Tuesday, November 25, 2008
நான்கு கோரிக்கைகளை நிறைவேற்றாவிடின் அத்தியாவசிய சேவையிலிருந்தும் வெளியேறுவோம்.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு
வடக்குக் கிழக்கில் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பணிபுரியும்; அரசாங்க வைத்தியர்களுக்கு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கல் உட்பட நான்கு கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். நான்கு கோரிக்கைகளையும் அரசாங்கம் நிறைவேற்றுவது குறித்து எழுத்து மூல உறுதி மொழி வழங்காவிடின் அத்தியாவசிய சேவைகளிலிருந்தும் வெளியேறுவோம் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு சிங்கள வைத்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று திங்கட்கிழமை நடத்தியது. இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே சங்கத்தின் உப செயலாளர் டாக்டர் உபுல் குணசேகர இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அவசர வைத்திய சிகிச்சைகள் மட்டும் நடைபெறுகின்றன. அச்சம் காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் வைத்தியர்கள் கொழும்புக்கு வந்துள்ளனர். இவர்களுடன் வடபகுதி வைதியர்களும் அடங்குகின்றினர்.
தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் என இனப்பாகுபாடுகளைக் கவனித்தோ அல்லது எந்தெந்த அமைப்புகள் என அறிந்து கொண்டோ நாம் சிகிச்சையளிக்கவில்லை. அனைவருக்கும் வைத்தியம் செய்தோம். டாக்டர்கள் தலையில் துப்பாக்கி வைத்து சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளார்கள். அப்போதெல்லாம் வடக்குக் கிழக்கு டாக்டர்கள் தென்பகுதிக்குப் போக வேண்டுமென்று கோரவில்லை. ஆனால், டாக்டர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். எனவே தமது தொழிலை மேற்கொள்ள முடியாத டாக்டர்கள் அச்சமடைந்துள்ளர். இதனாலேயே கொழும்புக்கு பாதுகாப்பைத் தேடி வந்துள்ளனர். எனவே அரச வைத்திய அதிகார சங்கத்தின் மத்திய சபை கூடி ஆராய்ந்து கீழ் கண்ட தீர்மானங்களை எடுத்துள்ளது.
1. டாக்டர்களுக்கு விசேட அதிரடிப் படையின் பாதுகாப்பு வளங்கப்பட வேண்டும்.
2. டாக்டர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பில் குழுவொன்று அமைத்து அதில் எமது சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியும் சுகாதார அமைச்சின் இயக்குனர் ஒருவர் நிரந்தரமான இணைப்பாளராகவும் நியமிக்கப்பட வேண்டும்.
3. இணைப்பாளர் நிரந்தரமாக வடகிழக்கில் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
4. இணைப்பாளராக நியமிக்கப்படும் இயக்குனர் ஊடாகவே டாக்டர்கள் தொடர்பான அனைத்து செயற்பாடுகளும் தீமானிக்கப்பட வேண்டும்.
நிலைமை சீரடையும் வரை கல்முனை, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா போன்ற முதன்மை வைத்தியசாலைகளில் மட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஏனைய தள வைத்தியசாலைகளில் சேவைகளில் ஈடுபடப் போவதில்லையென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பாக சுகாதார அமைச்சு எழுத்து மூலமான உறுதியை வழங்கி நடைமுறைப்படுத்தத் தவறினால் கடுமையான தொழிற் சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உயிரடன் இருக்கம் போது டாக்டர்களை விமர்சிக்கும் சுகாதார அமைச்சர் அவர்கள் இறந்த பின்னரும் விமர்சிக்கின்றார். அச்சுறுத்தலான பிரதேசங்களில் தொழில் புரியும் டாக்டர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுளளன. மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை.
வடக்கிலிருந்து டாக்டர்கள் திரும்பி வருவதற்கான விமான டிக்கட்டுக்களும் வழங்கப்படாமல் டாக்டர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்படும் டாக்டர்களின் குடும்பங்களுக்கு எந்த விதமான கொடுப்பனவுகளும் கொடுக்கப்படுவதில்லை அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. இவ்வாறான கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பாக தயாரிக்கப்பட்ட யோசனைகள் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படாது அமைச்சின் சட்டசபையில் வைத்துள்ளார்.
அத்தோடு வைத்தியர்களுக்கான காப்புறுதி 10 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பில் டாக்டர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளில் ஆயுதக்குழுக்களே பின்னணியில் இருக்கின்றன. இதனால் அப்பாவிப் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment