பலவந்தமாக தினமுரசு விற்க முற்ப்பட்டமையே வெள்ளைவான் கடத்தலுக்கு வித்திட்டது:
வவுனியா பிரதேசத்தில் உள்ள ஈபிடிபி அமைப்பின் உறுப்பினர்கள் அவ்வமைப்பின் பத்திரிகையான தினமுரசு பத்திரிகையை வவுனியா பிரதேசங்களில் பலவந்தமாக விற்பனைசெய்துவருவதாக பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் அண்மையில் வவுனியாவில் இடம்பெற்றதாக ஈபிடிபி அமைப்பினால் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ள வெள்ளைவான் கடத்தல் சம்பவம் கூட பலவந்தமாக தினமுரசு பத்திரிகை விற்க முற்பட்டதன் விளைவாகவே இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் பாதுகாப்புடன் செல்லும் ஈபிடிபி யினர் தமது பத்திரிகைகளை விற்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் வவுனியாவில் இருந்து செட்டிக்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்வண்டி ஒன்றினுள் பொலிஸ் பாதுகாப்புடன் ஏறிய ஈபிடிபி யினர் பயணிகளிடம் பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்போது அவர்கள் பஸ்சில் இருந்த ஓர் நபரிடம் தமது பத்திரிகையை வாங்குமாறு அதிகாரதோரணையில் வேண்டிய போது அவர் தன்னிடம் அதற்கான பணவசதி இல்லையாகையால் தான் அதை வாங்கமுடியாது என கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து தமது வியாபாரத்தில் ஈடுபட்ட ஈபிடிபி யினர் அந்நபரது ஆசனத்தில் இருந்து 3 ஆசனங்கள் முன்னால் உட்காந்திருந்த அவரது மகனிடம் பத்திரிகை வாங்குமாறு கேட்டுள்ளனர். பின்னால் உட்காந்திருந்த மேற்படி நபர், தனது மகனிடம் பத்திரிகை வாங்க வேண்டாம் என கூறியுள்ளார். அதை கேட்ட ஈபிடிபியினர் அந்நபரை பஸ்சினுள் போட்டு அடித்து உதைத்து சித்திரவதை செய்து எச்சரித்து விட்டுச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் தனக்கு பஸ்சினுள் ஏற்பட்ட அவமானத்தையும் பாதிப்பையும் வவுனியாவில் உள்ள புளொட் இயக்கத்தினரிடம் கூறியுள்ளார்.
இவ்விடயம் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட முடியாதது என்பதை உணர்ந்த புளொட் இயத்கத்தினர் ஈபிடிபி யினரை தொடர்பு கொண்டு இவ்வாறான பொதுமக்களை பாதிக்கின்ற நாகரிகமற்ற செயல்களில் ஈடுபட வேண்டாமென்று வினயமாக கேட்டிருந்தனர்.
புளொட் இயக்கத்தினரின் அறிவுறுத்தலில் ஆத்திரமடைந்த ஈபிடிபி யினர் இவ்விடயத்தை புளொட் இயக்கத்தினரிடம் கூறிய அந்த நபரது வீடு தேடிச்சென்று அடித்து துன்புறுத்து தாக்கியுள்ளனர்.
அதைதொடர்ந்து தனக்கு நேர்ந்த விடயத்தை அந்நபர் மீண்டும் புளொட் இயக்கத்தினரிடம் சென்று கூறியுள்ளர்.
இதைத்தொடர்ந்து ஈபிடிபி யினரின் வவுனியா பொறுப்பாளரை தொடர்பு கொண்டு புளொட் இயக்கத்தினர் மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஈபிடிபி உறுப்பினர்களுடன் தாம் கலந்தாலோசிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவ்வேண்டுகோளை ஈபிடிபி யினர் நிராகரித்துள்ளனர்.
இந்நிலையில் அந்நபரை தாக்கிய ஈபிடிபி உறுப்பினரை தெருஓரத்தில் சந்தித்த புளொட் அமைப்பினர் அவரை தமது காரியாலயத்திற்கு அழைத்துச் சென்று நடந்த விடயங்களை அவரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் ஈபிடிபியின் வவுனியா பொறுப்பாளரை தொடர்பு கொண்டு தாம் இவ்விடயம் தொடர்பாக தங்கள் முன்னிலையில் சில அறிவுறுத்தல்களை ஈபிடிபி உறுப்பினருக்கு வழங்கி அனுப்பிவைக்க விரும்புகின்றோம். தயவு செய்து எமது காரியாலயத்திற்கு வந்து உங்கள் உறுப்பினரை அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்விடயத்தை சுமுகமாக தீர்த்துக்கொள்ள விரும்பாத ஈபிடிபியினர் வவுனியா பொலிஸ் நிலையம் சென்று புளொட் இயக்கத்தினர் தமது உறுப்பினர் ஒருவரை வெள்ளைவானில் வந்து கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட வவுனியா பொலிசார் புளொட் இயக்கத்தினரை தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பாக வினவியபோது இது ஒரு கடத்தல் சம்பவம் அல்ல என்றும் ஈபிடிபி யினரின் செயற்பாடுகள் தமது இயக்கத்தினரின் நற்பெயருக்கும் அபகீர்த்தி ஏற்படுவதாகவும் அதை நிவர்தி செய்யும் பொருட்டே ஈபிடிபி உறுப்பினரை இங்கு அழைத்து வந்திருப்பதாகவும் கூறியிருந்தனர்.
புளொட் இயக்கத்தினரின் பக்கத்தில் இருக்கக்கூடிய நியாயத்தை உணர்ந்து கொண்ட பொலிசார் ஈபிடிபி யினரை புளொட் இயக்க காரியாலயம் சென்று சுமுகமாக பேசி அங்கு இருக்ககூடிய தமது உறுப்பனரை அழைத்து வருமாறு பணித்துள்ளனர்.
பொலிசாரின் பணிப்பை ஏற்றுக்கொண்டு புளொட் அமைப்பின் காரியாலயம் சென்ற ஈபிடிபி வவுனியா பொறுபாளர் தாம் வவுனியாவில் மேற்கொள்ளும் இவ்வாறான விடயங்களில் தொடர்ந்தும் ஈடுபடமாட்டோம் என உறுதி வழங்கி தமது உறுப்பினரை அழைத்துச் சென்றுள்னர்.
ஆனால் இத்தனை உண்மைச் சம்பவங்களையும் இலேசாக மறைத்த ஈபிடிபி யினர் தமது ஊடக அறிக்கையில் முழுப்பூசனிக்காயை ஒரு கோப்பை சோற்றுக்குள் புதைத்து அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். சாதாரணமாக ஒருவர் தனது சுட்டு விரலை நீட்டும் போது ஏனைய மூன்று விரல்களும் தன்னைப்பார்த்து ஏய் கவனம் என்கின்றது என்பதை ஈபிடிபி யினர் ஏற்க மறுக்கின்றனர்.
0 comments :
Post a Comment