Tuesday, December 23, 2008

தமிழீழ விடுதலைக் கழக தலைவர் திரு. சித்தார்த்தன் அவர்களுடனான நேர்காணல்.


இன்று தமிழ் அரசியல் கட்சிகள் பிளவுபட்டு மேலும் சிறு சிறு கூறுகளாக சென்று கொண்டிருக்கின்ற தருணத்தில் உங்களால் இவ்வாறானதொரு கூட்டணியை எவ்வாறு உருவாக்க முடிந்தது?

எமது ஜனநாயகக் கூட்டணி இன்று உருவாக்கப்பட்டதல்ல. கடந்த மூன்று வருடங்களாக எமது கட்சி, திரு. ஆனந்தசங்கரி தலமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, திரு. சிறிதரன் தலமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நாபா அணி) இணைந்து தொடர்ந்து பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்திருக்கின்றோம். எமது மக்களின் தேவைகளின் நிமிர்த்தம் பல வெளிநாட்டு ராஜதந்திரிகள், அதிகாரிகள் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், அங்குள்ள அரசியல்வாதிகள் என பல தரப்பட்டோரையும் நாம் கூட்டாக சந்தித்து பேசி வந்திருக்கின்றோம். அது மட்டுமல்ல கடந்த தேர்தல்களில் கூட, குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்றத் தேர்தல் மற்றும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் கூட்டாகவே போட்டியிட்டோம். (அங்கு சிறியதொரு வித்தியாசம் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களில் ஈபிடிபி யினர் எம்முடன் இணைந்து போட்டியிட்டிருந்தார்கள். பின்னர் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தல்களில் அவர்கள் எம்மிலிருந்து விலகிக் கொண்டார்கள்)

அவ்வாறு தொடர்ந்து புரிந்துணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் கூட்டாகவே வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்றதனூடகவும் இன்றைய காலத்தின் தேவையான ஓர் கூட்டணியை அரசியல் கட்சியாக பதிவுசெய்துள்ளோம். டிரிஎன்ஏ அதாவது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி இலங்கையில் தேர்தல் திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளதுடன் எமது கட்சியின் சின்னமாக எமக்கு குத்து விளக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் புரிந்துணர்வின் அடிப்படையில் ஒன்றுபட்டு வேலைதிட்டங்களை முன்னெடுத்ததன் பயனாக இக்கூட்டணியை உருவாக்க முடிந்ததென கூறுகின்றீர்கள். இக் கூட்டணி உருவாக்கத்தின் நோக்கம் என்ன? அதன் அடிப்படைக் கொள்கைகள் என்ன?

கூட்டணி உருவாக்கத்தின் நோக்கம் தமிழ் கட்சிகள் பிளவுபட்டு நிற்பதால் தமிழ் மக்களின் குரல் ஒருமித்து ஒலிக்காமல் தனித்தனியாக ஓலிக்கும்போது உருவாக்கூடிய நிலைமைகளை முறியடிப்பதாகும். அரசு மட்டுமல்ல வேறு சக்திகளும் இந்நிலைமைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதை தடுக்கவேண்டும் என்பதும், ஒன்றுபட்டு நாம் குரல் கொடுக்கும்போது அதன் பலம் வலுவாக இருக்கும் என்பதும் ஆகும்.

அடிப்படைகொள்கைகள் என்கின்றபோது நாம் எமது அடிப்படை அரசியல் கொள்கைகளை ஆதரிக்கின்ற கட்சிகளாக இருக்கின்றோம். எங்களைப் பொறுத்தவரை சமஸ்டி அமைப்பின் கீழ் ஒர் நிரந்தரமான தீர்வைக் காணலாம் என நிச்சயமாக நம்புகின்றோம். சமஸ்டி முறையிலான தீர்வே எமது அடிப்படைகொள்கை. அது தவிர அங்கு வேறு பல விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. எமது கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்ற எனைய கட்சிகளும் எம்முடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என எதிர்பார்கின்றோம்.

உங்கள் ஜனநாயகக் கூட்டணி உருவாக்கத்தின் நோக்கம் அதன் தேவை மற்றும் அதன் கொள்கைகளை ஏனைய கட்சிகளுக்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தி அவர்களையும் உங்களுடன் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளீர்களா?

கடந்தகாலங்களில் இது பற்றி பல தடவைகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம். கூட்டாக வேலை செய்யவேண்டியதன் அவசியத்தை எடுத்து கூறியிருக்கின்றோம். இங்கே முக்கியாமான விடயம் யாதெனில் அடிப்படையில் எம்முடன் ஒத்துப்போக வேண்டிய கட்சிகளாக இருக்கவேண்டும். கூட்டணி என்னும் போது அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும். தேர்தலுக்கு மாத்திரம் கூட்டணி அல்லாமல் வேலைத்திட்டங்களிலும் கூட்டணியுடன் ஒத்துழைக்க கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு. ஒரு கட்சி மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதிலே நாம் மிகவும் அவதானமாக உள்ளோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக்கொண்டால் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்திலேயே அக்கூட்டமைப்பு செயற்படுகின்றது. புலிகள் எதைக் கூறுகின்றார்களோ அதை கூறுவதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. ஆகவே அப்படியான ஓர் கூட்டணியாக நாம் இருக்க முடியாது. அங்கத்துவக் கட்சிகள் சமமாக மதிக்கப்படுகின்ற தன்மை, சம அந்தஸ்து பேணப்படல் என்கின்ற காரணங்களுக்காகவே இக்கட்சியை தனியான ஒர் சின்னத்தின் கீழ் பதிவு செய்துள்ளோம். இவ்விடயங்களை மதிக்கக்கூடிய கட்சிகள் இணைய முற்படும் சந்தர்பத்தில் அவர்கள் தமது அடையாளங்களை விட்டுத்கொடாமல் இக்கூட்டணியில் ஓர் அங்கமாக இணைந்து கொள்ள முடியும். அப்போது அவர்களை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு வேலைசெய்யத் தயாரகவே இருக்கின்றோம்.

உங்கள் கூட்டணியில் அங்கத்துவம் பெறும் அரசியல் கட்சிகள் தேர்தல்களில் கூட்டணியில் இருந்து விலகி தனித்து நிற்க முடியுமா?

இது நிச்சயமாக தேர்தல்களை இலக்காகக்கொண்டு உருவாக்கப்பட்டதொரு கூட்டணி அல்ல. கூட்டணியில் இருந்து ஒருகட்சி தம்மை விலத்தி கொள்ள யாப்பில் இடமுண்டு.

கூட்டணியில் அங்கம்வகிக்கும் போது தனித்து தேர்தல்களில் பங்கு பற்ற முடியாது என்கிறீர்களா?

வேலைத்திட்டங்களில் ஒன்றாக நிற்கின்றபோது தேர்தலில் மாத்திரம் தனித்து நிற்பதில் அர்த்தம் இல்லை.

நீங்கள் அங்கம் வகிக்கின்ற கூட்டணியோ அல்லது நீங்கள் தலமை தாங்குகின்ற புளொட் அமைப்போ எதிர்வரும் தேர்தல்களில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணியுடனோ அன்றில் ஐ.தே. கட்சியுடனோ தேர்தல்களில் கூட்டுச்சேர வாய்ப்புண்டா?

நிச்சயமாக இல்லை. எந்தவொரு அடிப்படையிலும் நாம் எந்தவொரு பெரும்பாண்மைக் கட்சிகளுடனும் தேர்தல்களில் கூட்டுச்சேர்ந்து நிற்கப்போவதில்லை. எங்களுடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல் ஒருமித்த எமது பலத்தை நிரூபிக்கவே இக்கூட்டணியை அமைத்துள்ளோம். அதனடிப்படையில் எமது கூட்டணிச் சின்னமான குத்துவிளக்கு சின்னத்தின் கீழேயே இனிவரும் காலங்களில் போட்டியிடுவோம்.

உங்கள் கூட்டணி எதிர்காலத்தில் அரசிற்கோ அன்றில் அரசொன்றை அமைப்பதற்கோ ஒத்துழைப்பு வழங்குமா?

அது இப்போது கூறுவது கடினம். நாங்கள் விதிக்கக்கூடிய நிபந்தனைகளை அரசு எவ்வாறு பரிசீலிக்கப்போகின்றது அல்லது நடைமுறைப்படுத்தப் போகின்றது என்பதிலேயே அவ்விடயம் தங்கியுள்ளது. ஆனால் இன்று இருக்கின்ற சூழ்நிலையில், தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்கும் வரைக்கும், தமிழ் மக்கள் இத்தீவிலே நிம்மதியாக வாழுகின்ற வரைக்கும் அரசதரப்பு ஆசனங்களில் நிச்சயமாக அமரமாட்டோம். இவ்விடயத்தில் எவ்வித சந்தகத்திற்கும் இடமில்லை.

கடந்த சில காலங்களாக ஈபிடிபி அமைப்பு வவுனியாவில் செயற்படுவதாக தெரியவருகின்றது. அவ்வமைப்பு எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைத்து போட்டியிடும் என கருதுகின்றீர்களா? அவ்வாறு அவர்கள் அரசுடன் இணைத்து போட்டியிட்டால் அது உங்களுக்கு பெரும் சவாலாக அமையுமல்லவா? எவ்வாறு சமாளிப்பீர்கள்?

ஈபிடிபி சில காலங்களாக அல்ல ஓர் குறிப்பிடக் கூடிய காலங்களாக அங்கு செயற்பட்டு வருகின்றார்கள். அவர்கள் தனித்து தேர்தல்களில் நிற்கப்போகின்றார்களா? அல்லது எம்முடன் இணைந்து நிற்பார்களா? என்பது எமக்குத்தெரியாது. நிச்சயமாக அவர்கள் எங்களுடன் இணைவார்கள் என எதிர்பார்கின்றோம். ஈபிடிபி அரசுடன் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் பெரும்பாண்மைக்கட்சிகளும் அரசும் வவுனியாவில் போட்டியிடும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி போட்யிடுகின்றபோது கடந்தகாலங்களைப் போன்று சில தமிழர்களும் அக்கட்சியில் போட்டியிடுவார்கள். அதனுடன் ஈபிடிபி யினரும் இணைந்து கொண்டாலும் கூட அது எமக்கு பெரிய சவாலாக இருக்கப்போவதில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் நாடாத்தப்பட இருக்கும் தேர்தல்கள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதுதான் விடயம். நிச்சயமாக ஓர் ஜனநாயக முறையிலான தேர்தல் இடம்பெற்றால் மக்கள் பலத்துடன் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.

உங்கள் கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், உங்கள் கொள்கைகள் அரசாங்கத்திற்கு சார்பானவையெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். இதுபற்றி நீங்கள் என்ன கூறுகின்றீhகள்?

எமக்கு பாராளுமன்ற அங்கத்துவம் இல்லாத காரணத்தால் நாம் தமிழ் மக்கள் மத்தியில் பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்றும் கூறியிருக்கின்றார். இதிலிருந்து இவர் தங்களைத் தவிர எவரும் தமிழ் மக்களைப் பற்றி பேசக்கூடாது எனக் கருதுகின்றார். இதுதான் புலிகளது ஏகப்பிரதிநிதித்துவக் கொள்கை. புலிகள் கொலைகள் மூலம் அதை நிறைவேற்றப் பார்த்தார்கள். அனால் கூட்டமைப்பினர் அதை வேறுவிதமாக கையாளுகின்றார்கள். எம்மைப் பொறத்தவரையில் இவர்கள் புலிகளது அடிவருடிகள். இதை நாம் எதேச்சையாக கூறவில்லை. கடந்த 2007 ஆண்டு மாவீரர் தின உரையில் பிரபாகரன் தம்மை மக்கள் அங்கீகரித்து 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள் என்று கூறியதன் மூலம் கூட்டமைப்பினர் புலிகள் தான் என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கின்றார். தமிழ் கூட்டமைப்பினர் கூறுவது புலிகள் கூறுவதே! அந்த வகையில் இன்று இங்கு நடந்து கொண்டிருக்கின்ற யுத்தமென்பதும் ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் புலிகள் என்பதை நிலைநிறுத்துவதற்கானதுவே. ஆகவே அவர் கூறிய அவ்விடயத்தை பெரிதுபடுத்த வேண்டிய தேவை இல்லை.

மற்றயது எமக்கு பாராளுமன்ற அங்கத்துவம் இல்லை என்பதும் தமிழ் கூட்டமைப்பினர் அவ் அங்கத்துவங்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்பதும் நாம் கூற வேண்டிய தேவை இல்லை. இங்கு தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபட்டிருந்த ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தோர் தேர்தல் ஆணையாளருக்கு வழங்கியிருந்த அறிக்கையில் அங்கு இடம்பெற்றிருந்த மோசடிகளை தெட்டத்தெளிவாக சுட்டிக்காட்டியிருந்ததுடன் அத்தேர்தல் முடிவுகளை நிராகரிக்கும்படியும் பரிந்துரைத்திருந்தனர். அவ்வாறான ஓர் மோசடியை செய்து பாராளுமன்ற அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டு தாங்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூற முடியுமானால், நாம் நேர்மையாகவே அன்றில் இருந்து இன்று வரை மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் ஒருதொகை வாக்குகளை புலிகளின் அச்சுறத்தலையும் மீறிப்பெற்று இருக்கின்றோம் என்றால் அது நாம் அந்த மக்களின் பிரதிநிதிகள் என்பதே அர்த்தம்.

