கிழக்கு மாகாணசபையில் இரண்டாவது நாளாக தொடரும் வரவு-செலவுத்திட்ட விவாதம்.
கிழக்கு மாகாண சபையினது 2009ம் ஆண்டுக்கான வருடாந்த நிதிக்கூற்று தொடர்பான விவாதம் நேற்று(19.11.08) இரண்டாம் நாளாக தொடர்ந்தது. காலை 9.30.மணிக்கு அமைச்சுக்கள் திணைக்களங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் அது சார்ந்த விவாதங்களும் ஆரம்பித்தது. இதனடிப்hடையில் ஆளுனர் அலுவலகம், மாகாணபொதுச்சேவை ஆணைக்குழு, மாகாணசபை பேரவைச்செயலகம் தொடர்பான விடயங்கள் விவாதங்களுக்காக எடுக்கப்பட்டது. விவாதத்தினை ஆரம்பித்து பேசிய எதிர்கட்சி உறுப்பினர் அமீர்தீன் எதிர்க் கட்சித் தலைவருக்குரிய அலுவலகம் மற்றும் நிருவாக வசதிவாய்ப்புக்கள் மாகாண சபை கட்டடத்தில் இதுவரை உருவாக்கப்படவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
அவரைத்தொடர்ந்து பேசிய அம்பாறைமாவட்ட ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் புஸ்பராஜா , ஆளுனருது அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பல விடயங்களில் ஆளுனருடைய தலையீடுகள் எல்லை கடந்து வருவதாகவும் இதனையிட்டு கருசனை கொள்ளாதவிடத்து மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரங்கள் கேலிக்கூத்தாகி விடும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அம்பாறை மாவட்ட எதிர் கட்சி உறுப்பினர் கல்முனை மாநகர சபை பற்றி எழுந்திருக்கின்ற ஊழல் விவகாரங்களை அம்பலப்படுத்தினார். கல்முனை மாநகர சபை விவகாரம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, கிண்ணியா நகர சபை பற்றி எதிர் கட்சி உறுப்பினர் மஃறூப் அவர்களும், அட்டாளைச்சேனை உள்ளுராட்சி சபை பற்றி அமைச்சர் உதுமாலெவ்வை அர்களும் அங்கு நிகழும் பல நிருவாக சீர்கேடுகள் பற்றியும் எடுத்துரைத்தார்கள்.
E.P.R.L.F உறுப்பினர் துரைரெட்ணம் விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில், அண்மையில் மாகாண சபை உறுப்பினர் கிருஸ்ணானந்தராஜர(பிரதீப் மாஸ்டர்)உடைய அரசியல் அலுவலகமான மீனகம் தாக்கப்பட்டது தொடர்பில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என கேள்வி எழுப்பினார். அதே போன்று இராணுவத்தினராலும் பொலிசாரினாலும் கைது செய்யப்படுகின்ற இளைஞர்கள் கொலைசெய்யப்படுவதும், மற்றும் கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றுகின்ற சிங்கள வைத்தியர்கள் கொலைசெய்யப்படுகின்ற நிலையிலும் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு குறித்து பலத்த கேள்வி எழுகின்றது இந்நிலையிலிருந்துதான் பொலிஸ் அதிகாரங்கள் அனைத்தையும் மாகாணசசை கையேற்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளின் அவசியங்களை நாம் புரிந்த கொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார்.
மேலும் இவ்விவாதங்களில் மாகாணசபை உறுப்பினர்களான மாசிலாமணி., பரசுராமன், கிருஸ்ணானந்தராஜா, ஹஸன்மௌலவி, ஜவாஹிர்ஸாலிஹ் போன்றோர் உரையாற்றினார்கள். விவாதங்களில் கலந்த கொண்டு உரையாற்றிய ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் ரி.எம்.வி.பி.கட்சியின் தலைவரும் முதல்வரின் பிரத்தியேக செயலாளருமான ரகுவின் படுகொலைக்கு தங்களின் கண்டனங்களும் அனுதாபங்களும் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment