Monday, November 3, 2008

அரசாங்க வங்கி ஊழியர்களுக்கு ஜனவரி முதல் மீண்டும் ஓய்வூதியம் - ஜனாதிபதி.

அரசாங்க வங்கிகளின் ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கான முடிவை அரசாங்கம் எடுத்திருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரச வங்கிகளின் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் வங்கித்துறை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போதே அரசாங்கத்தின் மேற்படி முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கமைய ஜனவரிமாதம் முதலாம் திகதி முதல் அரசாங்க வங்கிகளில் ஓய்வூதியநிதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்திதியத்தில் பத்து வருடங்கள் வேலை செய்த வங்கித் துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெறத் தகுதி பெறுகின்றனர்.

மேலும் தொழிற் சங்கங்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கித் துறை ஊழியர்கள் ஓய்வூதிய விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக அரச வங்கிகளின் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை இவ்வருடத்தின் (2008) முற்பகுதியில் நியமித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி குழுவின் சிபாரிசுகளுக்கு அமைய அரசாங்க வங்கி ஊழியர்களுக்கு மீண்டும் ஜனவரி முதல் ஓய்வூதியம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

No comments:

Post a Comment