சகல விடுதலைப் போராட்ட இயக்கங்களின் வரலாறுகளையும் எடுத்துப்பார்கின்றபோது அவை இரண்டிற்கு மேற்பட்ட பிரிவுகளாக பிளவு பட்டுள்ளதையும், அதன் முன்னணித் தளபதிகள், போராளிகள் தலைமையுடன் முரண்பட்டு பிரிந்து சென்றும் உள்ளனர். ஆனால் தலைவர் உமாமகேஸ்வரனது மறைவின் பின்பு உங்கள் தலைமையில் இயங்கிவருகின்ற புளொட் இயக்கம் அதற்கு விதிவிலக்காக காணப்படுகின்றது. இவ்விடங்களை நீங்கள் இத்தனை காலமும் எவ்வாறு சமாளித்து வருகின்றீர்கள்?

ஆரம்பத்தில் புளொட் இயக்கத்திலும் பிளவுகள் எற்பட்டுள்ளது. பின்னாட்களிலும் எம்மிடையே கருத்துமுரண்பாடுகள் உருவானதுண்டு. அனால் நாம் அனைவரது ஜனநாயக உரிமைகட்கும் மதிப்பளித்து அவர்களது கருத்துக்களுக்கு முக்கியத்தும் கொடுக்குமுகமாக மத்திய குழுவைக் கூட்டி உடனுக்குடன் பிணக்குகளுக்கு தீர்வு கண்டுவருகின்றோம். அநேகமான பிணக்குகளுக்கான தீர்வுகளை கூட்டு முடிவுகளாக எடுக்கின்ற போது அவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. பெரும்பாலும் முடிவுகளை கூட்டு முடிவுகளாக எடுக்க ஆரம்பித்தாலே பிரச்சினைகள் எழுவதை தவிர்க்கலாம் என நான் கருதுகின்றேன்.

இவ்வாறான பிளவுகளுக்கான காரணம் தலைமைத்துவத்தின் குறைபாடு என்று கூறுவீர்களா? அன்றில் போராளிகள் அல்லது தளபதிகளின் சுயநலம் சார்ந்த முடிவுகள் என்று கூறுவீர்களா?

எமது தமிழ் இயங்கங்களிடையே நிகழ்ந்துள்ள நிகழ்வுகள் இவ்விரண்டு தரங்களையும் சாரும். ஓவ்வொரு கட்டங்களிலும் இருக்ககூடியவர்களின் பதவி ஆசைகள், தாம் ஏன் தொடர்ந்தும் இரண்டாம் கட்டத்தில் இருக்கவேண்டும் முதலாம் கட்டத்திற்கு போனால் என்ன என எழுகின்ற தர்க்கம் என்பனவே பொதுவான காரணிகளாக அமைந்துள்ளது. இதுபற்றி பொதுவான ஓர் கருத்தை கூற முடியாது. ஒவ்வொரு இயக்கங்களும் பிளவுபட ஒவ்வொரு காரணங்கள் இருந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புகளுள் மிகபெருமளவிலான போராளிகளைக் தன்னகத்தே கொண்டிருந்த புளொட் அமைப்பு காலப்போக்கில் அதன் ஆட்பலத்தை இழக்க நேரிட்டதற்கான காரணம் என்ன?

நாம் ஆயுத பலத்தை நாம் உருவாக்கத் தவறியமையே அதற்கான முக்கிய காரணமாக நான் கணித்து வைத்துள்ளேன். இதற்கு தலைமையை மட்டும் குறை கூறிவிட முடியாது. நாம் ஓர் காலகட்டத்தில் மிக ஆட்பலம் பொருந்திய அமைப்பாக காணப்பட்டபோது நாம் இந்தியாவின் கட்டளைக்கு கட்டுப்படமாட்டோம் என இந்தியா எம்மீது சந்தேகப்பட ஆரம்பித்தன் விளைவாக நாம் இந்தியாவை நம்பாத காரணமும் இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஏற்பட்ட விரிசலும் பல பின்னடைவுளைத் தந்திருந்தது. இந்தியா எமக்கு ஆயுத ரீதியாக உதவிபுரிய மறுத்த போது நாம் சுயமாக ஆயுங்களை கொண்டுவர முயற்சித்திருந்தபோது அவ்விடயங்களை இந்தியா கையாண்ட விதம் என்பன பல பிரச்சினைகளைக் கொடுத்திருந்தது. நிச்சியமாக ஓர் ஆயுத அமைப்பிடம் ஆயுதங்கள் இல்லாமல் போகின்றபோது அது பல பின்னடைவுகளை சந்திப்பது தவிர்க்கமுடியாதது.

கொள்கை ரீதியாக நாம் மிகவலுப் பெற்றவர்களாக இருந்த போதிலும் அக்கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அன்று ஆயுதம் என்பது இன்றியமையாததாக இருந்தது. நாம் கொள்கை ரீதியா பலமாக இருக்கின்றோமா என்பதைவிட இராணுவ ரீதியாக பலமாக இருக்கின்றோமா என்பதுதான் அன்றைய மக்களின் கேள்வியாகவும் மனநிலையாகவும் இருந்தது. இராணுவ ரீதியாக பலமாக இருக்கின்ற இயக்கம்தான் விடுதலையைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு அன்றும் இருந்தது இன்றும் இருக்கின்றது. இவ்வாறன காரணங்களே எமது போரட்டம் என்பது முற்று முழதாக வெறும் இராணுவக் கட்டமைப்பாக உருப்பெற்றதற்கும் போராட்டம் திசைதிருப்பட்டதற்கும் ஏதுவாக அமைந்திருந்தன. .

இன்று புலம்பெயர்ந்த நாடுகளிலே முன்னாள் போராளிகள் என்று எடுத்துக்கொள்ளுகின்றபோது புளொட் அமைப்பின் போராளிகளே அங்கு மிகவும் கணிசமாக காணப்படுகின்றனர். ஆனால் அமைப்பினுடனான அவர்களது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவே பேசப்படுகின்றது. இது பற்றி உங்கள் கருத்து என்ன? அவர்களது சேவையை மீண்டும் பெற்றுக்கொள்ள எதிர்காலத்தில் முயற்சிப்பீர்களா?

எண்பதுகளில் புளொட் இயக்கம் இங்கு பலமாக மாபெரும் சக்தியாக இருந்த காலங்களில் நான் லண்டனில் இருந்தேன்; அப்போது புலம்பெயர் தமிழர்களில் 60 சதவீதத்தினர் புளொட் இயக்கத்தையே சார்ந்திருந்தனர். ஏனயை 40 சதவிதத்தினரும் பல்வேறு இயக்கங்களையும் சார்ந்திருந்தனர். நாம் இங்கு ஆயுதரீதியாக பலவீனமடைந்த போது அங்கிருகக்கூடிய போராளிகள் சோர்வடைந்து படிப்படியாக தமது சொந்த விடயங்களில் இறங்க ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் இன்று அந்த நிலைமைகளில் சிறிது மாற்றத்தை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. நாம் அங்கு விஜயம் செய்கின்றபோது, கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கின்ற போது பெரிய அளவில் இல்லாவிட்டாலும் ஒரு சிறிய தொகுதியினர் மீண்டும் வருவதை அவதானிக்கின்றேன். மறுபுறத்தில் இப் பின்னடைவுகள் யாவற்றிற்கும் நிதி நெருக்கடியும் காரணமாக இருந்துள்ளது. இயக்கமொன்றை உள்நாட்டில் மட்டுமல்ல எங்கு செயற்பட வைப்பதானாலும் நிதி என்பது இன்றியமையாதது. அந்த வகையில் நாம் ஆயுத பலமிழந்து இராணுவ ரீதியாக பின்தள்ளப்பட்டபோது எமக்கு மக்களிமிருந்து கிடைத்துவந்த நிதியுதவிகள் இல்லாமல் போனது. இன்று புலிகள் ஆயுதபலத்துடன் இருக்கின்றார்கள் மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ, பயத்திலோ பணத்தை கொடுக்கின்றார்கள் அப்பணத்தில் புலிகளால் உலகெங்கும் அவர்களது செயற்பாடுகளை தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கின்றது.

எமக்கு இன்று எமது மக்களிடமிருந்து எந்தவிதமான அன்பளிப்புகளும் கிடையாதபோதிலும் எமது தோழர்கள் தமது சொந்தப்பணத்திதை செலவு செய்து அங்கு இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதுவே ஓர் பெரிய விடயம் என்பதுடன் அது எமக்கு பலமும்கூட. ஆனால் இங்கு நிலமைகள் மாறும் போது அங்கும் மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அங்கிருக்கின்ற தோழர்கள் அனைவரும் ஒரு கட்டம் வரும்போது புளொட் இயக்கத்திற்கென்றல்லாமல் மக்களுக்காக தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏனென்றால் அவர்கள் அரசியல் ரீதியாக மிகவும் திடமாக வளர்க்ப்பட்ட, வளர்ந்த தோழர்கள். புளொட்டை பொறுத்தவரை அது தனது தோழர்களுக்கு பூரணமான அரசியல் அறிவை வழங்கி இருக்கின்றது. அந்த வகையில் புலம் பெயர்ந்து வாழுகின்ற புளொட் இயக்கத் தோழர்கள் எமது மக்களின் தேவைகள் என்ன என்பதை நன்கு உணர்வார்கள். அவர்கள் சரியான தருணம் வரும் போது எமது மக்களுக்கு செய்யவேண்டிய சேவையை அவர்கள் செய்வார்கள் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் கிடையாது.

இன்று வன்னியில் இடம்பெற்று வருகின்ற போரை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

இராணுவத்தினரின் கை ஓங்கி புலிகள் பலவீனமான நிலையில் உள்ளனர்.
இங்கு மக்களை பாதுகாக்க வேண்டிய தேவை இருதரப்பினருக்கும் உண்டு. ஆனால் மக்களை காக்கவேண்டிய பெரியதொரு கடமைப்பாடு புலிகளுக்கு உண்டு. காரணம் தமிழ் மக்கள் சிங்கள பேரினவாத அரசுகளால் நசுக்கப்படுகின்றபோது அவர்களை நாம் காப்பாற்ற வேண்டுமெனக் கூறியே ஆயுத இயக்கங்கள் உருவாக்கப்பட்டது. பின்னாட்களில் போராட்டம் என்பது புலிகளுக்கே சொந்தமானதெனவும் அவர்களால் மாத்திரமே தமிழ் மக்களுக்கு விடுதலையை வாங்கிக்கொடுக்க முடியுமெனவும் மாற்று இயக்கங்களை புறந்தள்ளி புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்களிடம் இங்குள்ள மக்களின் பெயரால் கோடிக்கணக்கான நிதியுதவிகளை பெற்றுள்ளனர். எனவே புலிகளுக்கு மக்களிடம் வாங்கியுள்ள நிதியின் பெயரால் அம்மக்களை காப்பற்ற வேண்டிய கடமை ஒன்றுள்ளது. அதேதருணத்தில் இவ்விடயத்தில் இராணுவத்தினர் புலிகளுடனான போரில் எறிகணைத் தாக்குதல் மற்றும் ஆகாயவழித் தாக்குதல்களில் ஈடுபடுகின்றபோது மக்களை கவனத்தில் கொள்ளவேண்டும் என பல வழிகளிலும் வேண்டுதல் விடுத்து வருகின்றோம். இருதரப்பினரும் யுத்தம் புரிய விரும்பினால் அவர்கள் யுத்தம் புரியட்டும். அனால் அங்குள்ள மக்கள் காப்பாற்ற படவேண்டும் என்பதே எமது வேண்டுதல்.

ஈராக் யுத்தத்தை எடுத்துப்பார்ப்போமானால் அங்கு 15 லட்சம் மக்கள் போரிலே உயிரிழந்திருக்கின்றார்கள். அதனுடன் ஒப்பிடுகையில் எமது மக்கள் போர் நேரங்களில் உயிரிழந்துள்ளது மிகக் குறைவு. காரணம் எமது மக்கள் இன்றைய போர் நடவடிக்கைகளுக்கு நன்றாக பழக்கப்பட்டு விட்டார்கள். போர் நடக்கின்ற இடங்களை விட்டு உடனடியாக விலத்தி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லப் பழகிக் கொண்டுள்ளார்கள். அது எமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. ஆனால் ஆங்காங்கே அவ்வாறு இடம்பெயருகின்ற போதும்கூட சில தாக்கங்கள் இடம்பெறத்தான் செய்கின்றது. அதில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டால் கூட அதை அனுமதிக்க முடியாது.

அடுத்து வன்னியிலே ஓர் சிறிய பகுதியினுள் 3 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அங்கு தங்குவதற்கு போதுமான கட்டிடவசதிகள் கிடையாது. மக்கள் ஆங்காங்கே எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தொற்றுநோய் அபாயம் இருக்கின்றது. இந்த மக்களை காப்பாற்ற வேண்டிய கடமையொன்றும் எமக்கிருக்கின்றது. இப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் நாமும் ஒர் முக்கிய பங்காளிகள் என்ற வகையில் இந்நிலமைகளுக்கு எதிராக எம்மால் முடியுமானவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அங்கு உணவுத்தட்டுப்பாடு கிடையாது. இந்திய அரசு ஒருதொகை உணவு வகைகளை அனுப்பி வைத்துள்ளது. இந்தியா அனுப்பாவிட்டாலும் இலங்கை அரசும் உணவுப் பொருட்களை அனுப்பிக்கொண்டுதான் இருந்தது.

