பிள்ளைகள் படிப்பைத் தொடரும் வரை பெற்றோர் பாசமுடன் இருத்தல் அவசியம்.
அநோகமான பெற்றோர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வரை பிள்ளைகளைக் கையில் பிடித்தவண்ணம் பாசத்தையும், அக்கறையையும் காட்டிக் கற்பிக்கின்றனர். எனினும் அது பட்டப் படிப்புவரை தொடரவேண்டும். அன்றேல் அவர்கள் பாதை தவற வாய்ப்புண்டு.
கனடா- கல்முனை றோஸ்ஷரிடி ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் அன்ரனி றிச்சர்ட் காரைதீவில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மனித அபிவிருத்தித் தாபனம் நடத்திவரும் 09 முன்பள்ளிப் பாடசாலைகளின் பரிசளிப்பு விழா காரைதீவு விபுலானந்தா மணிமண்டபத்தில் ஆசிரியை ரி.ராஜகஜனி தலைமையில் நடைபெற்றது.
பணிப்பாளர் அன்ரனி மேலும் பேசுகையில், தாயின் கருவிலிருந்து பிள்ளை கல்வி கற்க ஆரம்பிக்கின்றது. தாய்பெறும் அத்தனை அனுபவங்களும் கருவிலிருக்கும் சிசுவுக்கும் பதிய வாய்ப்புண்டு. பிள்ளை பிறந்தவுடன் அம்மா என அழைப்பதற்கு எந்தப் பாடசாலையில் படித்தது?
எனவே, பிள்ளையின் வளர்ப்பு பெற்றோரிலே பெரிதும் தங்கியுள்ளது. முன்பள்ளிப் பாடசாலை ஆசிரியர்கள் அவர்களது சிறுவர்களுடன் படும்பாட்டை நானறிவேன். உண்மையில் அர்ப்பணிப்புடன் கூடிய இவர்களது சேவையை சமூகம் பாராட்டவேண்டும்.
இங்கு அரங்கேறிய அத்தனை நிகழ்வுகளும் மெச்சும்படியாக இருந்தன. நல்ல முன்னேற்றம் தென்படுகிறது. தாபன பணிப்பாளருக்கும் ஆலோசகரு க்கும் ஆசிரிய குழாத்தினருக்கும் நன்றிகள்.
குழந்தைகள் கற்கும்போதே ஒன்றாகக் கற்கும் வாய்ப்பு வழங்கவேண்டும். அன்று சிவானந்தா, வந்தாறு மூலை போன்ற பாடசாலைகளில் நாம் ஒன்றாகவே கற்றோம். இன்று இனத்துக்கென பாடசாலைகள், இனத்துக்கென வலயங்கள், ஆஸ்பத்திரிகள், பிரதேசங்கள் எனப் பிரித்துக்கொண்டே போகிறார்கள்.
அன்றிருந்த ஒற்றுமை இன்று இல்லாமல் போனதற்கு இவையும் காரணங்களே.
அன்று காட்டிய அன்பு, பாசம், கருணை இன்றில்லாமல் போனதேன்? வாழ்க்கை முறைமை மாறியுள்ளதா? மாற்றிவிட்டோமா? இப்பிராந்தியத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களை ஒன்றிணைத்து நலன்பேணும் அமைப்பை ஏற்படுத்த வலயக் கல்விப் பணிப்பாளரிடம் அனுமதியைப் பெற்றுள்ளேன்.
இம்மாணவர்களை எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக மாற்றுவதில் பெற்றோர்களுக்கு முக்கிய பங்குண்டு. ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோராக விளங்குகின்றனர். எனவே ஆசிரியருக்கும் முக்கிய பொறுப்புண்டு என்றார்.
விழாவில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.சக்காப் (கல்முனை), சிரேஷ்ட ஆசிரியைகளான திருமதி ப. தாமோதரம், திருமதி வி.புவனராஜா மற்றும் தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் உதவி இணைப்பாளர் எம்.ஐ.றியாழ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
நன்றி தினகரன்
0 comments :
Post a Comment