வன்னி மக்களுக்கு 28 லொறிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்.
அதிமேதகு ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசங்களில் சிக்குண்டிருக்கும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 28 லொறிகள் இன்று வவுனியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் இடைவிடாத அடைமழையின் மத்தியிலும் மேதகு ஜனாதிபதியின் தீவிர கரிசனை காரணமாக வன்னிப் பகுதி மக்களுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி அனுப்பி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசங்களிலிருந்து தமது அத்தியாவசியத் தேவைகளின் நிமித்தம் வவுனியாவுக்கு வந்து கடந்த சில நாட்களாக வன்னிக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் வவுனியாவில் தங்கியிருந்த சுமார் 200 வரையான பொதுமக்கள் இன்று வவுனியாவிலிருந்து பஸ்களில் ஓமந்தை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் பணிப்புரைக்கு அமைய வவுனியா டிப்போவைச் சேர்ந்த பஸ் வண்டிகள் அதற்கென பயன்படுத்தப்பட்டன. அந்த மக்கள் அனைவருக்கும் வவுனியா தொடக்கம் சன்னாசி பரந்தன் வரையான போக்குவரத்து மற்றும் வழி;ப் பாதுகாப்பு என்பன இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் வன்னியில் இடம் பெயர்ந்து தங்கியுள்ள மக்கள் தற்காலிக கொட்டகைகளை அமைத்துக் கொள்வதற்கென அதிமேதகு ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில், சுமார் ஐம்பதாயிரம் தென்னம் கிடுகுகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வவுனியாவிலிருந்து மூன்று லொறிகள் மூலமாக அவை வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக இன்னும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கிடுகுகளை வன்னிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றிற்கு மேலதிகமாக வவுனியா - கொழும்பு புகையிரத சேவையை தடையின்றி நடத்துவதற்கும், அது தொடர்பில் போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தகவல்- ஆர்.எப். அஷ்ரப் அலீ
ஜனாதிபதி ஊடகப் பிரிவு (தமிழ்)
0 comments :
Post a Comment