அடுத்து ஒருதொகை மக்கள் புலிகளின் பிடியிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை படையினர் செட்டிக்குளத்தில் உள்ள மெனிக் பார்ம் பிரதேசத்தில் வைத்து பாராமரித்துக் கொண்டிருக்கின்றார்கள். அங்கு எமது தோழர்கள் தொடர்ந்து சென்று அம்மக்களின் தேவைகளை அறிந்து தமது சக்திக்கு ஏற்றவாறு சில உதவிகளை செய்து வருகின்றார்கள்.

இன்றைய போரில் ஏதாவது ஒருதரப்பு முற்று முழுதாக வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டா?

இப்போது கூறுவது மிகவும் கஸ்டம். ஆனாலும் புலிகள் பலவீனமான ஓர் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைத்தான் நாம் பார்க்கின்றோம்.

உங்களது கெரில்லா போராட்ட அனுபவங்களின் அடிப்படையில், இராணுவத்தினரது கை மேலோங்கும் தருணத்தில் புலிகள் மீண்டும் கெரில்லா போர் முறைக்கு செல்வார்களாயின் அவர்களால் எத்தனை காலங்களுக்கு போர் செய்ய முடியும்?

இதில் 80ம் ஆண்டு காலப்பகுதிகளை வைத்துக்கொண்டு எவ்வித எதிர்வுகூறல்களையும் கூற முடியாது. காரணம் இங்குள்ள மக்கள் அதாவது போர் இடர்பாடுகளினுள் வாழும் மக்கள் (புலம்பெயர்ந்து வாழும் மக்களல்ல) போரை முற்றாக எதிர்க்கின்றார்கள். அந்த வகையில் கெரில்லாப் போர் என்பது மக்கள் மத்தியிலிருந்து எடுத்துச் செல்லப்படவேண்டிய ஒன்றாகும். அதற்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவார்கள் என நான் நம்பவில்லை. இப்போரிலே இலங்கை இராணுவம் முற்றுமுழுதான அனுபவத்தை பெற்றுள்ளமையால் கெரில்லா யுத்தமொன்றை சிறிய அளவில் மேற்கொள்வதானாலும் பெரியளவில் எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும்.

உலகிலே கெரில்லா இயக்கங்களை அழித்த வரலாறு இல்லை என கூறப்படுகின்றது. ஆனால் இலங்கையின் புவியியல் தளமும் இலங்கை இராணுவத்தின் ஆட்பலமும் அதன் நவீன வளர்ச்சியும் கெரில்லா இயக்கமொன்றிற்கு இடம் கொடுக்குமா?

இப்போரிலே புலிகளியக்கம் அழிந்துவிட்டால் அல்லது பலமிழந்துவிட்டால் இலங்கையில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைக்கான தீர்வு கண்டுவிட்டோம் என அரசு கதவுகளை இழுத்து மூடிவிடப்போகின்றார்களா? அன்றேல் தமிழ் மக்களது நியாமான கோரிக்கைகளை நிவர்த்தி செய்யப்போகின்றார்களா என்பதிலேயே மேற்படி விடயம் தங்கியுள்ளது. அரசு தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகட்கு ஓர் பொருத்தமான அதிகாரப் பகிர்வை வழங்கி தமிழ் மக்கள் திருப்தியுடன் தமது விடயங்களை தாங்களே நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய ஓர் நிலைமையை உருவாக்குமேயானால், நிச்சயமாக விடுதலைப் புலிகள் மட்டுமல்ல எந்த ஒரு அமைப்பும் ஆயுதப்போராட்டத்தில் வெற்றியடைய முடியாது.

இன்றைய நிலையில் புலிகளியக்கத்தின் தலைவராக நீங்கள் இருந்தால் எவ்வாறான அணுகு முறைகளை மேற்கொள்வீர்கள்?

