுத்துள்ளார். சமீபத்தில் பெய்த அடைமழை காரணமாக குறித்த பிரதேசங்களில் சிக்குண்டிருக்கும் மக்கள் இருப்பிட வசதியற்றுத் தவிப்பது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், அந்த மக்களின் தேவைக்காக மாவட்டத்திற்கு ஒரு இலட்சம் வீதம் கிடுகுகளை அனுப்பி வைக்குமாறு வவுனியா அரச அதிபருக்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். அதன் பிரகாரம் வவுனியா அரச அதிபர் புத்தளம் அரச அதிபரினூடாக தேவையான கிடுகுகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இன்னும் ஒரு சில நாட்களுக்குள்ளாக குறித்த கிடுகுகள் வவுனியா அரச அதிபரினூடாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிப் பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவற்றுக்கு மேலதிகமாக கடந்த வாரம் காலமான ஈரோஸ் அமைப்பின் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரத்தினராஜாவின் மறைவு குறித்த தகவலை தனது ஊடகப்பிரிவின் தமிழ் அதிகாரியான ஆர். எப் . அஷ்ரப் அலீ மூலமாகக் கேள்விப்பட்ட அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் உடனடியாக அன்னாருக்கு தமது அனுதாபத்தைத்; தெரிவிக்கும் வகையில் மலர்வளையமொன்றை அனுப்பி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தகவல்- ஆர்.எப். அஷ்ரப் அலீ
ஜனாதிபதி ஊடகப் பிரிவு (தமிழ்)
0 comments :
Post a Comment