Sunday, November 2, 2008

தமிழ் ஈழ விடுதலை இயக்க (Telo) போராளிகளுக்கான அறிவித்தல்.



தூயசிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் ஒருங்கேயமைந்த, மாட்சிமை கொண்ட மக்கள் தலைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு ஈழ விடுதலைப்போரில் ஏற்பட்ட வேள்வித்தீயில் தங்களைப் பலிக்கடாக்களாக்கி தழிழினம் விழிதிறக்க வழிதிறந்து கொடுத்து அகிலத்தையே தன்பால் அண்ணாந்து பார்க்கவைத்து துர்அதிர்ஷ்டவசமான துயரங்களோடு ஐரோப்பிய அவுஸ்ரேலிய அலைகளில் அங்கங்கு ஒதுங்கியும், கனேடிய மண்ணில் கால்பதித்தும், ஒருவித மனஇறுக்கத்தோடு மௌனமே துணையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்க (Telo) போராளிகளே! ஆதரவாளர்களே! இது உங்களுக்கான உரிமை மடல்.

எங்கள் உள்ளம் நிறைந்த உறவுகளே!

ஈழப்போராட்டத்தில் நீங்கள் ஏற்படுத்திய புரட்சியின் தாக்கங்கள், இன்றும் எம்மை தாங்கிக்கொண்டும், பல தாக்கங்களையும் ஏற்படுத்திக் கொண்டும்தான் இருக்கின்றன. எங்கள்தேசத்தில் உங்கள் வெற்றிடங்கள் கூட இன்னும் வெற்றிடங்களாகவே வெறிச்சோடிக்கிடக்கின்றன. இவையாவும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மைகள். இந்த உண்மைகளோடு தேசத்தின் நலனுக்காய் ஆறாத மனக்காயங்களோடு அங்கங்கு அமைதி காத்து வரும் உங்கள் செவிப்பறைகளிலே எங்கள் தேசத்தில் இருந்து வரும் எங்கள் மக்களின் ஈனக்குரல்கள் எதிரொலிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஈழத்திலேயே அதிகளவு அநாதை இல்லங்களையும், கருணை இல்லங்களையும் தன்னகத்தே அமைத்து, வடகிழக்கில் ஆதரவற்ற, பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு ஆதரவுக்கரம் கொடுத்தும் கருணைகாட்டியும் சகல வசதிகளோடு கூடிய கல்வியைக் கொடுத்தும் வளர்த்தெடுத்து, அவர்களுக்கு எதிர்கால வாழ்வையும் அமைத்துக் கொடுத்து, மகிழ்ந்து கொண்டிருந்த அந்த கிளிநொச்சி மக்கள் அடங்கிய வன்னிமக்கள், இன்று ஆதரிப்போர் யாருமின்றி அநாதைகளாக நிற்கின்றனர்.

1977 - 1983 இன வன்முறையின்போது தென்னிலங்கையில் இருந்து அகதிகளாக அடித்துத் துரத்தப்பட்ட தமிழர்களில் அதிகளவான தமிழர்களை அரவணைத்து, அவர்களுக்கு உணவு, உடை கொடுத்ததோடு, காடுகளை அழித்து, அதில் புதிய ஊர்களை அமைத்து, வீடுகள் கட்டி, அவர்களுக்கே கொடுத்து, அவர்களையும் சுதந்திரமாய் வாழவைத்தவர்கள் அந்த கிளிநொச்சி மக்கள். 1983ம் ஆண்டு இனவன்முறையின்போது கிளிநொச்சி மக்களோடு மக்களாய் நின்று நாமும்தானே இந்த மக்களுக்கு தோள் கொடுத்தோம் (Telo) தோழர்களே!

அகதியாய் வந்த எல்லோருக்கும் அள்ளிக்கொடுத்து அரவணைத்த அந்த கிளிநொச்சி மக்கள் உட்பட மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், இப்படி பெரும்பான்மையான வன்னிமக்கள் இன்று அநாதைகளாக, அகதிகளாக நிற்கின்றனர். மத்தளத்தின் நிலையில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர். இவர்களுக்கு நாம் என்ன செய்யப்போகின்றோம்? அல்லது என்ன செய்யவேண்டும்? "தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும்." என்ற வேத வாக்கியத்திற்கமைய, தோழர்களே உரிமையோடு உங்கள் மனக்கதவைத் தட்டுகின்றோம். பதில் தரவேண்டியவர்கள் நீங்கள். இப்படி இன்னும் சில விடையங்களையும் ஒன்றுகூடி முடிவெடுக்க ஒரு ஒன்றுகூடலை நடாத்த தமிழ் ஈழ விடுதலை இயக்க (Telo) தோழர்கள் நாம் உத்தேசித்துள்ளோம். அந்த ஒன்றுகூடலுக்கு (Telo) தோழர்கள் ஒவ்வொருவரையும் உரிமையோடு அழைக்கின்றோம். பெருமையோடு வாருங்கள்! உங்கள் ஒவ்வொருவரின் வரவும் எங்களுக்கும், அந்த மக்களுக்கும் பெரும் வரமாக அமையும். உங்களின் வரவுக்காய் காத்திருக்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:

ஜேர்மனி: திரு. ஜெயம்: 0049 (0)152 254 538 56
திரு. நாதன்: 0049 (0)152 036 926 62
திரு. ரஞ்சன்: 0049 (0)173 198 072 9

கனடா: திரு. செட்டி: 00141 688 879 76
திரு. அலெக்ஸ்: 00141 685 737 82
திரு. கமல்: 00141 660 613 21
திரு. ஜோச்: 00141 673 265 55
திரு. நித்தி: 00141 685 491 99

பிரான்ஸ்: திரு.செந்தூரன்: 0033 627 529 312

சுவிஸ்: திரு. ஜோன்: 0041 (0)79 855 50 06
திரு. வெற்றி: 0041 (0)76 717 8949


நீதியின் சிந்தனைகள்


மனிதன் தன்னிலை உணரத்தவறுவதாலேயே வாழ்க்கைப்பாதையில் போராட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

தேசபிதா தங்கத்துரை




வாழ்க்கையை நான் விரும்புகின்றேன். என்னிடம் நல்ல நோக்கங்களும் தூய இதயமும் இருக்கும்வரை.

தளபதி குட்டிமணி

ஆயுதத்தை கையில் எடுப்பது மிக இலகுவான செயல். திரும்பக் கீழே வைப்பது மிக சிரமமான செயல்.

தலைவர் சு. சபாரத்தினம்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com