முதலாவதாக அவருடைய நிலையில் நான் இருக்க விரும்பவில்லை. அவர் மிகவும் ஓர் கஸ்டமான நிலையில் இருக்கின்றார். காரணம் அவர் ஒர் பெரிய இயக்கத்தை வைத்திருந்து இன்று மிகவும் நலிந்த நிலைக்கு வந்துள்ளார். இந்நிலைக்கு அவரும் அவ்வியக்கமும் இழைத்த பாரிய தவறுகளே காரணம் எனக் கூறுவேன். குறிப்பாக தனது ஏக பிரதிநிதித்துவக் கொள்கையின் நிமித்தம் 1970 களின் பிற்பகுதியில் இருந்தே மாற்று இயக்கங்களுடன் முரண்பட ஆரம்பித்திருந்தார் என்பது யாவரும் அறிந்த விடயம். குறிப்பாக இவரது ஏகப்பிரதிநிதித்துவக் கொள்கையே எமது போராட்டத்தை சிதைத்தது என்பதை தற்போது அனைவரும் உணர்ந்துள்ளனர். அடுத்து அவர் இந்தியாவிற்கு பாரிய தவறிழைத்திருக்கின்றார். அன்று இந்தியாவின் உதவியுடன் எமது மக்களுக்கு ஒர் நியாயமான தீர்வு கிடைக்கப்பெற்றிருந்தது. ஆனால் அதன் பயன் எம்மக்களைச் சென்றடைய விடாது தடுத்து பாரிய படுகுழியில் தள்ளியிருக்கின்றார். எனவே நிச்சயமாக நான் அவரது நிலையில் இருக்க விரும்பவில்லை. ஆனால் நான் அவர் நிலையில் இருந்திருந்தால் நிச்சயமாக தவறுகளை உணர்ந்து என்னை திருத்திக்கொள்ள முற்பட்டிருப்பேன். அடுத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்பேன்.

புலிகளியக்கம் இந்தியாவிற்கு பாரிய தவறிழைத்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் புலிகள் அவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் இல்லாதபோது இன்று தமிழக அரசியல்வாதிகளின் நிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

புலிகள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்திய பிரதமருடைய கொலை விடயம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. இந்திய படையினருடன் இங்கு போரிட்ட விடயத்தை அரசியல் ரீதியாக இந்திய மக்கள் நோக்கினாலும் இந்திய பிரதமருடைய கொலையை அந்நாட்டு மக்கள் மறப்பதற்கு தயாராக இல்லை. தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாகவே செயற்படுகின்றார்கள். குறிப்பாக அங்கு அனைத்துக் கட்சிகளும் கூட்டப்பட்டிருந்தபோது திரு. கருணாநிதி அவர்கள் புலிகளியக்கம் இழைத்த சகல தவறுகளையும் நினைவு கூர்ந்திருந்தது மட்டுமடல்லாது தமிழ் மக்களது இன்றைய இந்த அவல நிலைக்கு பிரபாகரன் மாற்று இயக்கங்ளை அழித்தொழித்ததே காரணம் என வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார். அங்குள்ள சில கட்சிகள் தமது இருப்பை தக்க வைத்துள்கொள்வதற்காக இப்பிரச்சினையை வேறு திசையில் திருப்ப முனைந்தாலும் நாங்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்கின்றோம். தமிழ் மக்களுக்கான இந்தியாவின் குரல் புதிதாக (அதாவது புலிகள் வன்னியில் முடக்கப்பட்ட போதுதான்) ஒலிக்கத்தொடங்கியது அல்ல. அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் என்றுமே உறுதியாக உள்ளனர்.

புலிகளுடன் பேசுவதாயின் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வரவேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. இது சாத்தியப்படுமா?

புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பதற்கு என்றும் தயாரானவர்கள் அல்லர். நேபாளத்தை எடுத்துக்கொள்வோமேயானால் மாவோயிஸ்டுக்கள் தமது ஆயுதங்களை ஐ.நா பாதுகாப்பில் வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்குச் சென்று ஓர் முடிவுக்கு வந்திருக்கின்றார்கள். புலிகள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டார்களா?.. அக்கோரிக்கையை கைவிடாத பட்சத்தில் பேச்சுவார்த்தைக்குச் சென்று பேசமுடியாது, ஆகவே ஆயுதத்தை கைவிடவும் முடியாது. பிரபாகரன் தமிழீழ கோரிக்கையில் மிகவும் பற்றுதியாக இருக்கின்றார் என நான் நிச்சயமாக நம்புகின்றேன், ஆகவே அவர்கள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வருவார்கள் என்பது சாத்தியமற்ற விடயமாகவே தென்படுகின்றது:

மாவோயிஸ்டுக்கள் ஐ.நா சபையின் பாதுகாப்பில் ஆயதங்கைளை வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு சென்றதை உதாரணம் காட்டியிருந்தீர்கள். ஆவ்வாறன ஓர் வழிமுறைக்கு புலிகள் வருவார்களாக இருந்தால் அரசு தரப்பினர் அதை ஏற்றுக்கொள்வார்களா?

இவ்விடயத்தில் என்னால் எதுவும் கூறமுடியாது. XIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com