இத்தாலியில் புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இதற்கென இத்தாலிய அரசாங்க உளவுப்பிரிவினருடனும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இத்தாலிய அரசாங்கமும், அந்நாட்டுப் பொலிஸாரும், பங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகளை இத்தாலியில் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு முழுமையாக நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
சுமார் ஒரு இலட்சம் இலங்கையர்கள் இத்தாலியில் தொழில் புரிந்துவருகின்றனர். இலங்கைக்கு அதிகளவு அந்நியச் செலாவணி கிடைக்கப்பெறும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இத்தாலியே விளங்குகின்றது. இத்தாலியில் வாழும் இலங்கையர் தாயகத்தில் புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகளை ஒழித்துக் கட்டுமாறு கோரி மறியல் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment